மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கான நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில், தனது புகைப்படத்துக்கு பதில் நாயின் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
மிட்னாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதான சவும்யதீப் மஹாதோ என்ற மாணவர், இந்த ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து ஐ.டி.ஐ. தொழிற்கல்வியில் சேர முடிவெடுத்த அவர், அதற்கான நுழைவுத்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்தார். அவருக்கான நுழைவுத்தேர்வு அடையாள அட்டையை சில தினங்களுக்கு முன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்தபோது, அதில் மஹாதோவின் படத்துக்கு பதில் நாயின் படம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து மிட்னாப்பூர் பகுதிக்கான தேர்வு நடத்தும் அதிகாரியை சந்தித்த மஹாதோ, தனது நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில் உள்ள குளறுபடி குறித்து முறையிட்டார். இதனையடுத்து உடனடியாக நாயின் படம் நீக்கப்பட்டு மஹாதோவின் படம், அவரது அடையாள அட்டையில் இணைக்கப்பட்டது.
இதன்பின் நிம்மதியடைந்த அவர் திட்டமிட்டபடி இன்று நுழைவு தேர்வு எழுதினார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் இது போன்று தேர்வு எழுத விண்ணப்பித்தவரின் அடையாள அட்டையில் பசுமாட்டின் புகைப்படம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


0 Comments