ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கப்பட்டுள்ளமையினால் அதிருப்திய டைந்துள்ள சுதந்திரக் கட்சியின் சில அதிருப்தியாளர்களும் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதிகளும் இணைந்துமூன் றாவது அணியொன்றை உருவாக்கி அதன் ஊடாக தேர்தலில் களமிறங்குவதற்கான முஸ்தீபுகள் இடம் பெறுகின்றன.
ஒருவேளை இவ்வாறு மூன்றாவது அணியை உருவாக்குவதற்கு முடியாது போனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் இந்தத் தரப்பினர் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.
ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் பட்சத்தில் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்களும் ஹெலா உறுமயவின் பிரதிநிதிகளும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் சாத்தியம் உள்ளது.
குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்புமனு வழங்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் ராஜித சேனாரட்ண அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எம்.கே.டி.எஸ். குணவர்த்தன மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆகியோர் கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.
அத்துடன் மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டமை தொடர்பில் பாரிய அதிருப்தியில் இருக்கின்ற ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதிகளான சம்பிக்க ரணவக்க, மற்றும் அத்துரலிய ரத்தினதேரர் ஆகியோருடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி குழுவினர் இணைந்தே இந்த மூன்றாவது அணியை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் நம்பகரமாக தெரியவருகின்றது.
ஜாதிக ஹெல உறுமயவின் பெயரை மாற்றி புதிய முன்னணியின் ஊடாக மூன்றாவது அணியாக தேர்தலில் போட்டியிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை சம்பிக்க ரணவக்கவும் அத்துரலிய ரத்தினதேரரும் கடந்த சில தினங்களாக மேற்கொண்டுவந்தனர். இந்த முயற்சிக்கு அமைச்சர் ராஜித சேனாரட்ண மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் ஆதரவு வழங்கியிருந்தனர்.
இது தொடர்பான முக்கிய அறிவிப்பு நேற்றையதினம் இடம்பெறவிருந்த நிலையில் இறுதிநேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன் பின்னரே சுதந்திரக் கட்சியினதும் ஜாதிக ஹெல உறுமயவினதும் முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களுடன் நேற்றைய தினம் பேச்சு நடத்தியுள்ளனர்.
இதன்போது ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து பொது சின்னம் ஒன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிட இந்த குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும் யானை சின்னத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஐக்கியதேசியக்கட்சி தயாராக இல்லை என்ற விடயமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு ஐ. தே.க. இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையிலேயே மூன்றாவது அணியை உருவாக்க முடியாது போனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட அதிருப்தியாளர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இன்னும் சில மணித்தியாலங்கள், அல்லது இன்று காலை ஆகும்போது மூன்றாவது அணியா, அல்லது ஐ.தே.க. வுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்த தீர்மானம் அதிருப்தியாளர்களினால் எடுக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு வழங்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று முன்தினம் லண்டன் பயணமானார். எனினும் சில தினங்களில் நாடு திரும்பவுள்ள சந்திரிகா குமாரதுங்க தற்போதைய அரசியல் நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ராஜித சேனாரட்ண அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எம்.கே.டி.எஸ். குணவர்த்தன மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினர்.
இதேவேளை நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் ராஜித்த சேனாரட்ன இந்த விவகாரத்தில் நாங்கள் நொருங்கிப்போயுள்ளோம். இந்நிலையில் எமது மக்கள் கூறுகின்ற விடயத்தை கேட்டு அதற்கு ஏற்ப நாங்கள் விரைவில் முடிவெடுப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.


0 Comments