சில மாதங்களுக்கு முன் இணையவாசிகளிடம் கடும் விவாதங்களை கிளப்பிய நிறம் மாறும் 'உடை'-யின் மர்மத்தை அவிழ்த்துள்ளனர் எம்.ஐ.டி. விஞ்ஞானிகள்.
கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த கெய்ட்லின் மெக்னெய்ல் என்ற 21 வயது பாடகி தனது இணையதளத்தில் நீல மற்றும் கருப்பு நிற ஆடை ஒன்றை பகிர்ந்திருந்தார். அதை பார்த்த சிலர் அந்த உடையை வெள்ளை மற்றும் பொன்னிற ஆடை என கூறியதால், உடனடியாக அந்த ஆடை இணையவாசிகளின் விவாத பொருளாக மாறியது.
எனவே இந்த உடை பற்றிய மர்மத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி. பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதன்படி 1,400 பேரை தேர்வு செய்து, அவர்களிடம் மேற்கூறியது போன்ற ஆடையை காண்பித்து ஆய்வு நடத்தியதில் பல சுவாரசியமான முடிவுகள் கிடைத்துள்ளது.
சிலர் அந்த ஆடையை நீலம் / கருப்பு, வெள்ளை / பொன்னிறம் மற்றும் நீலம் / பழுப்பு என தெரிவித்துள்ளனர். இதற்கு பார்ப்பவர்களின் கண்கள் எந்த வகையான வெளிச்சத்திற்கு பழகியுள்ளது என்பதுதான் முக்கிய காரணம் என கண்டறிந்துள்ளனர்.
வெள்ளை / பொன்னிறம் என சொன்னவர்கள் அதிகம் இயற்கையான ஒளிக்கு பழக்கப்பட்டவர்கள் என்றும், நீலம் / கருப்பு என கூறியவர்கள் செயற்கையான ஒளிக்கு பழகியவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த இரண்டிற்கும் இடைப்பட்டவர்கள் நீலம் / பழுப்பு வகையினர். அதேபோல் பெரும்பாலான பெண்களும் வயதானவர்களும் வெள்ளை / பொன்னிறம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இன்னும் எளிதாக கூறவேண்டுமானால் மேலே பார்த்து வானம் நீல நிறம் என்று கூறுகிறோம், ஆனால் உண்மையில் வானம் என்று ஒன்று இல்லை. நாம் பார்ப்பது எல்லாம் சூரிய ஒளி கதிர்கள் வளிமண்டலத்தில் மோதும்போது ஏற்படும் ஒளிச்சிதறல்களால் உருவான நீல நிறத்தை தான்.
இதை தான் பாரதி அன்று "வானகமே இளவெய்யிலே மரம் சரிவே நீங்கள் எல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சி பிழைதானோ?" என்று பாடினான்.
சரி நீங்கள் எந்த வகையினர் என தெரிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளதா? படத்தை கவனமாக பாருங்கள்...
0 Comments