நூறு நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்தே புதிய அரசு மக்கள் ஆணையைப் பெற்றது. அந்தக் காலப் பகுதி தற்போது முடிவடைந்துள்ளது. எனவே, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு முன்னாள் எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மைத்திரி அரசின் 100 நாள் வேலைத் திட்டத்துக்குரிய நாட்கள் முடிந்துள்ளன. எனினும், இக்காலப்பகுதியில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. 19 கூட பாதியாகவே உள்ளது. அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. 100 நாட்களுக்கு மக்கள் வழங்கிய ஒட்சிசன் முடிவடைந்துவிட்டது எனப் பிரதமரே கூறுகின்றார்.
அப்படியானால், நாடாளுமன்றத்தை உடன் கலைத்து தேர்தலுக்கு செல்லுமாறு நாம் வலியுறுத்துகிறோம். மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோஷம் விண்ணதிர முழங்குகிறது.
மக்கள் அவர் பின்னால் படையெடுக்கின்றனர். இந்நிலையில், அவருக்கு பெருகிவரும் செல்வாக்கை குறைப்பதற்காக உள்ளூராட்சி சபைகளை கலைப்பதற்கு அரசு திட்டம் தீட்டுகிறது. எது நடந்தாலும் மஹிந்தவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு குறையாது.
இன்று முஸ்லிம் மக்களும் அவர் பக்கம் திரும்புகின்றனர். அபயராம விகாரையில் நடந்த சந்திப்பில், குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரினார்.
பொதுபலசேனாவின் செயற்பாடுகளையும் விமர்சித்தார். முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்கப்போவதில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.
இதேவேளை, இலங்கைக்கு வந்திருந்த தமிழ் எம்.பிக்கள் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்காமை கவலையளிக்கின்றது. அத்துடன், ஜோன் கெரியும் முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்திக்கவில்லை. இதன் பின்னணியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய சூழ்ச்சி இருக்கின்றது” – என்று முன்னாள் எம்.பி. அஸ்வர் குற்றஞ்சாட்டியுள்ளார்


0 Comments