முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரப்போவது உறுதியாகிவிட்டது.
மாத்தறையில் கடந்த 12 ஆம் திகதி நடந்த மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகள் நடத்திய கூட்டத்துக்கு, அவர் அனுப்பியிருந்த செய்தியில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருந்தார். அந்தக் கூட்டத்துக்குச் சென்று முகம் காட்டி விட்டுச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ மேடையில் ஏறவில்லை. அடுத்த பேரணியில் தாம் மேடையேறவுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகவே, மஹிந்த ராஜபக் ஷ கூறியிருக்கிறார்.
என்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவராக சுமார் பத்தாண்டு காலம் பதவியில் இருந்த அவருக்கு, பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் உரிமை, யாருக்கு உள்ளது என்பது கூடத் தெரியாமல் இருப்பது வேடிக்கையான விடயம்.
அதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைவர் தான், வேட்பாளர்களை நிறுத்தும்- இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்.
அந்தவகையில், மைத்திரிபால சிறிசேனவே, மஹிந்த ராஜபக் ஷவை போட்டியிட அனுமதிக்கலாமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும். அதைவிட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி பிரசாரம் செய்யும் வழக்கமும் இதற்கு முன் இருந்தது கிடையாது.
இவற்றைத் தெரிந்து கொண்டோ தெரியாமலோ, மஹிந்த ராஜபக் ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகக் கனவு காண்கிறார். முன்னர், மீண்டும் அரசியலுக்கு வருவது பற்றி வெளிப்படையாக கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வந்த அவர், இப்போது, பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதாக வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
அதேவேளை, எந்த மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவதென்று இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கட்சியிலோ, கூட்டணியிலோ, போட்டியிட விரும்பும் அவர், தானே இன்னமும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது போன்று கருத்துக்களை வெளியிடுவது அவரது அரசியல் கோமாளித்தனத்தை வெளிப்படுத்துகிறது.
ஆனாலும், அவர் அந்தக் கோமாளித்தனத்தைச் செய்கிறார் என்றால், அதற்குக் காரணம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அவருக்கு இருக்கின்ற செல்வாக்குத் தான்.சுமார் 100 வரையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை வைத்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையுடன் பேரம் பேசலாம் என்று எதிர்பார்க்கிறார்.அந்தப் பேரம் பேசலின் ஊடாகவே தனக்கான பிரதமர் வேட்பாளர் தகுதிநிலையை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது அவரது திட்டம்- எதிர்பார்ப்பு.ஆனால், மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில், மஹிந்த ராஜபக் ஷ வினால் சூடுகண்ட பூனை அவர்.
அவர் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு மட்டுமன்றி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகக்கூட நிறுத்துவதற்கு தயாராக இல்லை என்றே செய்திகள் கூறுகின்றன.
மஹிந்த ராஜபக் ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகவோ, பிரதமர் வேட்பாளராகவோ மைத்திரிபால சிறிசேன நிறுத்துவாரேயானால், அது அவருக்கு மக்கள் அளித்த ஆணைக்கு முரணான செயலாக இருக்கும்.மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த பெரும்பான்மையான மக்கள், மஹிந்த ராஜபக் ஷவைத் தூக்கியெறிய விரும்பியவர்கள்- அவரது அடக்குமுறை ஆட்சியை எதிர்த்தவர்கள்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்கு எதிரான அந்த அலை தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான ஒரு அணியை உருவாக்கி வலுப்படுத்தி, அவரையும் வெற்றிபெற வைத்திருந்தது.இப்படியான நிலையில், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு எந்த வகையிலாவது துணைபோவாரேயானால், அது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு வரலாற்றுக் கறையை ஏற்படுத்தும்.
ஏனென்றால், மைத்திரிபால சிறிசேன தாம் ஜனாதிபதி பதவிக்காக மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.அதேவேளை, அவர் மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்குள் நாட்டைத் தள்ளிவிடாத வகையில் செயற்படும் பொறுப்பு அவரிடம் இருப்பதை தட்டிக்கழித்து விட முடியாது.
மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு மைத்திரிபால சிறிசேன எந்தவகையிலாவது இடமளிப்பாராக இருந்தால், அது வரலாற்றில் அவர் செய்த மிகப்பெரிய தவறாகவே பார்க்கப்படும்.
