Subscribe Us

header ads

பொதுபல சேனாவின் அரசியல் பிரவேசம்- நிஜமா? நாடகமா?


இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாக தீவிரவாத அமைப்பான பொதுபல சேனா காணப்படுகின்றது. முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கையைக் கொண்ட இவ்வமைப்பு கக்கிய இனவாதக் கருத்துக்கள், ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டை விடவும் மோஷமான பதிவை இந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
சிந்தனா ரீதியிலும், நடைமுறையிலும் இவ்வமைப்பு பின்பற்றும் இனவாத கொள்கை ஒவ்வொரு முஸ்லிமையும் கதிகொள்ளச் செய்தது என்றால் அது மிகையாகாது.
முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வமைப்பு முன்னெடுத்த நடவடிக்கைகள் முஸ்லிம்களை மாத்திரமல்ல மனித நேயமுள்ள ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டியது. அடிப்படையற்ற பொய்யான தகவல்களை முஸ்லிம்களுக்கு எதிராக சோடித்து பச்சைப் பச்சையாக வாய் கூசாமல் ஊடகங்கள் வாயிலாக கொட்டித் தீர்த்தபோது முஸ்லிம்களின் உள்ளம் குமுறியது. கண்கள் கண்ணீர் சிந்தின.
அரசியல் செல்வாக்குடன் செயற்பட்ட செயற்பட்ட இவ்வமைப்புக்குத் தடைபோடவோ, கட்டுப்பாடுகளை விதிக்கவோ இந்நாட்டிலிருந்த அச்சமூகத்தைச் சேர்ந்த மனித நேயமுள்ள உள்ளங்களுக்குக் கூட முடியாமல் போனது.
ஆயுதம் தரிக்காத பொலிஸார் போன்றும், புலனாய்வுத் துறை அதிகாரிகள் போன்றும் சுங்கத் துறை உயர் உத்தியோகத்தர்களாகவும் இவ்வமைப்பினர் கட்டின்றி செயற்பட்டனர். இலங்கை முஸ்லிம்கள் தொடர்பிலும், சர்வதேச முஸ்லிம்கள் பற்றியும், முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் சமய, கலாசார விவகாரங்கள் என்பன தொடர்பிலும் பேசிவந்த இவர்களுக்கு, தற்பொழுது முஸ்லிம்களின் இருப்பே இந்நாட்டில் பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது. தொட்டில் பிள்ளையாக அரசியல் பிரமுகர்களினால் ஆட்டி வளர்க்கப்பட்டதன் விளைவே இது என்பது மறைத்துக் கூற வேண்டிய ஒன்றல்ல.
தம்மை போஷிப்பவர்களுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தி, முஸ்லிம்களின் வாக்குவங்கிகளை போஷகர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக தேர்தல் காலங்களில் மாத்திரம் தமது இனவாத மந்திரத்தை அடக்கி வாசித்து வந்த இவ்வமைப்பின் தந்திரம் யாரும் அறிந்த ஒன்றாகும்.
இவ்வமைப்புக்கு அரசியல் புகழிடம் கொடுத்தவர்கள் அதன் விளைவை கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவின் போது உணர்ந்து கொண்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல இடங்களில் மறைமுகமாகவும், சில இடங்களில் வெளிப்படையாகவும் தனது தேர்தல் தோல்விக்கு இனவாத அமைப்பே காரணம் என ஏற்றுக் கொண்டுள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியிருந்த செவ்வியொன்றிலும் இந்த உண்மையை அவர் எடுத்தியம்பியிருந்தார்.
பொதுபல சேனாவை ஆதரிக்கும் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகள் தான் மஹிந்தவுக்கு கிடைத்தது என பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.
இது இவ்வாறிருக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்களினால் ஆத்திரமடைந்த பொதுபல சேனா ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டு, தனிக் கட்சி ஆரம்பிக்கும் தீர்மானத்துக்கு வந்துள்ளது.
பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையுடனும், அந்நாட்டிலுள்ள பௌத்தர்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் விராது தேரரின் தலைமையிலான தீவிரவாத அமைப்பின் அதேவழிமுறையை பொதுபல சேனா பின்பற்றி வருகின்றது.  இலங்கையிலும் முஸ்லிம்களின் பரவலினால் பௌத்தர்கள் எதிர்க் கொள்ளும் சவாலை முறியடிக்கவென தோன்றிய பொதுபல சேனா அரசியலில் இறங்குவதற்கான தீர்மானத்தை அண்மையில் அறிவித்துள்ளது.
சோமஹிமி தேரரின் மறைவின் பின்னால், பௌத்தர்களின் மறுமலர்ச்சிக்காகவென ஜாதிக ஹெல உறுமய கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசியல் களத்துக்கு வந்தது. 