Subscribe Us

header ads

மஹிந்த ராஜபக்ஷ சாதாரண நாடாளுமன்ற ஆசனத்திற்கு ஆசைப்படும் மிகக் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .


ஜனாதிபதி எனும் உயர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷ சாதாரண நாடாளுமன்ற ஆசனத்திற்கு ஆசைப்படும் மிகக் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் இதையிட்டு இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் தான் கவலைப்படுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சரும், கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 மடவளையில் தனது தேர்தல் பிரசார காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இந்நாட்டிலே புரட்சிகரமான மாற்றம் பிறந்திருக்கின்றது. இந்த மாற்றம் எங்களுக்கு மிகவும் நிம்மதியைத் தந்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலை உருவாக்க நாம் எவ்வளவு ஏங்கினோம் என்று எமக்குத்தான் தெரியும். மடவளையில் இடம்பெற்ற பயங்கரவாத சம்பவங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை.

மடவளையில் தேர்தல் ஒன்றின்போது இடம்பெற்ற துக்கரமான சம்பவம் உலகில் பேசப்படுபவை. அச்சம்பவம் தேர்தலோடு மாத்திரம் நின்று விடவில்லை.

2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நாநூற்றுக்கு மேற்பட்ட சம்வங்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் போன்றவை தாக்கப்பட்டன. இதனால் இலங்கை சர்வதேச அரங்கில் அவப்பெயரை சம்பாதித்துக் கொண்டது. 

ஆட்சியாளர்களினால் மறைமுகமாக தூண்டப்பட்ட சம்பவங்களாகவே இவை இருந்தன. ஆனால், இவையனைத்தும் சவர்தேச சதியாகுமெனக் கூறி அப்போதைய அரசு இவற்றையெல்லாம் மூடிமறைக்கப்பார்த்தது. ஆனால் மக்கள் நம்பவில்லை. 

அப்போதைய பாதுகாப்புச் செயலாளரின் பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் சிறுபான்மையின மக்களின் மனங்களை புண்படுத்தின. இவை தொடர்பில் நான் அவருடன் பல தடவைகள் தர்க்கம் புரிந்திருக்கின்றேன். ஊடகங்களில் அவருக்கெதிராகப் பேசியிருக்கின்றேன். பாதுகாப்புச் செயலாளரின் இவ்வாறான செயற்பாடுகள் அசைக்கமுடியாது இருக்கின்ற உங்களது ஆட்சியை வெகு சீக்கிரத்தில் அசைத்து விடுமென்று நான் பலதடவைகள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறியிருக்கின்றேன். 

மஹிந்த இப்போது நிதானமாக இருந்து நான் கூறியதை யோசித்துப் பார்பாரேயானால் நான் கூறியது எவ்வளவு உண்மையென்பதை அவர் உணர்ந்து கொள்வார். அப்போது அவர் என்மீது சீரிப்பாய்ந்ததை என்னி கவலைப்படுவார். 

சிறுபான்மையின மக்களைத் தூண்டி அவர்களை வன்முறைக்கு இழுப்பதே அந்த ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது. புலனாய்வுத்துறையினர் இதைத் தூண்டிவிட்டனர் என்று நம்பப்பட்டது. ஒரு  பொறுப்புள்ள அரசாங்கம் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் ஆட்சி கவிழ்ந்தது. 

மிகவும் உயர்ந்நத பதவியான ஜனாதிபதிப் பதவியில் இருந்த மஹிந்த இன்று ஒரு சாதாரண நாடாளுமன்றக் கதிரைக்கு ஆசைப்படும் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதையிட்டு நாம் மிகவும் கவலைப்படுகின்றோம்.

மிகவும் கௌரவமாக ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் பதவி மோகம் கொண்டு நாடாளுமன்ற ஆசனத்திற்கு ஆசைப்படுவதையிட்டு ஒரு நாட்டின் பிரஜை என்ற வகையில் நாம் அவருக்காக அனுதாபப்படுகின்றோம்.

மஹிந்த அவராகவே அவரது தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டார் என்பதற்கு இதுபோல் ஆயிரம் உதாரணங்களைச் சொல்ல முடியும். அவர் முஸ்லிம் மக்களையும், தமிழ் மக்களையும் புண்படுத்தினார். 

இருந்தாலும், அவர் என்ன செய்தாலும் அவருக்காக கூஜா தூக்குகின்றவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இருப்பினும் இந்தத் தேர்தலில் பாரிய மாற்றமொன்று ஏற்பட்டு பலமான அரசாக ஐக்கிய தேசியக் கட்சி அரசு உருவாகும். மடவளை உட்பட முழுக் கண்டி மாவட்டமும் அபிவிருத்தி செய்யப்படும்.

பாதத்தும்பர நீர்விநியோகத்திட்டம், வடக்குக் கண்டி நீர்விநியோகத்திட்டம் என பல திட்;டங்கள் 6300 கோடி ரூபாய் செலவில் கண்டியில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாரிய அபிவிருத்தித்திட்டங்களை இந்த கண்டி மாவட்டம் அனுபவிக்கவுள்ளது. இச்சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மடவளை மதீனா தேசியப் பாடசாலை எனது கல்வியின் கலங்கரை விளக்கம். அந்தப் பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

இந்தப் பாடசாலை குறைந்த வளங்களைப் பயன்படுத்தி விளையாட்டிலும் முன்னேறியுள்ளது. இந்தப் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு நான் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

Post a Comment

0 Comments