Subscribe Us

header ads

இன, மத பேதமின்றி அனைவரும் எந்த பாடசாலையிலும் அனுமதி பெறலாம்!


அனைத்து மாணவர்களும் எந்த பாடசாலையில் அனுமதி பெற விரும்பினாலும் எவ்வித இன, மத பேதமுமின்றி அனுமதியினை பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுகேகொட சென். ஜோன் கல்லூரியின் 100 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் நுகேகொட சென் ஜோன் கல்லூரி வளாக மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதிக்கு அணிவகுப்புக்களுடனான மரியாதை வழங்கி கௌரவித்தனர்.

1915 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தக்கல்லூரி ஆரம்ப காலத்தில் ஆண்கள் பெண்கள் என  இரு பாலாருக்கும் பொதுவான பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஆங்கில கலவன் பாடசாலையாக விளங்கி வந்த இப்பாடசாலையில் 1934 ஆம் ஆண்டளவில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் வகுக்கப்பட்டனர். இதில் ஆண்களுக்குரிய பாடசாலையே அன்றிலிருந்து இன்று வரைக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரியாக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து மாணவர்களும் எவ்வித வேறுபாடுகளுமின்றி இலவச கல்வியின் மகிமையை உணர்ந்து சம தரமாக மகிழ்ச்சியுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மாணவர்கள் தாம் விரும்பும் பாடசாலைகளை தெரிவு செய்வதற்கு அவர்களுடைய இனமோ மதமோ தடையாக இருக்காது. பாடசாலைகளானது சிங்களப்பாடசாலை, தமிழ்பாடசாலை, முஸ்லிம் பாடசாலை என பெயர் குறிக்கப்பட்டு வகுக்கப்படுவதை நான் உண்மையிலேயே வெறுக்கிறேன். அத்துடன் பாடசாலையானது கல்வி கற்பதற்கான களமாக மட்டுமில்லாது மாணவர்களிடையே சமூக புரிந்துணர்வு ஒற்றுமை நல்லிணக்கத்தினை சிறு வயதிலிருந்தே தோற்றுவிக்கும் களமாக அனைவராலும் பார்க்கப்படவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளில் காணப்படும் பாடத்திட்டம் நவீன காலத்துக்கு ஏற்ப சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். 100 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட சித்திர ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சின்னங்களும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஷ, அர்ஜூன ரணதுங்க, ஹர்ஷ டி சில்வா, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுனில் பிரேமஜயந்த, மேல் மாகாண மாகாணசபை உறுப்பினர் உபாலி கொடிகார, பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments