நாட்டில் இதுவரை காலமும் வென்றெடுக்க முடியாத தேசிய ஒற்றுமையை இனிமேலும் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
மூவின மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து பலமான ஆட்சியை கட்டியெழுப்ப தயாராக உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு, வளமான பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாக பாதுகாத்து நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்க நாம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய கொள்கைப் பிரகடன மாநாடு நேற்று கொழும்பில் சுகந்ததாச விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்
நாடு விடுதலை அடைந்துவுடன் இந்த நாட்டில் அரசியல் ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் பல தலைவர்கள் ஆட்சி செய்துள்ளனர். பலரது கொள்கைகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 67ஆண்டுகளில் இந்த நாடு சரியான பாதையில் பயணிக்கவில்லை. தற்காலிக மாற்றங்களாகவே அமைந்தது. இப்போதும் அந்த நிலைமை தான் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்களால் கடந்த 67 ஆண்டுகளாக ஆட்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, தலைவர்களை மாற்றியுள்ளனர், ஆனால் இவை அனைத்திலும் இந்த நாட்டுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.
இந்த நாட்டின் பொருளாதாராம் இன்றுவரை மிகவும் கீழ்மட்டத்தில் தான் உள்ளது. இப்போதைய நிலையில் இந்த நாடு 7 இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய்கள் கடனில் உள்ளது. 3 லட்சத்து 5௦ ஆயிரம் ரூபாய் ஒரு நபரின் தனியார் கடனாக உள்ளது. ஆகவே ஆண்டின் வருமானத்தை விடவும் ஆண்டின் செலுத்த வேண்டிய கடன் தான் அதிகமாக உள்ளது. நாட்டில் 2௦ வீதமான மக்கள் மட்டுமே சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். ஏனைய அனைவரும் மிகவும் கடினமான வாக்கையினையே வாழ்கின்றனர். நாட்டில் 40 வீதமான மக்கள் நாளாந்த வருமானமாக 25௦ ரூபாய்க்கும் குறைவான வருமானத்தை பெறுகின்றனர்.
இலங்கையில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் உயிர் இழக்கின்றனர். உலகின் நாம் நான்காவது இடத்தில் உள்ளோம். சிறுநீரக நோயினால் மட்டும் ஒரு நாளைக்கு 6 பேர் உயிர் இழக்கின்றனர், மாரடைப்பினால் ஒரு நாளைக்கு 1௦8 பேர் உயிர் இழக்கின்றனர். புற்றுநோயினால் ஒரு நளைக்கு 12 பேர் உயிர் இழக்கின்றனர். வாகன விபத்துகளினால் ஒரு நாளைக்கு 8 பேர் உயிர் இழக்கின்றனர். இவற்றை குறைக்க முடியாதுள்ளது.
அந்த அளவுக்கு நாட்டின் பாதுகாப்பு மற்றும் வேலைத்திட்டங்கள் உள்ளன. நாட்டில் மனச்சாட்சி உள்ள குடிமகனாக இவற்றை மாற்றியமைக்க நாம் முன்வர வேண்டும். அந்தக் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. ஆகவே மனசாட்சியுடன் செயற்படும் ஒவ்வொரு நபருடனும் கைகோர்த்து செயற்பட மக்கள் விடுதலை முன்னணி தயாராக உள்ளது. இந்த நாட்டில் மக்கள் சுகாதாரமாக வாழக்கூடிய நிலைமை இல்லையென்றால், கல்வியறிவு இல்லையென்றால், பாதுகாப்பு இல்லையென்றால், மனித உரிமைகள் மற்றும் சிறந்த பொருளாதார நடவடிக்கைகள் இல்லையென்றால் அந்த நாட்டில் ஏன் மக்கள் வாழ வேண்டும். நாட்டில் ஜனநாயகம், ஒற்றுமை உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் எதற்காக அந்த நாட்டுக்கு ஒரு அரசாங்கம். ஆகவே இவை அனைத்தையும் மாற்றியமைத்து நாட்டில் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் ஆட்சியை அமைக்க நாம் முன்வரத் தயாராக உள்ளோம்.
