Subscribe Us

header ads

மஹிந்த அல்ல, அவருடைய தகப்பனே வந்தாலும் ஐ.தே.கவுக்கு சிக்கல் இல்லை: யாழில் அமைச்சர் பாலித்த


இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த போட்டியிடுவது பெரிய விடயம் இல்லை. மஹிந்த அல்ல, அவருடைய தகப்பனே வந்தாலும் எமக்கு சிக்கல் இல்லை என மின்சக்தி எரிபொருள் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட தேர்தல் காரியலய திறப்பு விழா மற்றும் மின்சார சபை கட்டிட திறப்புவிழா ஆகியவற்றுக்காக யாழ்.வந்திருந்த அமைச்சரிடம் தேர்தல் நிலமைகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தேர்தல் காலத்தில் பொலிஸார், படையினர், உட்பட மாவட்டச் செயலர்கள், தொடக்கம் கிராமசேவகர்கள் வரை இலங்கையின் அனைத்து வளங்களையும் சுரண்டியும், முறைகேடாக பயன்படுத்தியும் தேர்தல்களை எதிர்கொண்டிருக்கின்றார் வெற்றியும் பெற்றார்.

அதற்கும் மேலாக ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இந்தியாவுக்கு சென்று பிரபல்யமான சோதிடர்களை சந்தித்து நல்லநேரம் பார்த்து. என்ன செய்யலாம் என அறிவுரைகள் கேட்டு தேர்தலை எதிர்கொண்டார்.

ஆனால் இறுதியாக நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மீண்டும் தான் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறிக்கொண்டிருக்கின்றார். அவருடன் உள்ளவர்களும் அதே முழக்கத்தை இடுகின்றார்கள்.

ஆனால் கடந்தகாலத்தைப் போன்று இலங்கையின் அனைத்து வளங்களையும் சுரண்டி தேர்தல் வெற்றிகொள்ள முடியாது. அவருடன் இன்று உள்ளவர்கள் மக்களால் கழிக்கப்பட்ட கசினோ சூதாட்ட விடுதிகளை நடத்தியவர்களும் எதனோல் விற்றவர்களும், போதைப்பொருள் கடத்தியவர்களுமே.

அவர்களை கொண்டு தேர்தலை வெற்றி கொள்ளலாம் என நினைப்பது மோசமான முட்டாள்தனம்.

இந்நிலையில் மஹிந்த தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.கட்சிக்கு பின்னடைவா, எனக்கேட்டால் இல்லை. அவர் அல்ல அவருடைய தகப்பனே வந்தாலும் ஐ.தே.கட்சியை ஒன்றும் செய்ய இயலாது.

வடக்கில் ஐ.தே.கட்சியின் நிலை தொடர்பாக கேட்டபோது, கடந்தகாலத்தில் இங்கே சமாதானமான நிலை இருக்கவில்லை. மக்கள் ஆயுதங்கள் சொன்னதை கேட்டார்கள். அதனால்  எம்மால் எதனையும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது அவ்வாறான நிலை இல்லை. சமாதானமான நிலை இங்கே உருவாகியிருக்கின்றது. எமது கட்சியும் சமாதானத்தையே அதிகம் விரும்புகின்றது.


இங்குள்ள மக்களும் சமாதானத்தை விரும்புகிறார்கள். இந்நிலையில் நாங்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சிக்கு உழைப்போம்.

போர் நடைபெற்ற காலத்திலும் இங்குள்ள மக்களின் நலன்களுக்காக மகேஸ்வரன் உழைத்திருந்தார். அவ்வாறே வடக்கில் நல்லாட்சிக்கும் மக்களின் நலன்களுக்காகவும் ஐ.தே.கட்சி உழைக்கும் என்றார்.

Post a Comment

0 Comments