பாராளுமன்றம் எப்போது கலைக்கப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையிலும் 49 சதவீதமான மக்கள், பாராளுமன்றம் உடன் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அரசியற் கட்சிகளின் தலைவர்களும் தாம் விரும்பியவாறு திகதிகளைக் கூறி மக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
ஜனாதிபதியோ பாராளுமன்றத்தை கலைக்கும் விவகாரத்தை மிகவும் இரகசியமாக வைத்திருப்பது போல் தோன்றுகின்றது. எவரும் எதிர்பாராத தருணத்தில் அவர் இதற்கான அறிவிப்பை விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள போதிலும் பலவீனமான அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டிய நிலையிலேயே உள்ளார் என்ற யதார்த்தத்தையும் மறந்துபோக முடியாது. எந்தவொரு தீர்மானத்தை எடுத்தாலும் அவர், ஒரு தடவைக்கு இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
ஒருபுறம் அவர், தனது அரசியல் நண்பரை கைவிட்டு விடக்கூடாது. மறுபுறம் தனது அரசியல் எதிரியிடம் எதையும் இழந்து விடக்கூடாது. ஒரு வகையில் இக்கட்டான நிலைக்கு அவர் முகம் கொடுத்துள்ளார் என்று தோன்றுகின்றது.
இந்தவிதமான போக்குகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எப்படியாவது பிரதமர் வேட்பாளராக நிறுத்திவிட வேண்டும் என்பதில் அவரது ஆதரவு அணியினர் சளைக்காமல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, மஹிந்த ராஜபக் ஷவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அடுத்த பிரதமர் வேட்பாளர். அவரைத் தவிர வேறு எவருக்கும் பிரதமராக முடியாது. ஜனாதிபதி நியமித்த சுதந்திரக் கட்சிக் குழுவின் இறுதித் தீர்மானம் இதுவாகும். ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என்று அக்குழுவின் உறுப்பினர் டி.பி.ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலோ மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசியலில் அனைத்துப் பதவிகளையும் வகித்து விட்டார். இனி எந்தப் பதவியையும் அவர் வகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த தேர்தலில் தோல்வி கண்டவர் என்ற வகையில் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். நல்லாட்சிக்கான எமது பயணத்தை எவருக்காகவும், எதற்காகவும் நாம் பின்னோக்கி நகர்த்த மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாகப் பார்க்குமிடத்து தேர்தலில் மூன்றாவது அணி ஒன்று பலமான நிலையில் களமிறங்கி, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை மூன்று பிரிவாகச் சிதறச் செய்யும் வாய்ப்புக்களே அதிகம் இருப்பதாக ஊகிக்கப்படுகின்றது.
கடந்த ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் தாண்டவமாடியதாகக் கூறிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணியினர், எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவார்கள் என்று எதிர்பார்ப்பது எந்தவகையில் சாத்தியம் என்று எண்ணிபார்க்க வேண்டும்.
இது கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக அமைந்து விடுவது மாத்திரமன்றி, அவர்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் இல்லாமல் செய்துவிடும் என்ற கருத்துக்களும் பொதுவாகவே இருந்து வருகின்றன. அந்தவகையில் மைத்திரிபால சிறிசேன அநாவசியமான சிக்கல்களுக்கு இடமளியாத வகையிலேயே நிலைமையை கையாள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறு இருந்த போதிலும் தேர்தல் தொடர்பான அறிவிப்பு பிந்திப் போவதாலும், எதிர்க்கட்சியினரின் முட்டுக்கட்டைகள் காரணமாக அரசாங்கத்தை வெற்றிகரமாகக் கொண்டு நடத்த முடியாதவாறு ஏற்படும் சூழ்நிலைகளினாலும், அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி மருதானையிலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை வியாழனன்று நடத்தியது. இவை எதிர்வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதை மறந்துபோகக் கூடாது.
இதனிடையே, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. ஜனநாயக விரோதமான இந்த திருத்தத்தை அரசாங்கம் வாபஸ் பெறாவிடில், நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
20 ஆவது திருத்தச் சட்டமூலம் எமது நாட்டின் ஜனநாயகத்தையோ, நாட்டு மக்களின் உரிமைகளையோ மற்றும் அரசியல் கட்சிகளின் உரிமைகளையோ பாதுகாப்பதற்குப் போதுமானதாக இல்லை. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் எந்தவகையிலும் எதிர்பார்க்கப்பட்ட சீர்த்திருத்தமாக அமையப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் அனுசரித்து தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த நாட்டின் சிறுபான்மை மக்களை ஒதுக்கியும், புறக்கணித்தும் கடந்த காலத்தில் முன்னெடுத்த நடவடிக்கைகளே, நாட்டை இருண்ட யுகம் நோக்கிக் கொண்டு சென்றது என்ற யதார்த்தத்தையும் மறந்துபோகக் கூடாது.
இவை அனைத்துக்கும் மேலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிவாகை சூடுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களும் சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் மக்களே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதனிடையே, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் பலவும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தீர்த்து வைக்கப்படாமல் கிடப்பில் இருப்பதாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் கொண்டுள்ளனர். இது குறித்தும் கவனத்தில் கொள்வது அவசியம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.


0 Comments