Subscribe Us

header ads

வாழ்க்கை வாழ்வதற்கே.....


மாணவ சமுதாயத்தினை பொறுத்த வரை வாழ்க்கை என்பது படிப்பு, சவால்கள், வெற்றிகள், தோல்விகள் என பல வகைப்படுகின்றது. வாழ்க்கை என்பது பல அனுபவங்களை ஒருங்கே கொண்டது.

ஒரு சில நேரங்களில் இருண்ட சூழ்நிலை ஒருவரை நிலை தடுமாறச் செய்கின்றது. அத்தகைய தருணங்களில் மாணவ - மாணவிகள் செய்வதறியாது திகைத்து தற்கொலை என்ற கொடூர முடிவு வரை சென்று விடுகின்றனர். 


கடந்த 40 வருடங்களாக மாணவ சமுதாய தற்கொலை கவலைக்குரியதாக உள்ளது. உலக அளவில்
வருடத்தில் 2 லட்சம் மாணவர்கள் தற்கொலையில் இறப்பதாகவும் 40 லட்சம் மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் பரிட்சை சுமையின் காரணமாக தினம் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என வெளிநாட்டு புள்ளி விவரம் குறிப்பிடுகின்றது. 

தென்னிந்தியாவை மாணவ தற்கொலை தலை நகரம் என குறிப்பிடுகின்றது. இந்த புள்ளி விவரங்களை முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தோன்றினாலும் ஆய்வில் உண்மையும் இருக்கத்தானே செய்யயும். எண்ணிக்கை வேண்டுமானால் சற்று மாறுபடலாம். படிப்பு என்பது வாழ்க்கையை மேம்படுத்தும் வழி. 

அந்தப் படிப்போடு வாழ்க்கையினை எதிர் கொள்ளும் திறமையினை நம் மாணவ சமுதாயம் முழுமையாக பெறுகின்றதா என்பது தான் இங்கு கவலை அளிக்கின்றது. அநேக மாணவர்களுக்கு தோற்று விடுவோம் என்ற பயம் ஏனோ மிக அதிகமாக இருப்பதால் தோல்வியையே தழுவுகின்றனர். இவர்களுக்கு:- 

* அதிக வெட்கம், தனக்கு சாதிக்கும் திறமை இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இன்மை, தான் எதற்கும் லாயக்கில்லை என பெற்றோர்களால் வர்ணிக்கப்படுவது நிஜமே என்ற எண்ணம் போன்ற பல மன உணர்வுகள் இவர்களை தாக்குகின்றன. 

* எப்பொழுதும் குற்ற உணர்வோடு இருக்கின்றார்கள். 

* வருங்காலம் பற்றிய கிலி பிடித்துக் கொள்கின்றது.

* குத்திப் பேசும் பெற்றோர், கேலி செய்யும் சக மாணவர்கள், கை விடும் ஆசிரியர்கள் இவர்களை விட்டு ஒதுங்குகின்றார்கள். இறுதியில் வாழ்க்கையினையே முடித்துக் கொள்ள முனைகிறார்கள். 

சுமாரான பாஸோ, தோல்வியோ அதற்கு அந்த ஒரு நபர் மட்டுமே முழு பொறுப்பாக மாட்டார். 

சூழ்நிலை, குடும்பம், உடல்நிலை, மனநிலை இத்தனையுமே பொறுப்பாகின்றது. 

மாணவர்களே!! சற்றே சிந்தியுங்கள்!!.... 

* படிக்கும் காலத்தில் நேரமும், பெற்றோரின் பணமும் வீணடிக்கப் படலாமா? 

* பெற்றோரை பார்த்து உன்னை யார் என்னை பெற்றுக் கொள்ளச் சொன்னது என்று கேட்பது சரிதானா? 

* வீட்டை விட்டு ஓடுவதும், தற்கொலை செய்து கொள்வதும் தீர்வு ஆகுமா? 

* அக்கம், பக்கம், உற்றார் உறவினர் சமுதாயம் முன்பு உங்கள் பெற்றோர் தலைகுனிவது தான் நீங்கள் அவர்களுக்கு காட்டும் நன்றியா? சுற்றியுள்ள சக மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். 

* தேர்வில் பாதிக்கப்பட்ட ஒருவரை பார்த்து கேலி செய்து பார்க்காதீர்கள். 

* எதுவும் எப்பொழுதும் யாருக்கும் நிகழலாம். அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லதாகவும் இருக்கலாம். 

* முடிந்தால் கூட இருந்து உதவுங்கள். 

* ஆதரவாக பேசுங்கள். 

அனைவரும் அறிய வேண்டிய சில கருத்துக்கள். :

பரிட்சையில் ஏன் தோல்வி ஏற்படுகின்றது? 

