Subscribe Us

header ads

கோடிக்கணக்கில் பணம் புரளும் பிசினஸ் : சென்னையில் 600 கடத்தல் குருவிகள்!



விமானத்தில் பறப்பதை அவன் கற்பனை கூடச் செய்து பார்த்திருக்கவில்லை. ‘யாரடி நீ மோகினி’ பட தனுஷ் போல், சீட் பெல்ட் கூட மாட்டத் தெரியாமல் விழித்திருக்கிறான் அவன். வயது 24. சிவந்த, மெலிதான உடல்வாகு, மடிப்புக் குலையாத சட்டை, பேன்ட், அழகாகக் கட்டப்பட்ட டை என்று நவநாகரீகம் காட்டினாலும், கிராமப்புற அப்பாவித்தனம் முகத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. ராமநாதபுரம் அருகே குட்டியூண்டு கிராமம்தான் சொந்த ஊர். வேலை தேடி தேடி ஓய்ந்துபோனதுதான் மிச்சம். அப்போதுதான் அந்த வாய்ப்பு கிடைத்தது.

‘பி.இ முடிச்சிருக்கேன்...’
பெருமிதமாய்ச் சொன்னான்.
‘அதனால... பெரிய இன்ஜினியரு வேல கேக்கியோ...’
பெரிய மனிதரின் எடக்கு மடக்கு அதிரவைத்தது.
‘அதெல்லாம் இல்ல...’

‘நீ பாக்கப்போறது குருவி வேலை. பிளைட் ஏறுனதும் மனசு பறந்துடக்கூடாது. ஒன்னோட உசிரு முக்கியம் இல்ல. நீ கொண்டுவர்ற பொருளுதான் முக்கியம். உசிரு போனாலும் பொருளு முக்கியம். சம்பாதிக்கணும். குடும்பத்தக் காப்பத்தணும்னு உண்மையான அக்கறை ஒனக்கு இருக்குல்ல. அப்ப ரிஸ்க் எடு... ரிஸ்க் எடுத்தாத்தான் துட்டுலே’ ‘லே’ என்று அவர் சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை. இன்ஜினியர் என்றாலும் பணம் கொடுத்தால் ‘லே’ சொல்வார்களோ... ‘என்னலே... போலே... வாலே’ என்று அம்மாவும், அப்பாவும், நண்பர்களும், உடன் விளையாடிய சிறுமிகளும், சொந்தக்காரர்களும் சொல்லும்போது சுகமாய் இருக்கும். ஆனால், பணத்துக்காக ‘லே’வைக் கேட்பது வலித்தது. Aவிமானம் பறந்துகொண்டிருந்தது. சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்தான். அவன் விழுங்கியவை தங்கக்கட்டிகளை. ‘விமானம் சீக்கிரம் சென்னை சேர வேண்டும் கடவுளே’ என்று வேண்டிக்கொண்டான். 

‘எனி ஸ்னேக்ஸ், டிரிங்ஸ்’ விமானப் பணிப்பெண் அழகாக இருந்தாலும் ரசிக்க முடியவில்லை. ‘நோ...’பணிப்பெண் தோள்பட்டையைக் குலுக்கிக்கொண்டு சென்றுவிட்டாள். அவளைப் ேபால் அழகான மனைவி வாய்க்க வேண்டும். சாயம் போடாமலேயே சிவந்திருக்கும் உதடுகளைக் கவ்விக்கொள்ள வேண்டும். பறக்காமலேயே விமானத்தில் பறப்பது போல் ஜிவ்வென்றிருக்கும். ஆனால், கற்பனைக்கு இது நேரம் இல்லை. வயிறு மொடமொடத்தது. தங்கக்கட்டிகள் வெளியேற வேண்டும். மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கியபோதுதான் நிம்மதி. செக்கிங்கில் தப்ப வேண்டும். ஆனால், அதிகாரிகள் தூங்கி வழிவதுபோல் தெரிந்தது. அவன் கொண்டுவந்த சூட்கேஸை ஸ்கேனிங் கருவிகள் பரிசோதித்தாலும், அவன் பரிசோதிக்கப்படாமல் தப்பிவந்தது அதிர்ஷ்டம்தான்.

