ஏழை எளிய மக்களைக் கருத்திற் கொண்டும் வீடற்றவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்குமான திட்டம் ஒன்றினையே எனது தந்தையார் அமரர் ரணசிங்க பிரேமதாச முன்வைத்து செயற்படுத்தி வந்தார். சர்வதேசமே ஏற்று வரவேற்ற இத்திட்டம் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் சீர்குலைக்கப்பட்டு விட்டது. அதே திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வீடற்றோருக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான இலக்கு என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கண்டி மலைநாட்டு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் அடிப்படையில் கண்டி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியும் அதற்கான உறுதிப்பத்திரம் என்பவற்றை கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சஜித் பிரேமதாசஇவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எனது தந்தையின் தலைமைத்துவத்தாலும் வழிகாட்டலாலும் வீடற்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் இத்திட்டம் வரவேற்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் சீர்குலைந்தது.
ஆனால் இன்று இவ்வமைச்சு எனது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை எந்தவொரு அமைச்சும் செய்யாத அளவில் நாட்டில் வீடற்றோர் பிரச்சினையைத் தீர்ப்பதே எனது நோக்கமாகும்.
நான் எனது மாத வேதனத்தை பெற்றுக் கொள்வதில்லை. அரச வாகனங்களை பயன் படுத்துவதில்லை. எரிபொருள் காசுகளைப் பெறுவதில்லை. இவையனைத்தையும் வறிய மக்களின் வீடற்ற பிரச்சினைகளைத் தீர்க்கவே செலவிடுகின்றேன்.
கடந்த ஆட்சி காலத்தில் அரச சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இன்று அரச பொறியியல் கூட்டுத்தாபனம் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளது. 80 ஆயிரம் ரூபா வீத வாடகைக்கு 33 வாகனங்களை அமர்த்திக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இது மிகவும் வெறுக்கத்தக்க செயலாகும். இது நாட்டிற்கு ஏற்றதல்ல.
நான் எவ்வித வாகனங்களையும் கூலிக்கோ அரசு சேவைகளுக்கோ அமர்த்தவில்லை. மக்களுக்கு உகந்த சிறந்த சேவையை செய்து கொண்டு போகையில் சிலர் என் மீது தவறான விமர்சனங்களை மேற்கொள்கின்றனர்.
தேர்தல் சமயங்களில் கொடிக்கம்பங்கள் முதல் பிரசார வேலைகளுக்காக கோடிக்கணக்கான அரசு நிதி வளங்களை செலவிட்டவர்களே இவ்வாறு விமர்சிக்கின்றனர். இது வேடிக்கையானது.
நமது நாட்டில் 51 இலட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. 21 இலட்சம் குடும்பத்தினர் குறைந்த வருமானமுடையவர்கள்.
இவர்களது வீட்டுரிமைக்காகவும் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அவர்களுக்காக நடைபெறுகின்ற எந்தப் பணிகளையும் நிறுத்தப் போவதில்லை.
நாங்கள் அனைத்து வேலைகளையும் மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வோம். உதவித்திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணிப்போருக்கு அனைத்து மூலப் பொருட்களையும் மலிவு விலையில் பெற்றுக் கொள்ளும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம் என்றார்.


0 Comments