* போதுமான அளவு பரிட்சைக்கு தயாராகவில்லை. 

* முறையாக படிக்க வில்லை. 

* தேவையற்ற அதிக பயம். இவை அகலுவதற்கு குறிப்பிட்ட நபருக்குத் தேவை ஊக்குவிப்பே. 

பெற்றோர்களே! பெற்றோர்களே!

மாதா, பிதா, குரு, தெய்வம் என நாம் பெற்றோர்களுக்கே முதலிடம் கொடுக்கிறோம். உங்களைத் தவிர உங்கள் பிள்ளைகள் மீது அக்கறை உடையவர் உலகில் யாரும் இருக்க முடியாது. அன்பு அமைதியான, தெளிவான நீரோடையாக இருந்தால் பயன் உண்டு. அன்பு காட்டாற்று வெள்ளமாக இருந்தால் அது அழிவு தான். 

மாணவர்களின் தோல்விக்கு பெற்றோரின் கடுமை மட்டும் ஒரு காரணம் அல்ல. கண் மூடித்தனமான அன்பும் ஒரு காரணம் தான். கடந்த மூன்று வருடங்களில் நம் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் - மாணவியர்களில் சுமார் 16000 பேர், பரிட்சை தோல்வியால் நடந்த தற்கொலை செய்தவர்கள். 

படிப்பில் சுமார் என்பதனை வைத்து ஒருவரின் வாழ்வு நிர்ணயம் செய்யப்படுவதில்லை. பரீட்சையில் சில படங்களில் நான் தோல்வி பெற்றேன். என் நண்பன் அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்றான். இன்று என் நண்பன் மைக்ரோ சாஃப்ட் இஞ்சினியராக இருக்கிறான். நான் மைக்ரோ சாஃப்ட் நிறுவனராக இருக்கிறேன். 

பில் கேட்ஸ் இந்த வரிகளை ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு மாணவ-மாணவியரும் வீட்டில் எழுதி வைத்து அன்றாடம் படிக்க வேண்டும். நீங்கள் முடிவெடுக்கும் கல்வியினை பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பது பிள்ளைகளுக்கு வாழ் நாள் முழுவதற்கும் நீங்கள் கொடுக்கும் தண்டனையாக ஆகிவிடக்கூடாது. 

விரும்பிய படிப்பு கிடைக்காவிட்டாலும் எது நல்லதோ அதே எனக்கு நடக்கும் என்ற மனப்பக்குவம் உங்களால் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். பிரபஞ்ச சக்தி அநேக நல்ல சக்திகளை தன்னுள் கொண்டுள்ளது. ஆக நாம் நல்ல விஷயங்களை நினைத்துக்கொண்டே இருக்கும் பொழுது டி.வி, ரேடியோ அலைவரிசை போல் அவைகளே பிரபஞ்சத்திலிருந்து நம்முன் இறங்கும். 

அதைத்தான் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய் என்று கூறப்படுகிறது. இதனை நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டால் மட்டுமே உங்கள் பிள்ளைகளையும் அவ்வாறு உருவாக்க முடியும். முன்பெல்லாம் பிள்ளைகள் சீக்கிரம் எழுந்து பள்ளி நேரத்திற்கு சற்று முன்பே பள்ளிக்குச் சென்று விடுவார்கள். 

இன்று மாணவ சமுதாயம் விடிய விடிய படிப்பதும் விழிப்பதும் என பள்ளி இறுதி படிப்பின் பொழுது படாதபாடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பலவித தோல்விகளை சந்திக்கின்றனர்.

பெற்றோர்களாகிய நாம்தான் இதனை மாற்ற வேண்டும். இது நம் கடமை. 

* கண்களை திறந்து வைத்திருங்கள், பெண்ணோ, பையனோ எதில் சரியில்லை என்றாலும் உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு கண்டிப்பாய் அதனை உணர்த்தும் அதனை ஒதுக்காமல் அதில் மூழ்கி அவனை/ அவளை திருத்தி விடுங்கள். 

அன்னை தெரசாவால் மக்களுக்காக தன்னை உருக்கிக் கொள்ள முடிந்ததென்றால் உங்களால் உங்கள் பிள்ளைகளுக்காக நீங்களும் மாறவேண்டும். அதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன தெரியுமா? 

* உங்கள் மகன் அல்லது மகனின் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருங்கள். 

* படிக்க, தூங்க, சற்று ரிலாக்ஸ் செய்ய என நீங்களே அட்டவனை போட்டு உடன் இருந்து செயல் படுத்துங்கள். 

* உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதினை தெளிவாக சொல்லுங்கள். வேளைக்கொரு பேச்சு அவர்களை குழப்பி விடும். 