பொருளாதார மற்றும் கல்வி
இந்த நாட்டை முன்னெடுத்து செல்லவேண்டுமெனின் பலமான பொருளாதார மற்றும் கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். சர்வதேச பொருளாதாரத்துடன் நாம் இணைந்து செயற்பட வேண்டும். எமது பொருளாதார செயற்பாடுகள் உள்நாட்டு வளர்ச்சியில் மட்டுமில்லாது சர்வதேச வியாபாரத்தையும் தக்கவைக்கும் வகையில் அமைய வேண்டும். ஆனால் எமது நாட்டின் செயற்பாடுகள் அவ்வாறு இல்லை. இலங்கைக்கு என்று ஒரு உற்பத்தி இல்லை. ஆகவே பொருளாதார முறையில் நாம் முழுமையான மாற்றம் ஒன்றை செய்யவேண்டும். அதேபோல் இலங்கைளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து கொண்டு செல்கின்றது. சாதாரண தர மாணவர்கள் முதல் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கான அனைத்து உதவிகளையும் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கும்.
தேசிய பாதுகாப்பு
அதேபோல் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எமது தலைவர்கள் பேசுகின்றனர். ஒரு இனத்தை அடிமைப்படுத்தி ஒரு இனத்தின் சுயநலத்தை மட்டும் பலபடுத்துவது அல்ல தேசிய பாதுகாப்பு. தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முன்னர் தேசிய ஒற்றுமையை பலப்படுத்தவேண்டும். நாட்டில் வாழும் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்து அதன் மூலம் ஒரு தேசிய பாதுகாப்பை உருவாக்க வேண்டும். ஆகவே இலங்கையில் எந்த இனத்தவருக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் பலமான தேசிய பாதுகாப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்க தயாராக உள்ளோம்.
தேசிய ஒற்றுமை
இந்த நாட்டில் கடந்த காலங்களில் பிரதான இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சியை நடத்தியும் இந்த நாட்டின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்த முடியவில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க முடியவில்லை.இந்த நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் எவரும் வேறு எந்த நாட்டில் இருந்தும் இலங்கைக்கு வரவில்லை. இவர்கள் அனைவரும் இலங்கையின் குடிமக்கள். அவ்வாறான மக்களின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்துவதை விடுத்து இனவாதத்தை முன்வைத்தால் இந்த நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது.
மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி தேசிய ஒற்றுமையில் பெரிய விரிசலை இவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். எனவே சகல மக்களின் மத உரிமைகளை, இன உரிமைகள் அனைத்தையும் சம உரிமைகளாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே நாட்டில் தேசிய ஒற்றுமையை பலப்படுத்த முடியும். இன்று தேசிய ஒற்றுமை பற்றி பேசுகின்றனர், சமவுரிமை பற்றி பேசுகின்றனர், ஆனால் இத்தனை காலமாக ஏன் அவற்றை செய்ய முடியாமலோ போய்விட்டது. ஆகவே இன்று இவர்களின் வாயில் இருந்து வரும் வாக்கியங்கள் அனைத்தும் பொய் வாக்கியங்களே. மீண்டும் ஆட்சியை கைபற்றி அதிகாரத்தை தக்கவைக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். எனவே மக்கள் விடுதலை முன்னணி தேசிய ஒற்றுமையை பலப்படுத்தும் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.
சுகாதாரம்
நாட்டின் சுகாதார நிலைமைகள் நாளுக்கு நாள் சீரழிந்து வருகின்றது. நாட்டில் நோய்கள் விதவிதமாக பரவ ஆரம்பித்துள்ளன. இலங்கையில் ஒரு காலத்தில் உணவுகளில் எவ்வித கலப்படமும் இல்லாது ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இன்று சிறுவர்களின் உணவு முதற்கொண்டு அனைத்து உணவுகளிலும் கலப்படம் ஏற்பட்டுள்ளது. நாம் இவற்றை மாற்றியமைக்க வேண்டும். ஆகவே சுகாதார சேவைகளை பலப்படுத்தி ஆரோக்கியமான நாடாக இலங்கையை மாற்றியமைக்க மக்கள் விடுதலை முன்னணி தயாராக உள்ளது.
விடுதலை
இந்த நாட்டில் விடுதலை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். ஊடக சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டும். கருத்து சுதந்தரம் அடிப்படை உரிமைகள் இல்லாவிட்டால் எவ்வாறு நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும். ஜனநாயகத்தையும் மக்களின் கருத்துகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்த விடுவதன் மூலமே இந்த நாட்டின் பாதுகாப்பையும் ஒற்றுமையையும் பலப்படுத்த முடியும். ஆகவே மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தில் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்கள் விரும்பும் அனைத்தையும் வென்று கொடுக்கும் என்ற உறுதிப்படுத்துகின்றோம் எனக் குறிப்பிட்டார்


0 Comments