Subscribe Us

header ads

வித்தியாவின் பிணத்தில் ஏறி நின்று இஸ்லாத்தை வளர்க்க முற்படலாமா ?

-M.I Mubarak-


சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு பல்லாயிரம் உயிர்கள் அழிந்தபோது நாம் இன,மதத்துக்கு அப்பால் மனிதன் என்ற அடிப்படையில் கண்ணீர் சிந்தினோம்.

அப்போது ஒரு கிறிஸ்தவ அமைப்பு இது தெய்வத்தின் தண்டனையாகும் எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை கொழும்பில் பல இடங்களில் ஒட்டியது.அதை நான் படம் பிடித்து வந்து பத்திரிகையில் பிரசுரித்து அந்த அமைப்பைக் கிழி கிழி எனக் கித்தோம்.

மறு நாள் அந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுகணக்கான உறுப்பினர்கள் எமது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து எமது ஊழியர்களைத் தாக்க முற்பட்டனர்.அவர்களை எதிர்த்துப் போராடினோம்.

அதிலும் எம்முடன் பணிபுரிந்த கிறிஸ்தவ சகோதரர்களே எம்மையும் முந்திக் கொண்டு அவர்களைத் தாக்க முற்பட்டனர்.

இதைத்தான் மனிதம் என்பது. பிணத்தில் ஏறி நின்று சமயங்களை வளர்க்கும் வேலைகளைச் செய்யக்கூடாது.

இதைபோல்தான் மார்க்க அறிவு இல்லாத-மார்க்க வெறி மட்டுமே உள்ள எமது இஸ்லாமிய சகோதரர்கள் சிலர்,சகோதரி வித்யாவின் பிணத்தில் ஏறி மார்க்கம் வளர்க்கப் பார்க்கிறார்கள்.

அபாயா போன்ற உடலை மறைக்காத ஆடைகளை அணியாததால்தான் இந்த பாலியல் வல்லுறவு இடம்பெற்றது என்றொரு கருத்தைச் சொல்ல வருகிறார்கள்.

அந்த சகோதரியின் பாலியல் வல்லுறவுக்கும் அவர் அணிந்திருந்த ஆடைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது?

மது போதையில்-காம வெறியில் இருந்த அந்தக் கயவர்கள், அந்த சகோதரி அபாயா அணிந்து சென்றிருந்தால் மட்டும் விட்டு வைத்து இருப்பார்களா?

உடல்கள் முழுமையாக மறைக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் இந்தியாவில் இப்போதும் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்படுவதை இவர்கள் அறியவில்லையா?

மிருகங்களையே விட்டுவைக்காத காமுகர்களை ஆடை மாத்திரம் கட்டுப்படுத்துமா?திட்டமிட்டு செய்பவனுக்கு உடலை மறைத்து இருந்தால் என்ன மறைக்காமல் இருந்தால் என்ன.

உடலை முழுமையாக மறைத்து ஆடை அணிவது பெண்ணின் மானத்தைக் காப்பாற்றுவதோடு ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டாமல் பாலியல் குற்றங்களைக் குறைக்கும்.இதுதான் உண்மை.ஆனால்,பாலியல் வல்லுறவுக்கு அறவே உள்ளாகமாட்டாள் என்று அர்த்தமில்லை.

ஒரு வாதத்துக்கு அபாயா பாலியல் வல்லுறவை முழுமையாகத் தடுக்கும் என்றே வைத்துக்கொள்வோம்.

அதைச் சொல்வதற்கான சந்தர்ப்பம் இதுவா?வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் வேலையல்லவா இது.

இவ்வாறான சந்தர்பங்களில் நீங்கள் உண்மையைச் சொன்னாலும் அது மார்க்கத்துக்கு கெட்ட பெயரையே கொண்டு வரும்.

கொலையாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கொதித்துப் போய் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணை விமர்சிப்பது போல்-பாலியல் வல்லுறவுக்கு அந்தப் பெண்ணே காரணம் என்பது போல் கருத்து வெளியிடுவது இஸ்லாத்துக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

இதுதான் இஸ்லாத்தை எடுத்து சொல்லும்-இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் லட்சணமா?

இந்த இடத்தில் இஸ்லாத்தைப் போதிப்பதற்கு இன்னொரு விடயம் இருக்கின்றது.அதுதான் கொலைக்குக் கொலை என்ற இஸ்லாமிய தண்டனை.அதைச் சொல்லுங்கள்.இச்சந்தர்ப்பத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.இஸ்லாமிய சட்டம் சரிதான் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.இது யாருடைய மனதையும் புண்படுத்தாது.இன்று அனைவரும் இந்த தண்டனையைத்தான் கோரி நிற்கின்றார்கள்.

நாம் சொல்லுகின்ற விடயம் உண்மையாக இருந்தாலும்,சில சந்தர்ப்பங்கள் அதைப் பொய்யாக்கி விடும்.அவ்வாறான ஒரு சந்தர்ப்பம்தான் வித்தியாவின் கொலை.

ஆகவே,எமது செயல் மார்க்கத்தையும் இழிவுபடுத்தக் கூடாது.இன உறவையும் பாதித்து விடக்கூடாது என்பதை மனதில் நிறுத்தி செயற்படுங்கள்.

Post a Comment

0 Comments