உலகில் முதன்முறையாக ஆய்வகத்தில் வைத்து செயற்கை மனித ரத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டெம் செல்கள் மற்றும் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் இருந்து உருவாக்கப்படுகிறது.
அதை பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மையத்தின் விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த ரத்தத்தை மனிதர்களின் உடலில் செலுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் அதிகம் கிடைக்காத அரிய ரத்த பிரிவுகள் வேண்டிய நேரத்தில் கிடைக்க செய்ய முயல்கிறோமே தவிர ரத்த தானத்தை முழுமையாக தவிர்க்கும் எண்ணம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் வருகிற 2017–ம் ஆண்டில் அதாவது இன்னும் 2 ஆண்டுகளில் செயற்கை ரத்தம் நேரடியாக மனித உடலில் செலுத்தி சோதனை செய்யும் நிலையை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்த சோகை, மற்றும் ரத்த அழிவு சோகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செயற்கை ரத்தம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.


0 Comments