நெல்லையை சேர்ந்த தனியார் வாகன நிறுவனத்தினர் தங்களின் வாகன சிறப்புகளை விவரிக்க அது பற்றிய படங்களை எடுத்து வருகிறார்கள்.
இன்று காலை கன்னியாகுமரி கடற்கரையில் இது போன்ற சாகச படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அந்த நிறுவனத்தை சேர்ந்த வாலிபர்கள் கிப்சன்(வயது29), ரோசன்(28), சோமசுந்தரம்(25) ஆகிய 3 பேரும் ஒரு ஜீப்பில் கடற்கரை மணலில் சாகசம் செய்யும் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தனர்.
கன்னியாகுமரி சன்செட் பாயிண்டு அருகே காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது கடல் உள்வாங்கி இருந்தது. இதை அறியாத வாலிபர்கள், ஜீப்பை கடலுக்கு அருகே நிறுத்தி விதவிதமாக படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
நேரம் செல்ல செல்ல கடலின் நீர் கரையைநோக்கி வரத்தொடங்கியது. அப்போது அலைகளும் சீற்றத்துடன் எழுந்தன.
படமெடுக்கும் ஆர்வத்தில் கடலில் ஏற்பட்ட மாற்றங்களை வாலிபர்கள் கவனிக்கவில்லை. அவர்கள் படம் எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு அலை பனை மர உயரத்திற்கு எழுந்து வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த அலை ஜீப்பை கடலுக்குள் இழுத்தது.
அப்போது தான் கடல் நீர் தங்கள் அருகே இருப்பதை உணர்ந்த வாலிபர்கள் அங்கிருந்து கரையை நோக்கி ஓட்டம் எடுத்தனர். அலையில் இருந்து அவர்கள் தப்பி விட்டாலும் அவர்களின் ஜீப்பை அலை கடலுக்குள் சிறிது தூரம் இழுத்துச்சென்று விட்டது. இதனால் ஜீப்பை மீண்டும் கரைக்கு கொண்டு வர முடியாமல் தவித்த வாலிபர்கள் இந்த தகவலை நிறுவனத்திற்கு தெரிவித்தனர். உடனடியாக ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் ஜீப்பை மீண்டும் கரைக்கு இழுக்கும் பணி நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் நடந்த இச்சம்பவம் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


0 Comments