வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஹவுட்டன் லி ஸ்பிரிங் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது பிள்ளைகளுடன் போலார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தபோது தனது 20 மாத ஆண் குழந்தையை வேடிக்கையான கோணத்தில் நிற்கவைத்து, ஐபோனால் படம் பிடித்தார்.
அந்தப் படத்தை உற்றுப்பார்த்தபோது, அவனது இடது கண்ணில் ஏதோ மாற்றம் இருப்பதை உணர்ந்த அவர் உடனடியாக கண் டாக்டரிடம் அவனை அழைத்து சென்று பரிசோதனை செய்தார். பரிசோதனையில் அவனது ஒரு கண்னில் 'ரெட்டினோபிளாஸ்டோமா' (Retinoblastoma) எனப்படும் புற்றுநோயின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட சுமார் 50 குழந்தைகளுக்கு இவ்வகை புற்றுநோயின் தாக்கம் ஏற்படுவதும், உரிய சிகிச்சை பின்னர் இவர்களில் 98 சதவீதம் பேர் சிகிச்சைக்கு பின்னர் பூரண நலமடைந்து விடுவதும் உண்டு. அவ்வகையில், கீமோதெராபி மற்றும் லேசர் சிகிச்சைக்கு பின்னர் ஜாக் எனப்படும் இந்த இருபது மாத குழந்தையின் நோய்த்தாக்கமும் குணம் அடைந்தது.
பலவகை சோதனைகளை செய்து கண்டறிய வேண்டிய இந்த நோய்த்தாக்கத்தை ஒரேயொரு போட்டோவில் கண்டுபிடித்தது எப்படி? என்பது தொடர்பாக கூறும் ஜாக்கின் தாயார் ஸ்டேஸி சுத்தர்லேண்ட், ‘15 டிகிரி கோணத்தில் இருந்து நெருக்கமாக புகைப்படம் எடுக்கும்போது, கேமராவில் இருந்து வெளியாகும் ‘பிளாஷின்’ ஒளி, கண்ணில் இருக்கும் பார்வை நரம்பின்மீது பாயும்போது அது, சிகப்பு நிறமாக பிரதிபலிக்கும்.
ஆனால், ஜாக்கின் வலது கண்ணில் பட்ட ஒளி சிகப்பு நிறமாகவும், இடது கண்ணில் பட்ட ஒளி வெண்மை நிறமாகவும் பிரதிபலித்ததால் அவனது இடது கண்ணில் ஏதோ கோளாறு உள்ளது என்பதை யூகித்து கொண்டேன். கண் டாக்டரிடம் அவனை அழைத்து சென்றபோது எனது சந்தேகம் சரிதான் என்பதும், அவனுக்கு 'ரெட்டினோபிளாஸ்டோமா' (Retinoblastoma) எனப்படும் புற்றுநோயின் தாக்கம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது’ என குறிப்பிட்டுள்ளார்.
எது, எப்படியோ.., வேடிக்கைக்காக எடுத்த ஒரு போட்டோ, ஒரு மாபெரும் விபரீதத்தை தடுத்து, தவிர்த்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.


0 Comments