பங்குச்சந்தையில் பெயர் குறிப்பிடப்பட்டு இன்னும் நிர்மாணிக்கப்படாதுள்ள கற்பிட்டி பீச் ரிசோட் ஹோட்டல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்தது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஹோட்டலை நிர்மாணிக்காமை தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஹோட்டலை நிர்மாணிப்பதற்கெனத் தெரிவித்து, 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விநியோகிக்கப்பட்ட பங்குகள் மூலம் கிடைத்த 281 மில்லியன் ரூபா திரட்டப்பட்டுள்ளது.
24 தொடக்கம் 30 மாதங்களுக்குள் ஹோட்டலின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதாக குறித்த நிறுவனம் உறுதி வழங்கியிருந்ததாக பிணையங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்தது.
இந்த கொடுக்கல் வாங்கலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் யார்?
கற்பிட்டி பீச் ரிசோட் ஹோட்டலின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள சிட்டர்ஸ் லெசர் நிறுவனமே திட்டமிட்டிருந்தது.
பிரேமா குரே, சிட்டர்ஸ் லெசர் நிறுவனத்தின் தலைவராக பதவி வகிப்பதுடன், திலித் ஜயவீர, வருணி பெர்னாண்டோ, சந்தன் தல்வத்த, சார்வ அமரசேகர, ரஜிந்த செனவிரத்ன, மனோஜ் பிலிமத்தலவ, சுரேஷ் டி மெல் மற்றும் வாசுல பிரேமரத்ன ஆகியோர் அதன் பணிப்பாளர்களாக செயற்படுகின்றனர்.
சிட்டர்ஸ் லெசர் நிறுவனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நோக்கும்போது, 2014 ஆம் ஆண்டு கற்பிட்டி பீச் ரிசோட் ஹோட்டலின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், அதன் கட்டுமானப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.
ஆகவே, பங்குதாரர்களின் பணத்திற்கு என்ன நேர்ந்தது என பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது.
ஆரம்பத்தில் இந்தத் திட்டத்தின் ஒரு பங்கிற்கான விலை 17.50 சதமென குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், அதன்பின்னர் பங்கொன்றின் விலை 24 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று அந்த ஹோட்டல் திட்டத்திற்கான பங்கொன்றின் விலை 3.60 சதமாகக் குறைவடைந்துள்ளது.
குறித்த ஹோட்டலின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான திலித் ஜயவீரவிடம் பொலிஸ் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு பங்குச் சந்தையின் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட விடயத்தினை அண்மையில் பல ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.
பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்களின் போது பாதிக்கப்பட்ட பல முதலீட்டாளர் எமக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.
உங்களிடமும் அதுபோன்ற தகவல்கள் இருப்பின், எமக்கு அறிவியுங்கள்.



0 Comments