மகிந்த விடயத்தில் மைத்திரி தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதாக இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது
மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்குவதில்லை என்று எடுத்திருந்த முடிவை இன்று மைத்திரிபால மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்திய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் மஹிந்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு குழுக்களுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்தவே இந்த முடிவு எட்டப்பட்டதாக மைத்திரிபாலவி;ன் சிரேஸ்ட அரசியல் லெப்டினன்ட் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச சாதாரண வேட்பாளராகவே போட்டியிடமுடியும். அவருக்கு குழுத்தலைவர் அல்லது பிரதமமந்திரி வேட்பாளர் நிலை வழங்கப்படவில்லை என்றும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் தோழர்கள் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைவிடாது என்றும் ராஜித தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி ஏற்கனவே இருந்து வரும் மைத்திரிபால –ரணில் விக்கிரமசிங்க கூட்டில் தாக்கம் ஏற்படும்.
அதேநேரம் மைத்திரியின் அணியில் உள்ளவர்கள் தனித்துபோய் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டணி அமைப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் யோகராஜன், தமது கருத்தில் மஹிந்த ராஜபக்சவின் ஊழல்களுக்கு எதிராகவே ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மைத்திரிக்கு வாக்களித்தனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் தமது கருத்தில், மஹிந்த ராஜபக்ச பிரதமர் நிலைக்கான தகுதியை பெறமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் ஜாதிக ஹெல உறுமய தொடர்ந்தும் மைத்திரிபாலவின் தரப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ராஜபக்ச தரப்பின் விமல் வீரவன்ச, ஆகஸ்ட் 17ம் திகதியன்று மைத்திரி- மஹிந்த அரசாங்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார, மைத்திரியை ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியில் இருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


0 Comments