பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த 15 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் சென்று குடித்தனம் நடத்திய 18 வயதான இளைஞரை கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கற்பிட்டி, பள்ளிவாசல்துறை, வெள்ளமங்காரை பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மீனவரான இந்த இளைஞர், மாத்தளை ஓவில்கந்த பிரதேசத்தை சேர்ந்த சிறுமியை பலவந்தமாக தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
இளைஞர் தமது உறவினர்களுடன் மாத்தளை பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது குறித்த சிறுமியின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இளைஞர் வழங்கிய தகவலுக்கு அமைய சிறுமி புத்தளம் நகருக்கு சென்றுள்ளார். புத்தளத்திற்கு சென்ற இளைஞர், சிறுமியை அழைத்துக்கொண்டு கற்பிட்டியில் உள்ளது தமது வீட்டுக்கு சென்றுள்ளார்.
கற்பிட்டியில் உள்ள இளைஞரின் உறவினர் ஒருவர் சிறுமியின் பெற்றோருக்கு இது பற்றி தெரியப்படுத்தியதை அடுத்து, அவர்கள் கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து இளைஞரை கைது செய்த பொலிஸார், சிறுமியையும் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை அறிய பொலிஸ் அவரை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன


0 Comments