மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தை எவ்வளவு அர்த்தம் பொதிந்தது. அன்றாட வாழ்வின் பல தடைகளையும் மீறி இந்த மாற்றுத்திறனாளிகள் புரியும் சாதனைகளை பார்த்து வரும் நமக்கு சார்லட் பிரவுனின் கதை சற்று ஆச்சர்யம் தரக்கூடியது.
பிறந்த 16 வது வாரத்தில் கண்புரையால் பாதிக்கப்பட்ட குழந்தை சார்லட். செயற்கை லென்சுகள் மற்றும் சில அறுவை சிகிச்சைகள் பெற்று, பார்வை திரும்பிய சார்லட்டுக்கு, மறுபடி 11-வது வயதில் மீண்டும் பிரச்சனை தொடங்கியது. பின்னர் தந்த சிகிச்சைகளால் முதலில் வண்ணங்கள் அழிந்து, பின்னர் வெளிச்சமும் இருட்டும் கலந்த கலவையாக காட்சிகள் தெரிய ஆரம்பித்தது. முழுவதுமாக இருட்டுக்குள் மூழ்கவில்லை. அவ்வளவுதான்.
பார்வையில்லாத பெண் என்று சார்லட் மீது அவரது சகோதரர்கள் தாய் யாரும் பாசத்தைப் பொழியவில்லை. அவளையே எல்லா வேலையும் செய்ய வைத்தனர். தன் வேலைகளை தன்னால் செய்ய முடியும் என்ற நிலை வந்ததும், அடுத்து என்ன செய்வது என்று சார்லட்டுக்கு தோன்றியது.
எப்போதும் அபாயங்களையே விரும்பும் சார்லட் தேர்ந்தெடுத்தது உயரம் தாண்டுதல் போட்டி. அவர் படிக்கும் எமோரி ரெயின்ஸ் ஹை ஸ்கூலில் தன்னால் உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று நிரூபித்து, 2013 ஆம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார்.
வெற்றி பெறவில்லை என்பதால் அது தோல்வியாகிவிடுமா என்ன? இன்னும் அதிகம் முயற்சித்தார். 2014-ம் ஆண்டு மீண்டும் போட்டியில் கலந்து கொண்டார். இன்னும் அதிகமாக உழைத்தார், இதோ கடந்த வெள்ளி அன்று நடைபெற்ற 2015-ம் ஆண்டுக்கான டெக்சாஸ் மாநில விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து பதக்கம் வென்றுள்ளார். பார்வையில்லாத தனக்கு பயிற்சியின் போது உதவியாக இருக்கும் நாயுடன் பதக்க மேடையை பகிர்ந்து கொண்ட சார்லட் கூறியது இதுதான் ”இந்த மேடைக்கு வருவதற்கு எனக்கு 3 வருடங்கள் ஆகியிருக்கிறது. இது என்னுடைய கதை மட்டுமல்ல. வாழ்வில் தடைகளை தகர்த்தெறிந்து சாதிக்க விரும்பும் எல்லோருக்குமான கதை.”
0 Comments