அளுத்கம, பேருவளை பிரச்சினைக்கு ஐ.எஸ் அமைப்பிலுள்ள இலங்கையரே காரணம். எனவே இது தொடர்பில் விசேட ஆணைக்குழு நிறுவி ஆராய வேண்டும். அப்போது பல வெளிப்படாத உண்மைகள் வெளிவரும் என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:
கடந்த காலத்தில் பொதுபல சேனா அமைப்பினால் தெரிவிக்கப்பட்டு வந்தவை தற்போது நிஜத்தில் இடம்பெற்று வருகின்றது. அக்காலப்பகுதியில் நாம் ஏதாவது குறிப்பிட்டால் நாம் பிரச்சினையை தூண்டுவதாக எம் மீது குற்றச்சாட்டு முன்வைத்தனர். இந்த நிலையிலேயே ஐ.எஸ் அமைப்பில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர் ஒருவர் செயற்பட்டு வருவதாக இருப்பின் எமது நாடு எங்கே சென்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறான செயற்பாடுகள் இனிமேலும் தொடரக்கூடாது. நாட்டில் சமாதானமும், மக்கள் நிம்மதியாகவும் வாழ வேண்டும். அதற்காகவே நாம் இங்கு போராடி உழைத்து வருகிறோம்.
நாட்டில் முன்னாள் ஜனாதிபதியாக இருக்கட்டும், தற்போதைய ஜனாதிபதியாக இருக்கட்டும் அனைவருமே தீவிரவாதம் குறித்து பேச அஞ்சுகின்றனர். ஆனால் நாம் மட்டுமே இவை தொடர்பில் தைரியமாக கதைத்து வருகின்றோம். அரசாங்கத்திலுள்ளவர்கள் அனைவரும் பயத்தினால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றனர்.
இவ்வாறாக பிரிவினைவாதமும், தீவிரவாதமும் தொடர்ந்தால் நாடு பாரதூரமான பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே நாட்டின் எதிர்க்காலத்தை கருத்திற்கொண்டு நாம் பிரிவினைவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஒழிக்க பாடுபடுவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


0 Comments