ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றாக இணைந்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் கோரி புத்தளம் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மாராவில நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம் என்ற கோரிக்கையுடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
நாத்தாண்டி ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கடற்றொழில் பிரதி அமைச்சர் தயாசிரித திசேரா, முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, முன்னாள் தென்னை அபிவிருத்தி பிரதி அமைச்சர் விக்டர் எண்டனி பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ, வடமேல் மாகாண சபை முதல்வர் சுமல் திசேரா, வடமேல் மாகாண சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷ, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான பியசிரி ராமநாயக்க, ட்ரேவின் பெர்ணான்டோ ஆகியோர் உட்பட நாத்தாண்டி மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், நாத்தாண்டி ஸ்ரீ.ல.சு.கட்சியின் அனைத்து அரசியல் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடித்து மிக விரைவாகவே சுதந்திரக் கட்சி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், சுதந்திரக் கட்சியினுள் உள்ள வேற்றுமைகள் கலையப்பட்டு ஒற்றுமை மேலோங்க வேண்டும் எனவும் இங்கு கூடியிருந்தோர் தெரிவித்தனர்.
இவர்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகாமான நேரம் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்சமயம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ள போதும் அது இந்த சத்தியாக்கிரப் போராட்டத்துடன் மேலும் வலுப்பெற வேண்டும் என பிராத்திப்பதாகவும் இங்கு கருத்து தெரிவித்த தயாசிரித திசேரா தெரிவித்தார்.


0 Comments