பாராளுமன்றத்தில் 20ஆவது திருத்தம் தொடர்பில் தனது சுயநலம் கருதியே தனக் குக் கிடைப்பது குறைந்து விடும் என்பதற்காகவே அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூச்சலிடுகிறாரே தவிர சமுதாயத்துக்காக அல்ல. ஜனாதிபதி பதவி கிடைக்குமென்றால் அவர் மதத்தையே மாற்றிக் கொள்வார் என அமைச்சரவையின் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று மாலை தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
20ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்பே பாராளுமன்றம் கலைக்கப்படும். ஆனால் எப்போது என இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நல்லாட்சியின் பக்கம் இணைந்து கொள்வதற்காக கடைசி நேரத்திலே வந்து சேர்ந்தார். நல்லாட்சியின் பக்கம் இணைந்து கொள்ளா விட்டால் மக்கள் அவரை வர வேண்டாம் என்றனர்.
மக்களின் அழுத்தத்தினாலேயே மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சேர்ந்தார். அத னால் அவருக்கு நல்லாட்சி பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. அதனால் தான் பலவாறெல்லாம் 20ஆவது திருத்தம் தொடர்பில் விவாதிக்கிறார்.
சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் 20ஆவது திருத்த சட்ட மூலத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என்று விளங்கவில்லை. இரட்டை வாக்குச் சீட்டு முறைமை வேண்டுமென்கிறார்கள்.
இரட்டை வாக்குச் சீட்டு முறைமையென்றால் கட்சிக்கு ஒரு வாக்கும் தான் விரும்புபவருக்கு ஒரு வாக்குமாகும்.
இம்முறை மீண்டும் விருப்பு வாக்கு முறைமைக்கே இட்டுச் செல்லும் விருப்பு வாக்கு முறைமையினாலேயே பணம் படைத்தவர்கள் ஊழல் செய்பவர்கள் வெற்றியீட்ட முடிகிறது. இதனை இல்லாமற் செய்வதே தொகுதி வாரியான தேர்தல் முறைமையாகும்.
அரசியல்வாதிகள் தமது சுயநலத்தையும் இலாபத்தையும் எதிர்பார்க்கிறார்கள். இதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஊடகங்களும் இதற்கு உதவ வேண்டும்.
20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பதாகவும் கட்சிக்குள் நிலவும் உட்பூசல்களே இதற்குக் காரணம் எனவும் மக்கள் விடுதலை முன்னணி கூறுகிறது.
இது தவறான கருத்தாகும். ஐ.தே.கட்சியே இச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதைப் பின்தள்ளுகிறது.


0 Comments