17 கிராண்டஸ்லாம் பட்டங்களை வென்று தரவரிசையில் 2-ம் நிலையில் இருக்கும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் முன்னணி வீரராக திகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. மைதானத்தில் எதிரிகளை மிரளவைக்கும் ஆக்ரோஷமான ரோஜர் பெடரருக்கு கருணை உள்ளம் உள்ளது என்பது அவர் ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் இருந்து அறிய முடிகிறது.
டென்னிஸ் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியுள்ள அவர், ஒரு அறக்கட்டளையை தொடங்கினார். இதன் முதன் நோக்கமே வறுமையால் வாடும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை வழங்குவது என்பதுதான்.
இதற்காக அவர் தெற்கு ஆப்பரிக்காவில் உள்ள மலாவி நாட்டைத் தேர்ந்து எடுத்தார். கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இவரது அறக்கட்டளை மிலாவி நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த அறக்கட்டளை இதற்கு முன் 80 பள்ளிகளை திறந்துள்ளது. தற்போது 81-வது பள்ளியை திறந்துள்ளது.
முதன்முறையாக மலாவி சென்றுள்ள பெடரர் 81-பள்ளி தொடக்க விழாவின்போது ‘‘இந்த புதிய பள்ளிக்கூடம் இங்கு வாழ்ந்து வரும் குழந்தைகளுக்கு முக்கியமான மைல்கல்லாகும்’’ என்றார்.
மேலும், ஏராளமான குழந்தைகள் நல்ல பள்ளிகள் மற்றும் சிறுகுழந்தை முன்னேற்ற வளர்ச்சி மையங்களுக்காக காத்திருக்கிறார்கள். 2021-க்குள் 13.5 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஒன்றரை லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.



0 Comments