Subscribe Us

header ads

வடபுல முஸ்லிம்களின் மிள்குடியேற்ற சவால்கள்”-குறித்த பார்வை

(ஜெஸ்மி எம்.மூஸா.)

 

வில்பத்து காட்டுக்குள் புகுந்து முஸ்லிம்கள் அரபுக் கொலணியை அமைத்து விட்டார்கள் என்ற பொதுபலசேனாவின் கூச்சல் ஒருபக்கமும் வில்பத்து முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்கின்ற உரிமைக் கோசங்கள் இன்னுமொரு பக்கமும் சங்கமமான நிலையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஜப் எம்.காசிம் ”வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள்” நூலைத் தவழ விட்டிருப்பது காலத்தின் தேவை குறித்தான கட்டியம் கூறும் முயற்சியே.


இலங்கை முஸ்லிம் சமூகம் தலைப்பினில் முஸ்லிம்கள் வந்த வரலாற்றை அறிமுகம் செய்து வடபுல முஸ்லிம்களின் பூர்வீகம், கல்வி நிலை, இனநல்லுறவு, புலிகளின் வக்கிரங்களால் வட புல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது முதல் அனுபவித்த அவலங்கள், அரசியல் முன்னெடுப்புக்களில் முன்நிலையானவர்களும் தலை இழுத்தவர்களும், ஏமாற்றமளித்த பிரபா-ஹக்கீம் ஒப்பந்தம் உட்பட அரச ஒப்பந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்கள் முதலியவற்றுடன் நல்லாட்சியில் விடிவு கிட்டுமா? என்ற எதிர்பார்ப்பினையும் பதிவாக்கித் தன் நூலைச் சமைத்துள்ளார் சுஜப்.

அனுபவத் தேறலின் கரைசலாய் வருகின்ற எழுத்துக்கள் உயிருள்ளவை என்கின்ற முருகையனின் கருத்தியல் சாற்றோடு ”வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் நானும் ஒருவன்” என்ற சுஜபின் ஆரம்பம் உணர்ச்சிக் கவர்ச்சியோடு நூலிற்குள் அழைத்துச் செல்கிறது.

வேதாந்தியின் ”சவால்களை சாதனையாக்கும் சரித்திர புருசர்கள், தினகரன் முன்னாள் ஆசிரியர் எஸ்.அருளானந்தனின் “புலிகளின் இனச்சுத்திகரிப்பு அவலங்கள்” நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீனின் ”மீள்குடியேற்ற சவால்களை உலகறியச் செய்யும் முயற்சி”, தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவரின் ”புலிகளின் செயலுக்காக வெட்கித் தலைகுனியும் வடபகுதித் தமிழர்”, தினகரன் இணை ஆசிரியர் க.குணராசாவின் “புலிகளின் அட்டூழியங்களுக்கு மத்தியிலும் தமிழரின் நன்றியுணர்வு” ஆகிய முன்னுரைக் குறிப்புக்கள் நூலிற்கு அணிசேர்த்துள்ளதுடன் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்தும் புலிகளின் வரலாற்றுக் கொடூரத் தவறுகள் குறித்தும் ஊடக ஜாம்பவான்களாக இருந்து நிலைமைகளை அவதானத்துக்குள்ளாக்கிய அருளானந்தம், செந்தில் வேலவர், குணராசா ஆகியோரைப் பேச வைத்து சுஜப் இந்நூலில் ஆவணப்படுத்தியிருப்பது இன உறவாளர்களுக்கு உணர்ச்சி மேலிட வைக்கும் பதிவுகளாகும்.

48 மணிநேரத்திற்குள் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற செய்தியை மட்டும் அறிந்திருந்த எம்மைப் போன்ற வரலாற்றுப் பின்நிலை வருகையாளர்களுக்கு ” அன்று 1990 ஓக்டோபர் 25 ஆம் நாள் காலை 8 மணி இருக்கும். புலிகளின் அறிவித்தல் வானில் மிதக்கிறது. முஸ்லிம்கள் அனைவரும் வீட்டையும் கிராமத்தையும் விட்டு வெளியேற வேண்டும். பணம்-நகை எதனையும் எடுத்துச் செல்லக் கூடாது. இவற்றை புலிகளின் காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும். எடுத்துச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும். வழிச் செலவுக்கு 500 ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதி. 48 மணி நேரம் தவறும் பட்சத்தில் உங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை” என்கின்ற சுகைபின் நேர்முக வருணனை எம்மைக் கண்ணீர் துளிய வைப்பதுடன் வெளியேற்றத் தேவை மட்டுமல்ல வேறு தேவைகளும் புலிகளுக்கு இருந்துள்ளது என்பதும் பறையாகிறது.

காத்தான்குடி-ஏறாவூர் பள்ளிவாசல்களில் அரங்கேற்றிய பாசீச வேட்டை, மற்றும் வடபுலத்தின் கல்வியியலாளர்கள், செல்வந்தர்கள், சமூகப்பற்றாளர்கள் மீது நடத்திய வெறியாட்டம், சுமார் 22 ஆயிரம் வீடுகள் தரைமட்டமார்க்கப்பட்டும் பொருட்கள் சூறையாடப்பட்டும் விட்ட செய்திகள், 79 பள்ளிகளும் 65 வரையிலான முஸ்லிம் பாடசாலைகள் அழிக்கப்பட்ட தகவல்கள் முதலியவற்றை கணிப்பீட்டுச் சான்றாதாரத்துடன் முன்வைத்துள்ளார் சுஜப்.

”வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள் றிஸாட் பதியுதீனுக்கு மகுடம் சூட்டுவதை வாசித்து மகிழுங்கள்“ என்ற வேதாந்தியின் குறிப்புரைப்பகுதியும் ”மீள்குடியேறும் மக்களுக்கு அபயம் அளித்தவர் அமைச்சர் றிஸாட் மட்டுமே. அவரது பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்கின்ற நுலாசிரியரின் பதிவு முதலியவற்றுடன் அமைச்சர் குறித்த பல்வேறு சான்றுத் தகவல்களின் நிழலில் நோக்கும் போது மீள்குடியேற்ற சவால்கள் றிஸாட்டின் அரசியல் உந்துதலுக்கான ஆவணம் என்கின்ற விமர்சனம் சுகைபை நோக்கிப் பாயக் கூடும். வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற ஆவணங்களில் அமைச்சர் றிஸாடை தள்ளிவிட்டு நோக்குகின்ற பார்வை நேர்மையானதா? என்ற சுஜபின் எதிர்வினா மேற்போன்ற கண்ணாடியாளர்களை விடையில்லாது அலைய வைக்கும் என்பதில் ஜயமில்லை.

”முகாம்களை விட்டுப் புதிய இடங்களில் குடியமர்வு” என்ற பக்கத்தில் மர்ஹும்களான அமைச்சர் அஷ்ரப், சுந்தர மூர்த்தி அபூபக்கர், நூர்த்தீன் மசூர், றிஸாட் ஆகியோரின் புகைப்படங்களுடன் அவர்களின் குடியேற்ற முயற்சிகளை ஆவணப்படுத்தியுள்ள சுஜப் ஏ.சீ.எஸ் ஹமீட் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் அவ்வப்போதான முன்னெடுப்புக்கள் குறித்தும் இந்நூலில் சாரப்படுத்தியுள்ளார். இதனை வாசிப்போருக்கு சில உண்மைகள் புலப்படும். அட்டைப்படத்தில் வரும் றிஸாடின் முகம் தாங்கிய வெளிப்படுத்தல் உள்நுழைவாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததே
இடம்பெயர்வு தொடர்பான கசப்பான உண்மைகள், மீள் குடியேற்ற சலசலப்புக்கள், வில்பத்து குறித்தறியும் ”மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு ”வடபுல எழுச்சிப் பேரணி, இனப்பிரச்சினைத் தீர்வும் முஸ்லிம்களும்இ முஸ்லிம்களுக்கு விமோசனம் தராத போர் நிறுத்த உடன் படிக்கை, இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும், முஸ்லிம்களின் கூட்டுப் பலமே எங்கள் போராட்டத்தின் அடிநாதம் என்ற மர்ஹும் அஷ்ரபின் நேர்காணல் ஆகிய பின்னிலையுள்ள தலைப்பாடல்களும் நூலுக்கு வலிமை சேர்த்துள்ளன.

பதிவகளை மீட்டி ஒரு இனச்சுத்திகரிப்பின் மீட்சியினை இந்நூலில் அறிந்து கொண்டாலும் ”இளமைக் காலத்தின் 24 ஆண்டுகள் மண்ணாகின. அது தீரும்பி வரப்போவதில்லை. உடல் தெம்புடன் ஓடியாடி ஆற்ற வேண்டிய அத்தனை பணியும் வீணாகின. உள்ளம் பலம் இழந்து உடலும் வலிமை இழந்து விட்டன. 24 ஆண்டுகள் அவமே மனவேதனையுடன் கழிந்து விட்டன. இவை மீண்டும் பெற முடியாத இழப்புக்களாகும்“ என்ற சுஜபின் உள்ளக்கிடக்கையின் உந்துதலுக்கு எம்மிடம் ஆறுதல் கிடையாது.

எது எவ்வாறான போதும் சுகைப் தன் அனுபவத் தேடல்களை இங்கு பதிந்துள்ளார். இது ஒரு ஆவணத் தொகுப்பானகும். வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான மூன்று தசாப்த காலத்துப் பதிவுகளை சிறிய நூலினுடாக வெளிப்படுத்த எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது. எனினும் பல்வேறு தளங்களினாலான மிகப் பெரும் தேடலின் சாரமாகவே இதனைக் கொள்ள முடியும். முஸ்லிம் ஆவணப்படுத்தல்கள் முயற்சிகள் குறைந்துள்ள நிலைமை மாறி பல்வேறு பிரதேதசங்களிலும் இவ்வாறான ஏர்கோலங்கள் முடுக்கி விடப்பட்டுள்ள இக் கால சூழலில் எதிர்கால ஆய்வுத் தேவையாளர்களுக்கு சுஜபின் இந்நூல் வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை.


எடுத்தவைகளுக்கெல்லாம் அறிக்கை விடுகின்றவர்களும் வீறாப்புப் பேச்சுக்களால் மக்களை கொள்ளை கொண்டுள்ள அரசியல் தலைமைகளும் வில்பத்து விடயம் றிஸாடுக்கு உரியது என்கின்ற பிற்போக்கு நிலை மௌனத்திலிருந்து கலைந்து முஸ்லிம் தேசத்தின் விடிவுக்காய் முன்னெழுவோம்.அவ்வாறான முயற்சிகளுக்கு சுஜப் போன்றோரின் எழுத்துக்கள் உத்வேகமளிக்கட்டும்.

Post a Comment

0 Comments