புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 13ம் திகதி காத்தான்குடியில் நடைபெற்ற ஐம்பெரும் எழுச்சி விழாவில் பங்கேற்று உரையாற்றிய உங்களின் அரசியல் குருநாதரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அவரது உரையின் இறுதியில் உங்களை ‘ஏமற்றுக்காரன்’ எனத் தாக்கிப் பேசியது பலருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்திய போதிலும், மண்டபத்திலிருந்த அவரின் அடிவருடிகள் பலரும் அதற்கும் கரகோஷம் செய்து ‘ஹூ’ சப்தமெழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
என்னதான் உங்களுக்குள் அரசியல் பிளவுகள் ஏற்பட்டிருந்தாலும் கிழக்கு மாகாண சபையில் இப்போதும் கௌரவ சபை உறுப்பினராக இந்த ஊரின் பிரதிநிதியாக இருந்து கொண்டிருக்கின்ற உங்களை அவர் இப்படியெல்லாம் ‘நீ’ , ‘உன்’ போட்டு ஒருமையில் மலினமாகப் பேசியிருக்கக்கூடாது. எதிரியைத் தாக்குவதென்றாலும் அதிலும் தனது அந்தஸ்தைப் பேணிக்கொண்டு தாக்க வேண்டும். ஆனால் உங்களின் அரசியல் குரு நாதருக்கு அந்த நாகரீகமெல்லாம் தெரியாது.
நான்கு வருஷங்களுக்கு முன்னர் நமது கலைந்து போன நகர சபை உறுப்பினர்களை ஊருக்கு அறிமுகம் செய்து வைத்த குட்வின் சந்திக் கூட்டத்தில் என்னையும் அவர் பகிரங்கமாக ‘லஃனதுழ்ழாஹ்’ எனத் திட்டித்தீர்த்துப் பேசியிருந்தார். அதற்கு நான், அடுத்த வாரமே எனது பத்திரிகையில் அவரை ‘ஹிஸ்புஷ்ஷைத்தான்’ என்று பதிலுக்குத் திட்டித்தீர்த்து இம்மையிலேயே அந்தக்கணக்கைச் சரியாக்கிக் கொண்டேன்.
இப்போது நான்கு வருட நகர சபையின் சர்வாதிகாரக் கள்ளாட்சி முடிந்து தனது சகாக்கள் எல்லோரையும் வீட்டுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்வில், உங்களை விழித்து ‘பெரிய தாடியை வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றுகிறாய்’ என்று அவர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? எப்போது சொல்லப் போகிறீர்கள்?
தகப்பனை மாற்றி யாவரையும் ஏமாற்றிய ஹிஸ்புல்லாவின் அரசியல் களம் நீங்கள் ‘முழு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வாக்காளப் பெருமக்களையும் ஏமாற்றியவர்’ என்று கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்து நீங்கள் அரியாசனம் ஏறிய நாள் முதல் நான் எனது பத்திரிகையிலும், இணையதளத்திலுமாக எழுதி வருகிறேன். காரணம் நானும் அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளன் என்ற அடிப்படையில். ஆனாலும் நீங்கள் அது குறித்து இன்று வரைக்கும் வாயே திறக்கவில்லை.
இதிலிருந்தாவது இந்த மக்கள் உங்களை ‘ஏமாற்றுக்காரர்’ எனப் புரிந்து கொண்டு உங்களை விட்டும் விலகி இருந்திருக்க வேண்டும். நானும் உங்களை விழித்து, ‘அப்பன் பெயரை மாற்றி பொய்யான பெயரில் போட்டியிட்டு தேர்தலில் வென்ற ஏமாற்றுக்காரர்’ என்று அப்பட்டமாக எழுத எழுத, உங்களின் அரசியல் குருநாதர் ஹிஸ்புல்லா உட்பட மக்களும் உங்களுக்கு மாலைகள் அணிவித்து நீங்கள்தான் இந்த மண்ணில் மாபெரும் தக்வாதாரி, இறையச்சம்மிக்கவர் என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்து கௌரவித்தே வந்தனர்.
ஆனால் இப்போது உங்களின் புட்டம், சுயரூபம் இதே மண்டபத்திலேயே, உங்களை போற்றிப் புகழ்ந்து போஷித்தவராலேயே பகிரங்கமாகக் கேவலப்படுத்தப்பட்டுக் கிழிக்கப்பட்டு விட்டது. நீங்கள் ‘பெரிய தாடியை வைத்துக் கொண்டு இந்த ஊர் மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்’ என்று இந்த மண்ணின் மைந்தனே பகிரங்கமாகச் சாட்சியம் கூறி விட்டார். அதை அவரது பேச்சடங்கிய ஒலி நாடாவைக் கேட்ட உலகமே தெளிவாக அறிந்து கொண்டுள்ளது. எனவே இனியும் நீங்கள் மௌனமாக இருந்தால் அவரது பகிரங்க சாட்சியம் மேலும் உண்மையாகி, அதுவே உங்கள் வாழ்க்கையின் கேவலமான வரலாறாகவும் ஆகிவிடும். எனவே நீங்கள் ‘யார் இந்த மண்ணில் ஏமாற்றுக்காரர்?’ எனும் தலைப்பில் இந்தத் தருணத்திலாவது பதிலளிப்பீர்கள், பேச முன்வருவீர்கள் என்று நானுட்பட இக்காத்தான்குடிச் சமூகம் எதிர்பார்க்கின்றது.
