இலங்கை மகளிர் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்குமிடையில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளாகக் களமிறங்கிய கெய்சியா மற்றும் மத்தேவுஸ் ஆகியோர் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டனர். முறையே இருவரும் 34 மற்றும் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கm டெய்லர் 86 ஓட்டங்களையும், டொட்டின் 69 ஓட்டங்களையும் விளாசினர். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
50 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது. அதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி இலக்கு ஓட்ட எண்ணிக்கை 189 ஓட்டங்களாகக் குறைத்துக் கொடுக்கப்பட்டது. அதன்படி இலங்கை அணி 40.2 ஓவர்களில் 189 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. ஆனால் இலங்கை மகளிர் அணியால் 40.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதனால் இலங்கை மகளிர் அணி 18 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.-VK-


0 Comments