Subscribe Us

header ads

ஹக்கீமின் மண்டியிடலில் வயிறு வளர்ப்போர்

ஊடகவியலாளர்களுடனான இப்தாரில் அமைச்சர் ஹக்கீம் மண்டியிட்டார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இன்று அதிகமான ஊடகங்கள், ஊடக தர்மம் என்பதையும் மீறி வர்த்தக ரீதியாகவே செயற்படுகின்றன. ஊடகவியலாளர்கள் மாத்திரமல்ல முகநூல் பதிவாளர்களும் கூட ஊடக தர்மத்தை பேண கடமைப்பட்டவர்கள் என்ற நிலை மாறி, சுய விளம்பரத்தை மையப்படுத்தியதாகவே அநேகரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.


ஹக்கீம் மண்டியிட்டார் என்ற செய்தியும் விளம்பர யுக்தியே. அமைச்சரின் சகோதரரினால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்வில், அமைச்சரின் சகோதரருக்கு அறிமுகமான குறிப்பிட்ட சிலர் அழைக்கப்பட்டுள்ளனர். அதில் அழைக்கப்படாத சிலரும் பங்கேற்றுள்ளனர். உண்மையில், இந்நிகழ்வு இரகசிய நிகழ்வாக இருந்திருப்பின் அழையா விருந்தாளிகள் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். அதேநேரம் அழையா விருந்தாளிகளை வைத்துக்கொண்டு அமைச்சர் ஹக்கீம் கட்சியை காப்பாற்ற மண்டியிட்டார் என்ற செய்தி வெறும் வதந்தி என்பதை ஐந்தறிவுள்ள எவரும் இதன் மூலம் விளங்கிக் கொள்வர். 

எனவே இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கலந்துரையாடல் என்பது தெளிவாகின்றது. அந்தவகையில் பிரயாண கொடுப்பனவாக 2000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில், அமைச்சர் றிசாத் கலந்து கொண்ட வில்பத்து நிகழ்விலும் கூட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் 2000 ரூபா பிரயாண கொடுப்பனவாக வழங்கப்பட்டது. ஒரு நிகழ்வுக்கு அழைத்தால் இவ்வாறான கொடுப்பனவு வழங்குவது மனிதாபிமான செயற்பாடாகும்.

சாதாரண இப்தார் நிகழ்வொன்று இன்று சிலரின் வாய்க்கு இனிப்பு கிடைத்தது போல் ஆகிவிட்டது. இதனை வைத்துக் கொண்டு சிலகாலம் அரசியல் நடத்துவர். இது அரசியலில் சகஜம்தான். இருப்பினும் இங்கு அவதானிக்கப்பட வேண்டியது ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரின் நடத்தை கோலங்களாகும். 

இப்தார் பற்றி பிழையான வதந்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதும் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கூட்டாகவோ அல்லது தனிபட்ட ரீதியில் இச்செய்திக்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அந்தவகையில், இது காழ்ப்புணர்ச்சி கொண்டோர் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக வெளியிடும் பிழையான செய்தி என்று சிலர் மறுப்பறிக்கை விட்டனர். இதுவே ஊடகவியலாளர்களின் சிறந்த பண்பாகும். அல்லது இந்நிகழ்வில் கலந்து கொண்டோர் பிழையான தகவல்களை வழங்கி இருந்தால் அவர்கள் உண்மைக்கு மாற்றமாக மிக கேவலமான காரியத்தை செய்துள்ளனர். அவர்கள் அதற்கு பிராயச்சித்தம் தேட வேண்டும்.

அதேநேரம் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வராதோர் நிகழ்வுக்கு வராததன் காரணத்தை அல்லது நிகழ்வு பற்றிய அபிப்பிராயத்தை ஏற்பாட்டாளரிடம் தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து அழைப்பிதலை முகநூலில் போட்டு வீணான வதந்திகளை பரப்புவது நாகரிகமாகாது. அமைச்சருக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதன் மூலம் அமைச்சரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியோ தெரியவில்லை. 

இங்கு ஆச்சரியம் என்னவெனில், இந்நிகழ்வில் கலந்து கொள்ளாத சிலர் அமைச்சர் ஹக்கீம் ஏதோ அரச சதியில் ஈடுபட்டது போன்று புலனாய்வுக் கட்டுரைகளை எழுதத் தொடக்கியுள்ளனர். இன்னும் சிலர் பலருக்கு அழைப்புகளை எடுத்து உங்களுக்கும் இப்தாருக்கு அழைப்பு வந்ததா என்று ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர். ஊடகவியல் என்ற பேரில் இவர்கள் தங்களது ஆண்மையை இழந்து கொண்டிருக்கின்றனர்.

சீனாவின் தயாரிப்பில், மலிவான விலையில் கிடைக்கும் கமராவை வைத்துக் கொண்டு ஒரு அரசியல்வாதியின் செய்தியை மட்டும் வெளியிட்டுத் திரியும் சிலர் தங்களை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திக் கொண்டு, ஊடக தர்மத்தை மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு முகநூலில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல. அதற்காக அந்தக் கட்சியை அழித்து விட்டுத்தான் முஸ்லிம்  சமூகம் முன்னேற வேண்டுமென நினைப்பவர்கள் கோமாளித்தனமான அரசியலே செய்ய முனைகின்றனர். இவர்களால் அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் 20 பேருடன் மாத்திரமல்ல 2000 பேருடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்றே விமர்சனங்கள் இருக்க வேண்டுமே ஒழிய இவ்வாறான கீழ்த்தரமான விமர்சனங்களின் ஊடாக அரசியல் செய்யவோ அல்லது தமக்கு விசுவாசமான அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தவோ இது போன்ற கோழைத்தனமான செய்திகளை வெளியிடுவோர் தவிர்ந்து கொள்ள வேண்டும்.  

றிஹாம் இக்பால், கல்குடா

Post a Comment

0 Comments