Subscribe Us

header ads

வருங்கால கணவர்களைப் பற்றிய தகவல்களை அறியும் உரிமை வேண்டும்: சவுதியில் இளம்பெண்கள் போர்க்கொடி



திருமணத்துக்கு பின்னர் தங்களது கணவரின் இளமைக்கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை கேள்விப்படும் சில பெண்கள் விவாகரத்துக்கு செல்வதால் சவுதியில் தற்போது விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில் திருமணத்துக்கு முன்னதாகவே தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் உரிமை வேண்டும் என சவுதியில் உள்ள இளம்பெண்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதற்கு சவுதி அரசு அனுமதி அளித்து விட்டால் அரபு நாடுகளில் பெண்களுக்கு இவ்வகை உரிமையை அளித்த முதல் நாடாக சவுதி அரேபியா விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.

பெண்களுக்கான திருமணத்தை நிச்சயிக்கும் குடும்ப தலைவரான தந்தை, மணமகன் வசதியானவராக இருக்கிறாரா? மத ஒழுக்கம் சார்ந்த விவகாரங்களில் எப்படி உள்ளார்? என்பதை மட்டுமே அளவுக்கோலாக வைத்து மாப்பிள்ளை தேடுவதால் அவரது கடந்தகால வாழ்க்கையை பின்னாளில் அறியவரும் பெண்கள் விவாகரத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. இப்படி, 70 சதவீதம் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.

இதை தவிர்க்கும் வகையில் சவுதி பெண்களுக்கு வருங்கால கணவர்களைப் பற்றிய தகவல்களை அறியும் உரிமை வழங்கப்பட வேண்டும் என கருத்து கூறும் குடும்பநல பெண் வழக்கறிஞரான நஜ்வா சலா, அதே வேளையில், திருமணத்துக்கு முன்னர் சற்று முரண்பாடான முறையில் வாழ்ந்துள்ளார் என்பதை வைத்து, ஒரு ஆணை முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. முன்னர் செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி, திருந்தி, திருமணத்துக்கு பின்னர் ஒழுக்கசீலர்களாக வாழும் ஆண்களும் உண்டு என்பதை நாம் மறுத்துவிட முடியாது எனவும் இவர் குறிப்பிடுகிறார்.

சவுதி அரசின் சட்ட ஆலோசகரான டாக்டர் அஹமது அல்-முஆபி, இந்த கோரிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அனைத்து ரகசியங்களுக்கும் போர்வையாக நானே இருக்கிறேன் என்று இறைவன் கூறியுள்ளான். இந்த கோரிக்கை அந்த காரணத்தை அர்த்தமற்றதாக்கி விடும். திருமணம் என்பது ஒரு ஆணின் அனைத்து ரகசியங்களையும் வெளிப்படுத்தும் நிர்ப்பந்த நிகழ்ச்சி அல்ல. இப்படி அனைத்து விஷயங்களையும் மணமகளுடன் பகிர்ந்து கொண்டால் கணவர்கள் மீது மனைவியரின் பிடி இறுகிவிடும். 

ஒரு ஆணின் ரகசியம் அவனுக்கு மட்டுமே சொந்தமானது. அதை வெளிப்படுத்த வேண்டும் என யாரையும் வற்புறுத்த கூடாது. குறைகளோ, பிரச்சனைகளோ இல்லாத ஒரு ஆண்மகனை இந்த உலகில் பார்ப்பது மிகவும் மிகவும் கடினம் என்று இவர் கூறுகிறார்.

Post a Comment

0 Comments