உங்களின் தகப்பனின் உண்மையான பெயரை மாற்றி யாரோ ஒரு ‘அப்துல் பாறூக்’ என்பவனை அவருடைய சுயலாப அரசியலுக்காக உங்களுக்கு வாப்பாவாக்கி கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் உங்களைப் போட்டியிட வைத்த ஏமாற்றுக்காரன் நீங்களா? அல்லது உங்களின் அரசியல் குருநாதர் ஹிஸ்புல்லாவா? என்கிற உண்மையை இனியாவது நீங்கள் வாய்திறந்து சொல்வீர்களா? பொறியியலாளர் அப்துர் றகுமான் கூட ஒரு பகிரங்க மக்கள் சந்திப்பில் இந்த ‘தகப்பனை மாற்றித் தறுதலையாக்கிய’ விடயத்திற்கு நீங்கள் விரைவாக பதிலளித்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஒலிபெருக்கியில் பேசியும் நீங்கள் அந்தத் ‘தகப்பன் பெயரை மாற்றிய இரகசியத்தை’ப் பற்றி வாய் திறக்கவில்லை. இப்போதாவது சொல்லுங்கள். உங்களின் வாப்பா யார்? அப்துல் பாறூக்கா? முகம்மது பாறூக்கா?
வாக்குக் கொள்ளையும் தேர்தல் முடிவும் ‘2012ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளில் 4000 வாக்குகளை நீங்கள் போட்டியிட்ட கட்சியான ஐ.ம.சு.முன்னணி களவெடுத்துக் கொண்டதன் மூலம்தான் மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது’ என கடந்த இரண்டரை வருடங்களாக நான் மற்றுமொரு குற்றச்சாட்டை முன்வைத்து எனது பத்திரிகையிலும், இணையதளத்திலுமாக எழுதி வருகிறேன்.
எனது இக்குற்றச்சாட்டிற்கு நீங்களும் பதிலளிக்கவில்லை. சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளோ அல்லது அரசாங்கமோ தகுந்த விசாரணை, நடவடிக்கை என்று அந்த விடயத்தில் திரும்பியும் பார்க்கவில்லை. எல்லோருமே ‘கம்’மென்று இருந்து வருகிறீர்கள்.
• தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்ட 08.09.2012ம் திகதி அதிகாலை 02:00 மணி வரை அரச தரப்பு வெற்றியாளர் பட்டியலில் முன்னணியில் இருந்த இன்றைய சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அந்நாள் உங்களின் சக வேட்பாளர் ஓட்டமாவடி சட்டத்தரணி அமீர் அலி, அதிகாலை 05:00 மணிக்கு முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டபோது 21,271 வாக்குகளுடன் எவ்வாறு திடீரெனப் பின்னால் தள்ளப்பட்டார்?
• பட்டியலிலே மிகப் பின்தங்கியிருந்த முன்னாள் முதலமைச்சரும், உங்கள் கட்சியின் சக வேட்பாளருமான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் எப்படி 22,338 அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்திற்கு வந்தார்?
• உங்கள் கட்சியில் போட்டியிட்டு அதிகாலை 2:00 மணிக்கெல்லாம் வென்று விடுவார் என்று பலராலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்ட அலிசாஹிர் மௌலானா எப்படி ‘அவுட்’ ஆனார்?
• உங்களின் ஐ.ம.சு.முன்னணி எனும் கூட்டணிப் பட்டியலில் 1,2,3 என்ற இலக்கங்களில் போட்டியிட்ட ஓட்டமாவடி அமீரலி, ஏறாவூர் சுபைர் மற்றும் உங்களுக்குமாக இம்மாவட்ட முஸ்லிம் மக்கள் தமது மூன்று விருப்பு வாக்குகளையும் போட்டு வெற்றி பெறச் செய்திருக்க, முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு 22,338 விருப்பு வாக்குகளை அளித்த தமிழ் மக்கள் அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட அக்கட்சியின் செயலாளரான பிரசாந்தனுக்கும் ஏன் மற்றுமொரு விருப்பு வாக்கை அளித்து அவரை வெற்றி பெறச் செய்யவில்லை?
