“கத்தரிக்காயின் சுவை சிலருக்குப் பிடிப்பதில்லை. வாரம் ஒரு முறை அதை சமையலில் சேர்த்துக் கொள்பவர்கள் கூட, அதன் அற்புத குணங்களைப் பற்றித் தெரிந்தால் தினசரி சாப்பாட்டில் இடம் கொடுப்பார்கள். கத்தரிக்காய் சுவை பிடிக்காதவர்களுக்கும் அதை முறைப்படி சமைத்துக் கொடுப்பதன் மூலம் கத்தரிக்காய் பிரியர்களாக மாற்ற முடியும்’’ ‘‘கத்தரிக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு பருமன் பிரச்சினை பக்கத்தில் வராது என்றால் நம்புவீர்களா? உண்மைதான்.
100 கிராம் கத்தரிக்காயில் இருக்கும் ஆற்றல் வெறும் 25 கலோரிகள் மட்டுமே. நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்த உணவைத் தந்து, அதிகம் சாப்பிட்டு, பருமன் பிரச்சினையை வரவழைத்துக் கொள்வதிலிருந்து காக்கும்.கத்தரிக்காய் இதயத்துக்கு நல்லது. நார்ச்சத்து, பொட்டாசியம், விட்டமின் பி 6 மற்றும் ஃப்ளேவனாயிட்ஸ் போன்ற ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகியவை நிறைந்திருப்பதால் இது, இதய நோய்கள் தாக்கும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள், இரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்து, மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்கிறது. உடலின் எெலக்ட்ரோலைட் விகிதத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பொட்டாசியம். அது கத்தரிக்காயில் நிறையவே உள்ளது. தவிர இது சோடியத்தின் அளவை சரியான அளவில் வைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற காய் கத்தரி. காரணம், இதிலுள்ள அபரிமிதமான நார்ச்சத்து.
கத்தரிக்காயில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், உடலின் கொலஸ்ட்ரோல் அளவை எல்லை தாண்டாமல் வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக வேலை செய்யும். கத்தரிக்காய் சாப்பிடுகிறவர்களின் மூளை செல்கள் எப்போதும் துறுதுறுப்புடன் இருக்குமாம். நினைவாற்றலை அதிகப்படுத்துமாம். கத்தரிக்காயில் உள்ள ஊட்டங்களும் நார்ச்சத்தும் வயதாவதன் காரணமாக உண்டாகிற சருமச் சுருக்கங்களை விரட்டி, இளமையுடன் காட்சியளிக்க உதவுமாம். கத்தரிக்காயில் மிகச் சிறிய அளவு நிகோட்டின் உள்ளது என்பதால் புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்களுக்கும் மறைமுகமாக உதவுகிறது.’’


0 Comments