20 ரூபா பணத்தை திருடிய நபர் ஒருவரை 50000 ரூபா சரீர பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
20 ரூபா பணத்தை திருடிய நபர் ஒருவரை கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய எதிரில் நேற்று முன்னிலைப்படுத்தினர்.
சந்தேக நபரை 50000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
40 வயதான மொஹமட் பாரூக் மொஹமட் மிலான் என்ற சந்தேக நபரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று முன்தினம் கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தெவட்டகஹா பள்ளிவாசலின் உண்டியலில் 20 ரூபா பணத்தை திருடியுள்ளார்.
பள்ளியில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் மொஹமட் லாபீர் என்பவர், சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சந்தேக நபர் உண்டியலிலிருந்து பணத்தை களவாடும் காட்சிகள் சீ.சீ.ரீவி கமராவில் பதிவாகியுள்ளது.
சுவிங்கம் ஒன்றை ஈர்க்கில் ஒன்றில் குத்தி பணத்தை களவாடியுள்ளதாகவும், சந்தேக நபரிடமிருந்து 10 நாணயக் குற்றி ஒன்றியையும் 10 ரூபா நாணயத்தாள் ஒன்றையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.


0 Comments