கொச்சியில் உள்ள அம்ரிதா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற அரிய அறுவை சிகிச்சையில் இரு கைகள் துண்டான ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை படைக்கப்பட்டது.
ஆப்கன் நாட்டை சேர்ந்தவரான 30 வயது முன்னாள் ராணுவ கேப்டன் அப்துல் ரகீம், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கன்னிவெடியை அகற்றும் போது தனது இரு கைகளை இழந்தார். துண்டான தனது கைகளுக்கு பதிலாக மாற்று கைகளை எங்கு பொருத்துவார்கள் என பல நாடுகளில் தேடிவந்தார். இந்நிலையில், அம்ரிதா மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை நடைபெறுவதாக கேள்விப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன் அம்மருத்துவமனையை அணுகினார்.
அதன் பின் ரகீமுக்காக கைகளை தானம் செய்பவருக்காக மருத்துவமனை நிர்வாகம் காத்திருந்தது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த 54 வயது முதியவர் ஒருவர் விபத்திக்குள்ளானதில் அவரது மூளை செயலிழந்தது. எனவே அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து அவரின் 2 கைகளையும் துண்டித்து ரகீமுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று கொடையாளியின் கை துண்டிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் ரகீமுக்கு பொருத்தப்பட்டது. ஏறத்தாழ 20 மருத்துவர்கள் குழு 15 மணி நேரம் போராடி இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். இது குறித்து அம்மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவின் தலைவரான பேராசிரியர் சுப்ரமணிய ஐயர் கூறுகையில், ஒவ்வொரு கையையும் இணைப்பதற்கு இரண்டு எலும்புகளும், 2 தமனிகளும், 4 நரம்புகளும், 14 தசை நான்களும் தேவைப்பட்டது என்றார்.
தற்போது ரகீமின் இரண்டு கைகளும் ஓரளவு இயக்கத்தை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், தொடர் பிசியோதெரபி சிகிச்சைக்கு பின் அடுத்த 10 மாதங்களில் ரகீமின் கையை முழுமையான செயல்பாட்டை அடையும் என்று தெரிவித்தார்.
0 Comments