* உங்களுக்கு அவர்கள் மீது இருக்கும் அன்பினை நல்ல வார்த்தைகளால் அன்றாடம் வெளிப்படுத்துங்கள். கொடூர வார்த்தைகள் விஷத்தினை விட அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். 

* உங்கள் குழந்தைக்கு என்ன பிரச்சினை என்பதனை உங்களால் உணர முடியாவிடில் அப்புறம் அம்மா, அப்பா என்ற பட்டம் எதற்கு? சிறந்த பெற்றோர்கள், சாதாரன பெற்றோர்கள், பிரச்சினையான பெற்றோர்களை என பெற்றோர்கள் வகைப்படுத்தலாம். சிறந்த பெற்றோர்களை பற்றி கவலையே இல்லை.

மாறாக அவர்களுக்கு விருது கொடுக்கலாம். இங்கு சிறந்த பெற்றோர்கள் என்பது முதல் மார்க் வாங்கும் மாணவரின் பெற்றோர் அல்லது பிள்ளையை வெளிநாட்டில் படிக்க வைக்கும் பெற்றோர் அல்லது சொத்து சேர்த்து வைக்கும் பெற்றோர் என்று அர்த்தமல்ல. 

* சமுதாயத்தினை புரிந்து கொள்ள வைத்த, நல்ல பண்புகளை விதைத்து உருவாக்கிய பெற்றோர்களையே சிறந்த பெற்றோர்கள் என்று இங்கு குறிப்பிடுகின்றோம். 

* சாதாரன பெற்றோர்கள் பிரச்சினை இல்லாதவர்கள். ஆனால் இவர்களால் மாணவர்களுக்கு முன்னேற்றத்தினை கொண்டுவர இயல்வதில்லை. இதற்கு விழிப்புணர்வு தர வேண்டும். 

* பிரச்சினையான பெற்றோர்கள் அவர்களுக்கும், பள்ளிக்கும் தனது பிள்ளைகளுக்கும், சமுதாயத்திற்கும் பிரச்சினையே அளிப்பார்கள். பிள்ளைகளிடம் சதா குற்றம் கண்டு பிடிப்பார்கள். பள்ளியை குறை கூறுவார்கள். இவர்களால் இவர்களது பிள்ளைகள் மனதில் கடும் பாதிப்பிற்குள்ளாவார்கள். இத்தகு குணமுடையவர்கள் கீழ்கண்டவாறு தங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யலாமே. 

* உங்கள் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருங்கள். பெற்றோரின் உறுதுணை பிள்ளைகளை வியக்கும் விதத்தில் மாற்றி விடும். 

* மாணவரின் பிரச்சினை என்ன என்று கூட இருந்து பாருங்கள். அப்பிரச்சினையில் உங்கள் மனதினையும் உள் செலுத்துங்கள். பிரச்சினை தீரும் வரை அதிலேயே கவனமாய் இருங்கள். 

* உங்கள் குழந்தைகள் எதிரில் அவர்களது ஆசிரியரை பற்றியோ... பள்ளியைப் பற்றியோ தவறாக பேசாதீர்கள். 

* உங்கள் குழந்தைகளுக்கான தவறான சிபாரிசுக்கு செல்லாதீர்கள். 

பெற்றோர்கள் செய்யும் பிழைகள் :

* மிகவும் அதிகமாக பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்க்காதீர்கள். இந்த வாழ்க்கையை அவர்கள் வாழ் நாள் முழுவதும் உங்களால் தரமுடியாது. இந்த உலகத்தில் அவர்கள் கால்களால்தான் அவர்கள் நடந்து செல்ல வேண்டும். 

* உதவுகிறேன் என்ற பெயரில் அவர்களை சுமக்காதீர்கள். எதனையும் தானே செய்து கொள்ளும் திறன் அவர்களுக்கு இல்லாது போய்விடும். 

* வெற்றியும், தோல்வியும் யாருக்கும் எதிலும் சகஜமானது என்பதை புரிய வையுங்கள். இல்லையெனில் வீட்டில் நீதான் புலி என உங்களால் வர்ணிக்கப்படும் உங்கள் பையன் வெளியில் எலி ஆகிவிடுவான். 

* பிள்ளை தப்பாக தன்னை நினைத்துக் கொள்வானோ என்று முடியாததை எல்லாம் நீங்கள் செய்ய வேண்டியது இல்லை. மாறாக முடியவில்லை இல்லை என்று உணர்த்துவது அவர்களுக்கு வாழ்க்கையின் இயல்பினை நன்கு உணர்த்தும். 

* உங்கள் வாழ்க்கை அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Post a Comment

0 Comments