அதைவிட, யாரெல்லாம் மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வருவதற்கு துணையாக நின்றார்களோ, ஒத்துழைத்தார்களோ அவர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்பதுடன், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும்.மஹிந்த ராஜபக் ஷவை முன்னிறுத்துவதால். மைத்திரிபால சிறிசேன இத்தகைய சிக்கல்களை மட்டும் எதிர்கொள்ள நேரிடாது.ஒருவேளை மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் ஆகிவிட்டால், அதன் விளைவுகளை அதிகமாக அனுபவிக்கப் போகிறவரும் மைத்திரிபால சிறிசேனவாகவே இருப்பார்.
ஏனென்றால், மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்த நிறைவேற்று அதிகாரங்கள் பல 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டு விட்டது.
எனவே, அடுத்த பாராளுமன்றத்தில், பிரதமர் கூடிய அதிகாரம் படைத்தவராக இருப்பார்.அந்த வகையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பெரும் பனிப்போர் ஒன்று உருவாகும் வாய்ப்பு ஏற்படலாம்.2001ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கம், ஜனாதிபதியாக இருந்த சந்திரிகாவுடன் பல சந்தரப்பங்களில் மோதியது.
அப்போது நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த சந்திரிகா ஒரு கட்டத்தில், முக்கிய அமைச்சுக்களை பறித்துக் கொண்டதுடன், பாராளுமன்றத்தை கலைத்து விட்டார்.
ஆனால், மைத்திரிபால சிறிசேனவினால் அவ்வாறு செய்ய முடியாது.ஏனென்றால் பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் அவரால் கலைக்க முடியாது. அதற்காக அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது.
அதைவிட, தன்னிடம் எஞ்சியிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு, மஹிந்த ராஜபக் ஷவை அடக்கவும் முடியாது.அது நிறைவேற்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதான குற்றச்சாட்டை மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தும்.நல்லாட்சியை நிறுவுவதாக உறுதியளித்து பதவிக்கு வந்த அவர், தனது அதிகாரங்களை பாராளுமன்றத்தின் மூலம் தெரிவான பிரதமர் மீது செலுத்துவது மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கெடுத்து விடும்.
எனவே, மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் பதவியைக் கைப்பற்றினால், மைத்திரிபால சிறிசேன விட்டுக் கொடுத்து அடங்கிப் போக வேண்டிய நிலையே ஏற்படும்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில், பல்வேறு நெருக்கடிகள் அழுத்தங்களை எதிர்கொண்ட மைத்திரிபால சிறிசேன, அதுபோன்ற நிலைக்கு தன்னையும், நாட்டையும் தள்ளிவிடுவதற்கு விரும்பமாட்டார்.மைத்திரிபால சிறிசேன எதிர்பாராமல் பதவிக்கு வந்திருந்தாலும் அவரது எளிமையான அணுகுமுறைகள், நாட்டு மக்களைக் கவர்ந்திருக்கிறது. வெளிநாடுகளையும் மதிக்க வைத்திருக்கிறது.
அதிகாரப் பசி கொண்டவராக தன்னைக் காட்டிக் கொள்ளாத அவரது பண்பு பெரிய புகழைத் தேடிக் கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.இந்தநிலையில், அந்தப் புகழைக் கெடுத்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது.மஹிந்த ராஜபக் ஷவுக்கு இடமளிக்கப் போனால், வீண் சர்ச்சைகளிலும் முரண்பாடுகளிலும் சிக்கிக் கொண்டு மைத்திரிபால சிறிசேன பழிகளைச் சுமக்க நேரிடலாம்.
எனவே, இருக்கும் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவிடம் இருக்கிறது.இதனால் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் வாய்ப்பளிக்கமாட்டார் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது.ஆனாலும், மாற்று அணியொன்றை நிறுவி பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடும் கனவு மஹிந்தவிடம் இருந்து போகவில்லை.
அதற்கான தயார்படுத்தல்களில் அவர் இறங்கியிருப்பதாகவே செய்திகள் வெளியாகின்றன.மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த பாராளுமன்றத் தேர்தல் மூன்று அணிகளுக்கிடையிலான போராக மாறும் சூழலே அதிகமாக உள்ளது.
ஏற்கனவே உள்ள ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணிகளுடன், மகிந்த ஆதரவு அணியும் தனியாக களமிறங்கலாம்.
இது சுதந்திரக் கட்சியினது வாக்கு பிரிந்து போகும் சூழலை நிச்சயம் ஏற்படுத்தும்.அது ஐ.தே.க. வுக்கு வாய்ப்பாக அமையும் என்பது ரணில் விக்கிரமசிங்கவின் கணக்கு.
அந்தக் கணக்கு பலிக்குமா என்ற கேள்விக்கு பாராளுமன்றத் தேர்தல் பதிலளிக்கும்.


0 Comments