அஸ்ஸலாமு அலைக்கும் வ வ
இன்றைய கால சூழ்நிலையில் அரசியல் என்ற விடயம்
அனைவரின் மனதிலும் நன்கு பரீட்சயமான ஒன்றாக இருக்கும். காரணம் அரசியல் எனும்
சாக்கடையில் அரங்கேறும் நாடகங்களும் பித்தலாட்டங்களும் ஓராயிரம். அரசியலுக்கும்
உலக விடயங்கள் அனைத்திற்கும் இலக்கணம் கற்பித்து தந்த மாநபியின் பரம்பரையில்
வந்தவர்களான நாம் இன்று அரசியலுக்காக நடாத்தும் அமளி துமளிகல்தான் எத்தனை.
இலங்கை அரசியலை பொறுத்த வரை முஸ்லிம்கள் வெறும்
கறி வேப்பிலைகளாகத்தான் பயன்படுத்தபடுகின்றனர். அது இலங்கையில் முஸ்லிம்களின்
அரசியல் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகின்ற ஒரு சடங்கு. முஸ்லிம்
அரசியல் தலைமைகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கிடையே காணப்படுகின்ற பிரிவினைகள் மற்றும் அரசியல்
தலைமைத்துவ ஆசைகள் போன்றவைகளே இதற்கு காரணங்களாகும்.
இலங்கையில் சிறுபான்மையாக காணப்படுகின்ற முஸ்லிம்களாகிய நாம் நம்பிக்கை
வைத்து சில நபர்களை எமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்றோம்.அவர்கள்
எமது நம்பிக்கைக்கு பொருத்தமில்லாதவர் என அறிந்தும் மறுபடியும் அவருக்கு அதே
பிரதிநிதித்துவம் கொடுத்து அனுப்புகின்றோம். இந்த இடத்திலேயே எமது சமூகம் பாரிய
பிழையை செய்கின்றது. தனி நபர்களின் வங்குரோத்து புத்தியினாலும் தமது
சுயலாபங்களுக்ககவும் சமூகத்திற்கு இவரால் எந்த பிரயோசனமும் இல்லையென்று அறிந்தும்
சிலர் சில அரசியல்வாதிகளின் வாலை பிடித்து கொண்டு திரிவதை நாம் கண்கூடாக காணலாம்.
இவாறான அரசியல் தலைமைகளால் எமது சமூகத்திற்கு
வரும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளித்து செலவது என்றே குழப்பமாக இருக்கும். அது அவ்வாறிருக்க
அவர்களின் அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ளவே துணிவார்கள். இலங்கையில்
முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை பொறுத்த வரை தற்காலத்தில் அல்ஹாஜ் ரிஷாத்
பதியுத்தீன் ஒரு சமூகநலன் பேணும் அரசியல்வாதி என்றே கூறலாம். காரணம் அவர் வன்னி
மாவட்ட அரசியல் அங்கத்த்வம் உடையவராக இருந்தாலும் நாட்டில் வாழும் சகல சமூகங்களின்
நலன்களிலும் அக்கறை கொண்ட ஒருவர். அவருடைய அரசியல் இருப்பை பொறுத்து கொள்ளாத சில
ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் அவரை பழிவாங்கும் நோக்கில் எமது சமூகத்திற்கு
கேடு விளைவிக்கும் சில செயல்களை செய்து வருகின்றனர்.
வில்பத்து குடியேற்றம் என்று சொல்லப்படுகின்ற
மன்னார் மறிசிக்கட்டி மக்களின்
மீள்குடியேற்றம் இன்று இலங்கையில் வாழும் சகல மக்கள் மத்தியிலும் பேசப்படுகின்ற
மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது.வாழ்கையில் இன்னல் பட்டு இடிபட்டு
நொந்து நூலாகி சொந்த இடங்களில் குடியேற காத்திருக்கும் எம் மக்களின் ஆசைகளில் சில
சோதனைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றது. அது அரசியல் பழிவாங்கல் எனும் போர்வையில்
நடனமாடிக் கொண்டிருக்கின்றது. இதில் கவலைப்பட வேண்டிய விடயம் இந்த நாடகத்தில்
முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும் நடிகர்களாக
இருக்கின்றனர். வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ளவர் அமைச்சர் ரிசாத்
பதியுத்தீன் மாத்திரமே. காரணம் அம் மக்களில் மீள் குடியேற்றத்தில் ஓயாது பாடுபவர்
அவர் மாத்திரமே. ஒரு அரசியல்வாதி நல்லவரா கெட்டவரா என்று நாம் தீர்மானிப்பது
இவ்வாறான சில விடயங்களிலேயே.
சுமார் இருபது வருட காலங்கள் தமது வாழ்வில்
பல்வேறு இன்னல்களை சந்தித்த எம் மக்கள் தமது இறுதி காலங்களை தாய் மண்ணில்
கழிக்கலாமென சென்றாலும் அங்கேயும் சோதனை. அற்பமான அரசியல் பிழைப்பை நடாத்தும் சில
அரசியல்வாதிகள் தமது மக்களுக்கு ஒரு பிரச்சினை என்று உணர்ந்தும் கை கொடுக்கவில்லை
என்றால் அவர்கள் அரசியல் அங்கத்துவம் பெற்று என்ன பயன். உண்மையான முஸ்லிமாக
இருந்து என்ன பயன். நபிகளாரின் சந்ததி என்று மார் தட்டி என்ன பயன். மறிச்சிகட்டி
மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
மாத்திரமே இந்த நொடிவரை இறைவனை துணையோடு தனியாகவே நின்று போராடிக்
கொண்டிருக்கிறார். முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எமது நாட்டில் பஞ்சமா..???
இல்லை மனசாட்சி உள்ள முஸ்லிம்
அரசியல்வாதிகளுக்கு எமது நாட்டில் பஞ்சம். எமது சமூகத்தில் பஞ்சம். தனிப்பட்ட சில
காரணங்களுக்காக அவர்களுக்கிடையே இருக்கும்
பகைமை உணர்வை சமூகம் எதிர்கொள்ளும் இவ்வாறான பாரிய பிரச்சினைகளிலும்
காட்டுகின்றனர். கேவலமாக அவர்கள் எண்ணுவதுமில்லை, காரணம் பதவி ஆசை, அதிகார மோகம்
அவர்களை ஆட்டுவிக்கின்றது..
சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற பண்புகளை உலகுக்கே
அறிமுகம் செய்த மாநபியின் மார்கத்தில் இருந்து கொண்டு அற்பமான பேராசைக்காக அற்பமான
அரசியலுக்காக இடும் சண்டைகள் கேவலம். மரணத்தையும் மக்களையும் நினைத்து பாருங்கள்
உங்களது குரோதம் , பகைமையுணர்வு அனைத்தும் மறைந்து விடும். அரசியலுக்காக செய்யும்
அடிமுட்டாள்தனமான வேலைகளை இனியாவது நிறுத்தி கொள்ளுங்கள். அரசியல் பழிவாங்கல்களை
விட்டு விட்டு அந்த அப்பாவி மக்களின் கண்ணீர்த்துளிகளை தாங்கும் சில கைகளாக இருப்பதற்கு
எம்மை இறைவன் ஆக்கட்டும்.
நன்றி.
ஏ.எம்.மொகமட் அனீஸ்.
முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம்,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
0 Comments