-Ibrahim Nihrir-
சாபக்கேட்டை துடைத்தழித்து பாப விமோசனம் பெற்றுக் கொள்ள விழையும் புது பாதையில் பயணம் செல்ல தயாராகுவோம் உடன் பிறப்புக்களே...
காழ்ப்புணர்ச்சி களைந்து, கருத்தொற்றுமையில் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமை காண விரைந்திடுவோம் தோழர்களே...
அல்லாஹ்வுக்காக, எம் தாய் மண்ணுக்காக, எம் வருங்கால சந்ததிக்காக நாமனைவரும் பொது அணியில் இணைந்து புது பரணி பாட இன்றைய நாளை விட்டால் இன்னொரு நாள் இனி என்றைக்குமே பிறக்காது சகோதரர்களே...
நேற்று 28 ஜூன் 2015ஆம் திகதி நள்ளிரவு கடந்த பின்பும் நகரத்தின் பலதரப்பட்ட ஆலிம்களும், ஆசிரியர்களும், ஏனையோரும் ஒன்று கூடி
கருத்துக் களம் கண்டு பொது அணி ஒன்றுதான், எம் முப்பது வருட இதய தாகத்தை தீர்க்கக் கூடிய புது வழி என்னும் இறுதியான உறுதியான முடிவுக்கு வந்தபோது நான் மேலே கூறிய அந்த வாசகங்களை உங்கள் முன் வாய் விட்டு கூற வேண்டுமென்று ஆதங்கப்பட்டேன்...
அந்த சபையில் அமர்ந்திருந்த கே.ஏ.பாயிஸ் தெளிவாக தன் முடிவை அங்கே அறிவித்தார்...என்னை ஈன்றெடுத்த, என்னை வளர்த்தெடுத்த, எனக்கு பேரும் புகழும் வாங்கி தந்த இந்த மண்ணுக்காக பெருமையும், செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட (ஜனாதிபதியின்) கட்சி அரசியலில் இருந்து (தற்காலிகமாக) விலகி, பொது அணியில் இறங்க தான் தயார்...தன்னோடு இணைந்து அரசியல் சமரில் இறங்க இருப்போர் வேறு யார் என்று கேள்வி எழுப்பினார்...
தமிழ் தரப்பில் பெருமளவில் வாக்கு வங்கியை தக்க வைத்துள்ள ஒருவரும் தன்னோடு இணைய தயாராக இருப்பதாக சபையில் அறிவித்தார்...அத்தோடு செல்வாக்கு நிறைந்த பெரும்பான்மை இன பிரமுகர்களும் தம்மோடு கரம் கோர்க்க விருப்பத்தோடு இருப்பதாக கூறினார்...இவர்களோடு பல் வேறு கட்சியைச் சேர்ந்த, பல்வேறு அணியைச் சேர்ந்த எம்மவர்களும் வேற்றுமைகளைத் துறந்து தான் செல்லும் புது வழியைத் தொடர வேண்டும் என்பதே தன் மனப்பூர்வ ஆசை என்றும் அவர் கூறினார்...
நேற்று நடந்த அந்த கருத்தாடலின் ஒரு கட்டமாக இன்று சுபஹு தொழுகையின் பின்னர் "புத்தளத்துக்கான நாடாளு மன்ற பிரநிதியைப் பெற பொது அணியில் களமிறங்குவதுதான் ஒரே ஒரு வழி" என்னும் கருத்தை பெரிய பள்ளி ஏற்றுக் கொண்டு எம்மை வழி நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும், அதைப் பற்றி கலந்தாலோசிக்க நேரம் ஒதுக்கி தரும்படியும் பள்ளியின் பிரதான தர்ம கர்த்தா பீ.எம்.ஏ.ஜனாப் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது...இன்ஷா அல்லாஹ் நாளை அந்த ஒன்று கூடல் நடை பெறலாம்...
தன்னலம் சாராத தனது முயற்சியின் அடுத்தடுத்த கட்டங்களாக கே.ஏ.பி. பல்வேறு குழுக்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கின்றார்...
இன்ஷா அல்லாஹ் இந்த முயற்சி ஊடாக பலமான பொது அணி ஒன்று உருவாகி, அதன் மூலம் மக்களின் விருப்பத்துக்குரியவர்(கள்) நிச்சயம் நாடாளு மன்றம் செல்வார்கள் என்று நம்புவோமாக...ஆனால்...
எதிர்பார்ப்புக்கு மாற்றமாக பொது அணி முயற்சிக்கு உரிய பலா பலன்கள் கிடைக்காவிட்டால்....
வழமையான கட்சி அரசியலுக்கு கே.ஏ.பி. திரும்புவது தவிர்க்க முடியாததாகிவிடும்...அதன் பின்
"நாடாளுமன்றத்தில் எம் ஆசனத்தின் வெறுமை" என்னும் சோகக் கதையை நாமே எழுதியவர்களாகி விடுவோம்...


0 Comments