முஸ்லிம் அல்லாத எல்லோரும் காபிர்களோ, முஷ்ரிக்குகளோ அல்ல, இஸ்லாமியத் தூது உரிய வகையில் எடுத்துச் சொல்லப்பட்டு அதனை புரிந்த பின்னர் நிராகரிப்போர் காஃபிர்கள் என அழைக்கபப்டுவர், அதே போன்றே ஏக இறைவனை அவனது வல்லமைகளை அறிந்த பின்னர் அவனுக்கு நிகராக அல்லது அவனது வல்லமைகளில் பங்கு கொள்ளக் கூடிய, வணங்கி வழிபடுவதற்கும், வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை முனவைப்பதற்கும் தகுமான வேறு படைப்புக்களை அவனுக்கு இணை வைப்போரே முஷ்ரிக்குகளாவர்.
தம்மிடமுள்ள மார்க்கம் ஒன்றை மாத்திரமே அறிந்த அதிலே ஆழமான நம்பிக்கை கொண்டுள்ள மாற்று மதத்தவர்களை காஃபிர்கள் என்றும், முஷ்ரிக்குகள் என்றும் வரைவிலக்கணப் படுத்துவது தவறான அணுகுமுறைகளுக்கும், எடுகோல்களுக்கும் வழிவகுக்கும்.
அதேபோன்று காஃபீர்கள், முஷ்ரிக்குகளாயினும் முஸ்லிம் சமூகத்தோடு போர் தொடுக்காத வரையில் அல்லது அவர்களை அவர்களது பூமிகளில் இருந்து வெளியேற்றாத வரையில், அல்லது தமது நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்காத வரையில் அவர்களுடன் பகைமை பாராட்டுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை.
மனித குலத்தின் விமோஷனத்திற்கான தூது பகைமை பாராட்டலூடாகவும், பலவந்தமாகவும் திணிக்கப்படுவதில்லை, மாறாக பரஸ்பரம் மனிதாபிமானமும் புரிந்துணர்வும் அன்பும் அனுதாபமும் கட்டி எழுப்பப்பட்ட நிலையில் நடைமுறை வியாக்கியானங்கள் நிறைந்த ஒரு தலை சிறந்த உம்மத்தின் மூலமே முனவைக்கப்பாடல் வேண்டும். மனித குளத்தின் மீதான அபிமானம் இஸ்லாமிய பிரச்சாரத்தின் அடிப்படை பண்பாகும், இன மத மொழி நிற வேற்றுமைகள் களைவது உச்சக் கட்ட மனிதாபிமானமாகும்!
இன்று முஸ்லிம்களுக்கு எதிராக காழ்ப்புணர்வுப் பிரச்சாரங்களை வன்முறைகளை கட்டவிழ்த்துவிடக் காத்திருக்கும் தீய சக்திகள் இஸ்லாமிய வரலாற்றில் நிராகரிப்பாளர்கள், முஷ்ரிக்குகள் குறித்த சில சட்ட திட்டங்களை, அல்லது அவர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுத்த பொழுது அருளப்பட்ட அல் குரான் வசனங்களை அரைகுறையாக ஆதாரம் காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.
அதேபோன்றே சகோதர சமூகங்களோடு சமாதான சகவாழ்வு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் சமூகத்தளத்தில் பேசப்படுகின்ற பொழுது முஸ்லிம் அல்லாதவர் குறித்த மிகச் சரியான பார்வை இல்லாத பலர் ஆத்திர அவசரத்தில் அவேசப்படுவதும் எதிர்வினையற்றல்களை முதன்மைப்படுத்துவதுமான கவலைக்கிடமான நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையிலான உறவுகளை தீர்மானிப்பதில் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களது மக்கா வாழ்வு முதல் மதீனா வாழ்வு நிறைவுறும் வரை மிகச் சிறந்த அணுகுமுறைகள் முன்னுதாரணங்கள் இருக்கின்றன..குறிப்பாக மக்கா வெற்றியிற்கு முன்னரும், மக்க வெற்றியிற்குப் பின்னரும் ஸீராவில் சீரிய வழிகாட்டல்கள் நிறையவே உள்ளன..
தொடரும்..


0 Comments