2004 ஆம் ஆண்டு ஏப்றல் மாதம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு சுமார் ஐந்து லட்சம் வாக்குகளையும் அக்கட்சி பெற்றுக் கொண்டது. தர்ம ராஜ்ஜியத்தை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அக்கட்சியின் ஒன்பது பிக்குகள் பாராளுமன்றத்துக்குள்ளும் நுழைந்தனர். இருப்பினும், இந்நாட்டில் தர்ம ராஜ்ஜியத்துக்கான எந்தவிதமான அறிகுறிகளும் காணப்படாமையினால் கடும்போக்காளர்கள் விரக்கியடைந்திருந்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மைத்திரிபால சிரிசேனவுக்குக் கிடைத்த 62 லட்சம் வாக்குகளுக்காக செயற்படப் போவதாக மஹரகமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்திருந்தது. இலங்கை மக்களுக்காக இதன் பிறகு பொதுக் கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதாகவும் சிங்கள பௌத்தர்களுக்காக அல்ல எனவும் அக்கட்சி மறைமுகமாக கூறியிருந்ததை சிங்கள சகோதர ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், காலத்துக்குக் காலம் அரசியல் மாற்றம் கண்டு வருகின்றது. ஹெல உறுமய கட்சியும் கால மாற்றத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை எதிர்பார்ப்பது அதன் நடவடிக்கைகள் மூலம் தெளிவாகியுள்ளதாகவும் குறித்த ஊடகவியலாளர் விளக்கியிருந்தார்.
இதன் பின்னணியில்தான், சிங்கள பௌத்தர்களுக்கு குரல் கொடுக்கும் ஒர் அமைப்பு இல்லையென்ற குறையை நிவர்த்தி செய்ய கடந்த 2012 மே மாதம் 7 ஆம் திகதி பொதுபல சேனா ஆரம்பிக்கப்பட்டது. இம்மாதம் 7 ஆம் திகதிக்கு பொதுபல சேனாவுக்கு மூன்று வயது. இவ்வமைப்பின் பரிணாமவளர்ச்சியின் ஓர் அங்கமாக அரசியல் பிரவேசம் அமையப் பெற்றுள்ளது எனக் கூறலாம்.
இது இவ்வாறிருக்கையில், இக்கட்சிக்கு அரசியல் பிரவேசம் தேவையா? என அச்சமூகத்தின் புத்திஜீவிகள் மத்தியில் கருத்துக்கள் எழுந்துள்ளன. தற்பொழுது பொதுபல சேனாவுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு அரசியலில் இறங்கினால் இழக்கப்படக் கூடும் எனவும், அரசியலில் நம்பிக்கையிழந்து இவ்வமைப்புக்கு ஆதரவு வழங்க முன் வந்தவர்கள் தமது ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வார்கள் என்ற அச்சம் உள்ளதாகவும் அச்சமூகத்தின் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியலுக்கு வந்தால் ஜாதிக ஹெல உறுமய கட்சியைப் போன்று படிப்படியாக பௌத்த இனவாத கொள்கை இல்லாமல் போகும். எனவே, தற்பொழுது பொதுபல சேனா எடுத்தள்ள அரசியல் பிரவேசத்துக்கான சிந்தனையை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்பது அவ்வமைப்புக்கு ஆதரவான பலரின் கருத்தாகவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுடன் எந்தவிதமான கருத்து மோதல்கள் இருந்தாலும், சிங்கள பௌத்த சக்திகள் அனைவரும் அவருடன் இருக்கும் பொழுது, அவரை விட்டும் பிரிந்து நின்று அரசியலுக்கு வரும் பொதுபல சேனாவின் தீர்மானம் தெளிவில்லாமல் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் சிங்கள கடும்போக்காளர்களின் கட்சிக்குத் தேவைப்படுகின்றது. பொதுபல சேனா அதற்குள் இருந்தால் ஜனாதிபதித் தேர்தலின் கதிதான் இந்த தேர்தலிலும் நடக்கும் என்பது பொதுபல சேனாவை போஷிப்பவர்களுக்கு விளங்கம் தேவையில்லாத பிரச்சினையாகும்.
இதன் பின்னணியில் பார்க்கும் போது, வழமையான நாடகத்தை அரசியல் பிரவேசம் எனும் பெயரில் பொதுபல சேனா? அரங்கேற்றப் பார்க்கிறது என ஒருவர் எண்ணினால் அது தவறன்று. தேவை வரும்போது பிரிந்து சந்தர்ப்பத்தில் சேர்ந்துகொள்வது தான் இவர்களது வரலாறு என்பதை இந்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.
அரசியல் பலம் இல்லாமல் அடுத்தவரின் அரசியல் செல்வாக்கை வைத்தே நாட்டில் இவ்வமைப்பு இந்த ஆட்டம் ஆடுவதாக இருந்தால், அரசியல் செல்வாக்கும் நேரடியாக கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை இன்னொரு வகையில் பார்க்கும் ஒருவர் புரிந்துகொள்ளலாம்.
எனவே,இவ்வமைப்பு இந்நாட்டில் பரப்பிய நச்சுக் கருத்துக்கள் காற்றில் பரக்கும் தூசாக கருதிவிட முடியாது. பல தலைமுறைகளுக்கு அதன் சிந்தனைப் பதிவுகள் நிலைத்து இடம்பிடித்துள்ளது. அவ்வமைப்புக்கு தற்காலிகமாக அரசியல் செல்வாக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதுவே நாம் விளங்க வேண்டிய அடிப்படை உண்மையாகும்.
எமது சமூகத்தின் அரசியல் தலைமைகளும், சமூக சேவை குழுக்களும், சமய இயக்கங்களும் தீவிரமாக செயற்பட வேண்டியுள்ளது. இனவாத நீதியில் இந்நாட்டில் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பதிக்கப்பட்டுள்ள விசக் கருத்தை மாற்ற உழைக்க வேண்டிய கடமைப்பாடு சகலருக்கும் உள்ளது. சகவாழ்வு பற்றிய இஸ்லாத்தின் வழிகாட்டல் சரியாக புரியப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
எம்மிடையே மதத்தின் பெயரால் ஏற்படுத்தப்படும் பிளவுகள் எம்மை பலவீனப்படுத்தும் என்பது நாம் அறியாத ஒன்றல்ல. பலமிழந்து அடிவாங்கும் போது ஒன்றுபட்டு பரிகாரம் தேடுவதை விட, ஒன்றுபட்டு உழைத்து வரவுள்ள எதிர்ப்புக்களை தவிர்க்க முயற்சிப்பதே புத்திசாலித்தனமாகும்.
– எம்.எம்.முஹிடீன் இஸ்லாஹி

Post a Comment

0 Comments