– இம்தியாஸ் எம்-
மத்திய மாகாண சபை உறுப்பினர் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணிக்கு கண்டி டி.எஸ்.சேனாநாயக்க வீதியில் இன்று கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கட்சித் திறப்புக்கு எதிராக பிரதேச அரசியல் வாதிகள் தூண்டுதலில் சுமார் 10 முதல் 15 பேர் வரையானோர் இதற்கு எதிராகவும் கோசம் எழுப்பிக் குழப்பத்தை உருவாக்க முனைந்த போதும் மக்கள் ஆதரவுடன் திறப்பு விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றதாக தேசிய ஐக்கிய முன்னணி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் மத்திய மாகாணத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த அசாத் சாலி, மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலேயே போட்டியிடக்கூடும் எனும் எதிர்பார்ப்பு நிலவுவதால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் சக்திகள் இவ்வாறு குழப்பத்தை விளைவிக்க முனைந்த போதும் தான் அதை எதிர்கொள்ள நேரடியாகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்த இடத்திற்குச் சென்றதாகவும் அதன் போது அங்கிருந்தவர்களை பொலிசார் அப்புறப்படுத்தியதாகவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்ததோடு இத்திறப்பு விழாவானது கண்டி மாவட்டத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சக்திகளும் இருப்பதையும் அதேவேளை மக்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பையும் வெளிப்படுத்திய ஒரு நெகிழ்வான நிகழ்வாகவும் அமைந்ததாகவும் தெரிவித்தார்.
நிகழ்வு குறித்துக் கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, அசாத் சாலியின் முயற்சிகளையும் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டியதோடு மத்திய மாகாணத்திற்கு மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்ததொரு தலைவராக அவர் உருவெடுத்துள்ளதாக தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஏனைய முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் மைத்ரிபாலவின் வெற்றி உறுதியானதற்குப் பிறகே வந்து இணைந்து கொண்டார்கள். ஆனால், அசாத் சாலியோ கடந்த இரண்டரை வருடங்களாகவே மஹிந்த ராஜபக்சவை பகிரங்கமாக எதிர்த்துப் பேசுவதோடு முஸ்லிம் சமூகத்துக்காகப் பணியாற்றி வருகிறார் எனவும் தெரிவித்தார்.
தனது கட்சி அலுவலகத்தை நிறுவி, அரசியல் பணிகளை விஸ்தரிக்கும் செயற்திட்டம் நீண்ட நாட்களாக பல காரணங்களுக்காக தள்ளிப் போனதாக தெரிவித்த அசாத் சாலி, தற்போது அதற்கான காலம் கனிந்து வந்திருப்பதாகவும் பல மாவட்டங்களில் தமது கட்சி விஸ்தரிப்புப் பணிகள் தொடரப்படவிருப்பதாகவும் தெரிவித்ததோடு அரசியலில் எதிரிகள் இருப்பது சகஜம் எனவும் குறித்த சம்பவத்தை நான்கு பேர் சேர்ந்து திட்டமிட்டு தமது ஆதரவாளர்களைக் கொண்டு நடாத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியதோடு தாம் இது போன்ற எதிர்ப்புகளை எதிர்பார்க்காமல் அரசியலில் இருக்கவில்லை எனவும் தெரிவித்ததோடு இன்ஷா அல்லாஹ் தமது கட்சிப் பணிகள் துரிதமாக விஸ்தரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் அமரர் காமினி திசாநாயக்கவின் புதல்வர் மயந்த திசாநாயக்க மற்றும் மனோ கணேசன் கட்சி சார்பில் திரு. வேலுகுமாரும் உரையாற்றியிருந்தனர்.


0 Comments