Subscribe Us

header ads

இங்கிலாந்தில் போர் சூழலுக்கு முந்தைய காலகட்டங்களில் நிகழும் இக்கதை பல வித அரசியல் கூறுகளோடும், தனிமனித நேர்மை, விஸ்வாசம், கடமையுணர்ச்சி எடுத்துக்காட்டுகின்றது


-Safwan Basheer-


அன்றாட அலுவல்கள் நெறிக்கும் அவசரச் சூழல்களில் உழன்றுக் கொண்டிருக்கும் பலருக்கும் எதிர்கொள்ள வேண்டிய பணிகளில் மட்டுமே கவனமிருக்க கடந்தவைகள் கடந்தவையாகவே நிலைத்துவிடலாம். ஓடிக்கடக்கும் காலங்களில் தற்செயலாக சில தினங்கள் சிறு அவகாசம் கிடைத்தால் தன் வாழ்நாளில் காலம் ஆசிர்வதித்த அல்லது நிராகரித்த பல கணங்கள் நினைவிலிருந்து துளிர்க்கும். அத்தகைய நினைவுகளில் மூழ்கி புதிய பரிமாணங்களோடு தொடரும் நினைவோட்டத்தில் எல்லாவித உணர்வுகளும் கலந்திருக்கக்கூடும். ஓய்விற்கு பிறகு தொடரவேண்டிய ஓட்டத்தில் இவ்வுணர்வுகள் தடங்கள்களாக மாறும் அபாயங்களும் உண்டு.

கஸோ இஷிகுரோ எழுதிய The Remains of the day முதிர்ந்த வயதில் அபூர்வமாக தனக்கு கிடைத்த ஆறு நாட்கள் ஓய்வில் அவர் மேற்கொள்ளும் பயணமும், பயணத்தினூடாக அவர் சந்திக்கும் இடங்களும், மனிதர்களும், அனுபவங்களும் கொண்டும் நகரும் நிகழினூடே கடந்தவைகளும் கதையாக பகிரப்பட்டிருக்கின்றன. வேலை வேலை என்று தன் காலம் அனைத்தையும் யாரோ ஒருவருக்காக உழைத்து கழித்துவிட்ட பிறகும் எஜமானருக்கு விஸ்வாசமாக இருந்ததிற்காக பெருமிதம் கொள்ளும் அந்த முதியவரின் மனநிலையை வாசிக்க சற்று ஆயாசமாகவே இருந்தது. இன்றைய சூழலுக்கு இவையெல்லாம் அந்நியபட்டே நிற்கின்றன.

இங்கிலாந்தில் போர் சூழலுக்கு முந்தைய காலகட்டங்களில் நிகழும் இக்கதை பல வித அரசியல் கூறுகளோடும், தனிமனித நேர்மை, விஸ்வாசம், கடமையுணர்ச்சி என பலவற்றை தொட்டுச்செல்வதோடு, எது தன்மானம் என்பதையும் அதன் வரையரைகளையும் கால மாற்றத்திற்கும் மனித குணங்களுக்குமேற்ப அது வித்தியாசப்படுவதையும் கதைசொல்லியின் வாயிலாக விரிவாக பேசுகின்றது. பல ஆண்டுகள் கழித்து தன்னுடன் வேலை செய்த பெண்மணியை பார்க்க பயணிக்கும் ஆறு நாட்களை ஒவ்வொரு நாளையும் ஒரு பகுதியாக காலை, மதியம், மாலை என விவரித்து கொண்டே வந்து அவளை சந்தித்த ஐந்தாம் நாளை மட்டும் விழுங்கிவிட்ட போக்கு அருமையாக இருந்தது. நான்காம் நாளுக்கு பிறகு ஆறாவது நாளில் அவளுடனான சந்திப்பும் உரையாடலும் ஒரு நினைவாகவே தொடரும்போது உணரப்படாதவைகளும் உணர்த்தப்படாதவைகளும் என்றென்றைக்கும் அவ்வாறே நீடித்துவிடுவதே சில சந்தர்ப்பங்களில் நல்லதென்றே தோன்றியது.

Post a Comment

0 Comments