ஐ.பி.எல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில் யுவராஜ் சிங் 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. ஆனால் இப்போது அதுவே டெல்லி அணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யுவராஜ், இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 205 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக வெறும் 18.63 ரன்கள் மட்டுமே.
இந்நிலையில் கடந்த வருடம் யுவராஜை ஏலம் எடுக்க நடந்த கடும் போட்டி மற்றும் அவரது மார்க்கெட் மதிப்பு காரணமாகவே அவரை 16 கோடிக்கு ஏலம் எடுத்ததாக டெல்லி அணியின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் துவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “நாங்கள் அவரை 16 கோடிக்கு வாங்க விரும்பினோம் என்று நினைக்கிறீர்களா? இல்லை. ஒரு நிறுவனம் என்ற முறையில் நாங்கள் அவரை குறைந்த தொகைக்கே வாங்க நினைத்தோம். ஆனால் ஏலத்தின் கடைசி தருணத்தில் பல காரணங்களால், குறிப்பாக சமூக வலைதளங்களால், திடீரென்று யுவராஜ் சிங்கின் மதிப்பு உயர்ந்தது. அதே நேரம் சென்ற முறை நிலவிய போட்டி மற்றும் மார்க்கெட் மதிப்பு எல்லாம் சேர்ந்துதான் யுவராஜ் சிங்கை 16 கோடிக்கு ஏலம் எடுக்க வைத்தது.” என்றார்.
“என்னை இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுங்கள் என்று நான் யாரிடமும் கேட்டதில்லை” என்று யுவராஜ் சிங் பதில் அளித்துள்ளார்.


0 Comments