‘சூட்கேஸ்ல... ரெண்டே ரெண்டு டிரஸ் சார்’ ‘ம்ம்...’ ‘முரட்டு ஆபீசருக்கு வயிற்றில் இருப்பது தெரியவில்லை’ என்று சந்தோஷித்தான். வயிறு கழுவும் வேலைகளை உடனடியாகச் செய்ய வேண்டும். கத்தை கத்தையாய்க் கையில் பணம் புரளப்போவதை நினைத்ததும் மனம் பறந்தது. Aஜூன் 22ம் தேதி. மீனம்பாக்கம் போன்ற சுறுசுறுப்பு இல்லாவிட்டாலும், விசாகப்பட்டினம் விமான நிலையம் அரக்க பறக்கக் காட்சியளித்தது. ‘இன்னிக்குச் சிக்கினீடா மாப்ளே’ என்பது போல், விமானப் பயணிகளிடம் இவ்வளவு தங்கம் பிடிபடும் என்று அதிகாரிகளே எதிர்பார்த்திருக்கவில்லை. அன்று சோதனை கடுமையாக இருந்தது. 56 பேர் சிக்கிக்கொண்டார்கள். அத்தனை பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் பலர் இளைஞர்கள். இளைஞிகளும் இருக்கிறார்கள். 63 கிலோ தங்கம் சிக்கியது. மொத்தம் ரூ.17 கோடி.

‘வாவ்’ என்று அதிகாரிகளிடம் உற்சாகம் பொங்கியது. ‘சின்ன சின்ன ஏர்போர்ட்டா பார்த்து குருவிங்க கடத்திக் கொண்டு வர ஆரம்பிச்சுடுச்சு... எத்தனை நாள் பொறி வச்சிருப்போம். சிக்காம இந்தப் பசங்க எத்தனை நாளா தப்பிச்சுருப்பானுங்க...’ ‘ஆனா என்ன ஆபீசர்... தங்கத்தைப் பறிச்சு வச்சுக்குவீங்க... அவங்கத் தப்பிக்கத்தான் போறாங்க... அடுத்தமுறை வேற டெக்னிக்... வேற ஏர்போர்ட்...’ ‘தங்கத்தைச் சுருட்டற ஆபீசருங்க இருக்கத்தானே செய்றாங்க...’ ‘நான் அப்படியில்ல’ ‘நானும் அப்படியில்ல. ஆனா மத்தவங்க...’ ‘தங்கம் என்றால் மயங்கத்தான் செய்கிறார்கள்’ ‘கடத்தல் குருவிகள் நமக்கு வில்லன்கள். ஆனா அவங்களுக்கு அவங்க எப்போதும் ஹீரோக்கள் போல. ரிஸ்க் எடுக்கத் தயங்க மாட்டாங்க’ ‘நான் உன்னைப் போல் அழகானவன் இல்லை. ஆனால் என்னைப்ேபால் அழகானவன் அப்படீன்னு பேஸ்புக்ல யாரோ.... ஷேர் பண்ணியிருந்தாரு... ஆசனவாயில் மறைக்கறது, உயிரையே பணயம் வச்சு என்னன்னவோ புதுப்புது டெக்னிக்ல கடத்தத்தான் செய்றாங்க...’ பேச்சு நீண்டுகொண்டே இருந்தது.

பிடிபட்ட குருவிகள் சிறையில் கூட அடைக்கப்படலாம். அது பிடிபடும் தங்கத்தின் அளவு அதிகமாக இருப்பதைப் பொறுத்தது. சிைறக்கம்பிகள் அவர்களுக்காக வளையும். Aநல்ல வேளை. அன்று அவனும் விசாகப்பட்டினம் வழியாக வந்திருக்க வேண்டியவன்தான். ஆனால், செல்லவில்லை. சிக்கியிருந்தால் கஷ்டம்தான். மற்ற குருவிகளைப் போல் இன்னும் செட்டில் ஆகவில்லை. அடுத்த முறை வேறு நாடு. ஆனால் கடத்தி வருவது போதைப்பொருள். கேப்சூலாகத் தருவார்கள். விழுங்கிவிட வேண்டும். வயிற்றைக் கிழித்துக்கூட எடுக்கலாம். இருந்தால் என்ன... விமானப் பணிப்பெண் போல் அழகான மனைவி அமைய வேண்டும். அதைவிட முக்கியம். பி.இ படிக்க வைத்த அப்பா, பணம் செலவழித்து படிக்கத் தைரியம் அளித்த அம்மா, அண்ணன் , தம்பி, தங்கை... எல்லாரும் மகிழ்ந்திருக்க ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று சொல்லியிருக்கிறார்களே... போதைப்பொருட்கள் எல்லாம் கிராம் அளவுதான் என்றாலும், விலையோ கோடிக்கணக்கில். 