• 22,000க்கும் அதிகமான வாக்குகளை பிள்ளையானுக்கு அள்ளி வழங்கி வெற்றி பெறச் செய்த தமிழ் மக்கள், 17,904 விருப்பு வாக்குகளையாவது பிரசாந்தனுக்குப் போட்டிருந்தால் ஏறாவூர் சுபைர் (17,903 வாக்குகள்) ஐ.ம.சு.முன்னணியில் தோல்வியடைந்து பிரசாந்தன் வெற்றியீட்டி மாகாண சபை உறுப்பினராக வந்திருப்பரே..? ஏன் தமிழ் மக்களுக்கு அந்தளவுக்கு ‘அரசியல் ஞானம்’ இல்லாமல் போனது? இந்த ‘திருட்டு வெற்றிக் கணக்கு’ யாரால் பின்னிரவில் தயாரிக்கப்பட்டு அதிகாலையில் வெளியிடப்பட்டது?
• இந்தத் திட்டமிட்ட திருட்டு வெற்றிப் பட்டியலின்படி 5,712 வாக்குகளுடன் மீதி வாக்குகளின் அடிப்படையில் கடைசி ஆசனத்தைப் பெறும் நிலையில் தகுதி பெற்றிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சுயேட்சைக்குழு 08 எப்படி, யாரால் திட்டமிட்டு ஆசனம் இழக்கச் செய்யப்பட்டது?
இவ்வாறான எனது அடுக்கடுக்கான கேள்விக்கெல்லாம் உங்கள் அரசியல் குருநாதருடன் அன்று ஒன்றித்திருந்து உண்டு, களித்து, கொந்தராத்து ஒப்பந்தங்கள் செய்து, கொங்றீட் வீதிகளில் கொள்ளைக் கொமிஷன் பெற்றுச் செயற்பட்ட ‘இறையச்சமுடையவரான’ – ‘தக்வாதாரியான’ உங்களுக்கு நிச்சயம் பதில் தெரியும்.
ஆனால் அப்போதும் உங்களின் அந்த இறையச்சத்தை இந்த அரசியல் வியாபாரிக்கு அடகு வைத்து மௌனித்துப் போய் மாகாண சபை உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டீர்கள். அதன் பிறகும் ‘உடனிருந்து உண்டவனுக்கு இரண்டகம் செய்யக்கூடாது’ என்ற நோக்கத்தில் உங்களின் தகப்பனைக் குறித்துக் கேள்வியெழுப்பி எழுதிய போதும் உண்மையைக் கக்காமல் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் விக்கிக் கொண்டிருந்தீர்கள்.
இப்போது, நீங்கள் ‘ஏமாற்றுக்காரனேதான்’ என்று உங்களுடன் இருந்து, உங்களைப் பயன்படுத்தி, மஹிந்த குடும்பத்திற்கு கிழக்கு மாகாணத்தை மீண்டும் தாரை வார்த்துக் கொடுத்து, தான் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராகி, தனது பொருளாதாரத்தை பல உடனிருந்த பினாமிகளின் மூலமாக உயர்த்திக் கொண்டு உச்சத்தில் இருக்கும் உங்களின் அரியல் குருநாதர் ஊரைக்கூட்டிச் சொல்லியிருக்கிறார். நீங்கள் இன்னமுமா நான் எதிர்பார்க்கும் உங்களுக்குத் தெரிந்த உண்மைகளையெல்லாம் ஊருக்கு மத்தியில் கொட்டி தெளிவுபடுத்தாமல் ‘தீக்கோழி’போல் மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?
அதே ஐம்பெரும் எழுச்சி விழாக் கூட்டத்தில் எமது ஜனநாயகக் கட்சியின் தலைவருடைய படத்துடன் கூடிய பதாதையைப் பற்றி ஒரேயொரு வார்த்தையே விமர்சித்துப் பேசிய ஹிஸ்புல்லாவுக்கு அடுத்த நாள் காலையிலேயே அவருக்கு முன்னும், பின்னும் எரியக்கூடி வகையில் எப்படி சூடாக பதிலளித்துள்ளேன் பார்த்தீர்களா?
ஒரு ஏழைப் பத்திரிகைக்காரனான நானே அப்துர்றவூப் மௌலவியின் ஆதன அபகரிப்பு உட்பட பலவிடயங்களையும் தொட்டுக்காட்டி அவருக்கு பதிலளித்திருக்கும்போது, படித்த மனிதரான, பணக்காரரான, அழ்ழாஹ்வுக்கு மட்டுமே பயந்து அரசியல் செய்வதாகக் கூறிவரும் நீங்கள் ஏன் மூன்று நாட்களாகியும் இன்னும் மூச்சுக்கூட விடமுடியாமல் இந்த ஊரில் ஊமையாகி இருக்க வேண்டும்?
பொறுத்தது போதும்! பொங்கியெழுவீர்!! உண்மையான ஏமாற்றுக்காரன் யார் என்பதை ஊருக்கும் உலகத்திற்கும் உறைக்கும்படியாகச் சொல்லுங்கள்!! வஸ்ஸலாம்.


0 Comments