-ABUL KALAM-
அரசியல் ஒரு சாக்கடை என்பது யார் சொன்ன கருத்தாக இருந்தாலும் சரி சாக்கடைக்குள் இஸ்லாமிய வாதிகள் இறங்கக் கூடாது என்ற கோஷத்தை யார் தூக்கிப் பிடித்தாலும் சரி சாக்கடையாக இருக்கின்ற அரசியலை அதற்குள் இறங்கித் துப்புரவு செய்ய வேண்டிய கடமை நிச்சயம் இஸ்லாத்தை முன்னிறுத்திப் போராடுகின்றவர்களுக்கு இருக்கின்றது. அந்தக் கடமையை யாரும் மறுக்கவும் முடியாது தட்டிக் கழிக்கவும் முடியாது.
இன்று உலகெங்கும் அரசியல் என்பது சாக்கடையாகத்தான் மாறிப் போயிருக்கின்றது. காரணம் அரசியலுக்கு வர வேண்டியவர்கள் வராமல் ஒதுங்கிக் கொண்டதும் வர முடியாமல் தடுக்கப்பட்டதுமாகும். ஏனெனில் சாக்கடையை சாக்கடையாகவே வைத்துக் கொண்டிருப்பதால் பலருக்கு இலாபம் இருக்கின்றது. அந்த இலாபங்களையெல்லாம் இலகுவில் விட்டுக் கொடுக்க நிச்சயம் அதனை அனுபவிப்பவர்கள் விரும்ப மாட்டார்கள்.
இந்த அரசியல் சாக்கடையை சாக்கடையாகவே விட்டு வைத்து அதனால் இந்த முழு சமூகமுமே நாற்றமெடுக்கின்ற நிலை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் தகுதியிருந்தும் வராமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் தான். (இங்கு தகுதியுள்ளவர்கள் என்பது இஸ்லாத்தின் பார்வையில் தகுதியுள்ளவர்களையே குறிக்கும்)
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு யாராவது சாக்கடையைத் துப்புரவு செய்யும் நோக்கோடு அரசியலுக்கு வந்தால் அவர்கள் இரண்டு பக்க நெருக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.
ஒன்று அவர்களை வர விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற உலோகாயுத வாதிகள்.
அடுத்தது இஸ்லாத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று கருதிக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள்.
எனவே எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் முஸ்லிம் மற்றும் சிறுபான்மை மக்கள் நன்கு சிந்தித்து உங்கள் (அமானிதங்களை)வாக்குகளை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக இதைப் பற்றியும் நாளை மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்”
(அல்-குர்ஆன் 2:188)
அல்லாஹ்வின் தூதரே! என்னை நீங்கள் பதவிக்கு நியமிக்க மாட்டீர்களா? என்று நான் கேட்ட போது அவர்கள் தன் கையால் என் தோளைத் தட்டி விட்டு ‘அபூதர்ரே! நீ பலவீனமானவன். ஆனால் பதவி (அதிகாரம்) என்பதோ அமானிதமாக இருக்கிறது. யார் அப்பதவிக்கு வந்து பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுகிறாரோ அவர் தவிர ஏனையோருக்கு அது இழிவையும் வருத்தத்தையுமே கொடுக்கும்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபூதர் (ரலி),
நூல்: முஸ்லிம் 1825)
இது "நபி வழி வெற்றிக்கு வழி" யின் ஒரு பணிவான வேண்டுகோள்


0 Comments