‘விலையெல்லாம் தெரிஞ்சுவச்சு எனக்கென்ன ஆகப்போவுது... குருவிகளுக்கு முக்கியம் கமிஷன். இன்னும் 2, 3 முறை ரிஸ்க் எடுத்தால் போதும். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவேன். அப்புறம் கிராமத்தில் கூட சின்னதா டீக்கடை வச்சுக் காலத்தை ஓட்டிறலாம்’ அவன் கணக்குப் போட்டுக்கொண்டே இருந்தான். எத்தனையோ குருவிகள், இவனைப்ேபால் கணக்குப் போட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஏழ்மையில் இருக்கும் குருவிகள் எப்போதுமே உயரப் பறக்க ஆசைப்படுகின்றன. Aசிங்கப்பூர், மலேசியா, துபாய், கொழும்பு என்று எங்கு பறந்தாலும் சரி... செல்லும்போது இங்கிருந்து விலை மலிவான பொருளைக் கொண்டுசென்று, அங்கு விலை மதிப்புள்ள பொருளாக அதை விற்றுவிடுவதும் உண்டு. குருவிகளுக்கு அது இரட்டிப்பு வருவாய். திரும்பும்போதுதான் தங்கமா, போதை வஸ்துவா என்பது தெரியும். சென்னை விமான நிலையத்தில் இப்போது ரிஸ்க் ஜாஸ்தி. குட்டி, குட்டி விமான நிலையங்களை அடைந்து தப்புவதுதான் எளிதாக இருக்கிறது. ஆனாலும், விசாகப்பட்டினம் போல் மாட்டிக்கொண்டால் சிக்கல்தான்.

‘படிச்சவங்க லட்சக்கணக்குல இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் எப்படி வேலை தர முடியும்’ அவன் வீட்டுக்கு வந்த பிறகும் யோசித்தான். ‘சொந்தத் தொழில் செய்யலாம். ஆனால் முதலீடு வேணுமே. அப்புறம் அடிமை வேலை பார்த்தாகணும் முதல்ல... தொழில் பழகறதுக்காக...’ குருவியாக இருப்பது அவனுக்குக் கவுரவமாகப்பட்டது. ‘ஒரு கிலோ தங்கம் கொண்டுவந்தா ரெண்டரை லட்சம் கிடைக்குதே’ என்று பெருமிதப்பட்டான். கொண்டுவரும் தங்கமோ, போதை வஸ்துவோ எங்கு செல்கிறது என்பது குறித்து அவன் யோசித்திருக்கிறான். அவனுக்குக் கொடுக்கப்படும் சமிக்ஞைகளை வைத்து யாருக்கோ, யாரிடமோ கடத்தல் பொருட்களைக் கொடுத்துவிட்டு செல்வான். அவர்கள் யார்.... சரியானவர்கள்தானா என்பதெல்லாம் தெரியாது. சில நாட்கள் முன்பு திருச்சி விமான நிலையத்தில் விமான இருக்கையிலேயே அரை கிேலா தங்கத்தை வைத்துவிட்டு குருவி பறந்திருக்கிறது. அந்த மாதிரி ரிஸ்க் இதுவரை அவனுக்கு நேரவில்லை என்பதே சந்தோஷம்தான். மாட்டிக்கொள்வோம் என்றால் கழிவறைக்குச் சென்று குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வருவது நல்லது. அதை எப்படியும் பெற்றுவிடுவார்கள் கடத்தல்காரர்கள். அப்படியே பெற முடியாவிட்டாலும், அரசுக்குத்தானே போகும். கடத்தல்காரர்களின் முகத்திரை கிழியாதல்லவா?

Aஅதெல்லாம் சரி. எங்கிருந்து போதை வஸ்துகளும், தங்கமும் கொண்டுவந்து கொடுக்கப்படுகிறது? குருவிகளுக்குக் கொடுப்பவர்கள் கொக்குகள். சென்னையில் மட்டும் 600க்கும் மேற்பட்ட குருவிகள் இருக்கிறார்களாம். குருவிகள் மாட்டிக்கொண்டால் பெரிதில்லை. கொக்குகள் சிக்கினால்தான் சிக்கல். சில நேரங்களில் அதிகாரிகளுக்கும். நேர்மையான அதிகாரிகளைக் கொக்குகளுக்குப் பிடிப்பதில்லை. துப்பாக்கியால் கூடப் பேசுவார்கள். ஆனால், எப்போதும் கொக்குகள் தவம் இருக்கிறார்கள். ஆம். உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு. கொக்குகள் சிக்கியதாக என்றும் படித்ததாக ஞாபகம் இல்லை. சிங்கம், புலி போல் கொக்குகள் வனத்தில் வசிப்பார்களோ... குருவிகளுக்கே அது தெரிந்தால்தானே!

Post a Comment

0 Comments