தோட்டத்தொழிலாளர்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற நம் நாட்டு பணிப்பெண்கள் என்ற இரு தரப்புக்களைச் சேர்ந்த உண்மையான உழைப்பாளர்களுக்கு மத்தியில் ஆடைத் தொழிற்சாலை எனும் நிறுவனத்துக்கு உழைப்பு என்ற பெயரில் பிழிந்தெடுக்கப்படுகின்ற யுவதிகள் தொடர்பில் பெரிதாக எவருமே அலட்டிக்கொள்வதாக இல்லை.
தோட்டத் தொழிலாளர்களை பொறுத்தவரையில் அதிகாலை 5 மணிக்கு இருளோடு எழுந்து இரவினில் 11 மணியாகும் வரையிலும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் ஓர் நிலையில் நாட்களையும் வாரங்களையும் மாதங்களையும் வருடங்களையும் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றனரே தவிர அவர்கள் எந்த விதத்திலும் பூரணத்துவமானதொரு வாழ்க்கையை வாழவில்லை என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். இவர்களது இந்நிலைமையானது அவர்களோடே ஒத்துப் போனதொன்றாகவும் ஆகி விட்டது.
தோட்டத் தொழிலாளர்களது நிலைமைகள் இவ்வாறிருக்கும் அதேவேளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக ஏற்றுமதி செய்யப்படுகின்றவர்களின் நிலைமைகள் இன்னும் மோசமானவைகளாகவே இருக்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு எமது நாட்டு பெண்களும் யுவதிகளும் வீட்டு வேலை செய்வதற்கும் துணிகள் துவைப்பதற்கும் இன்னும் இன்னோரன்ன வேலைகளுக்கும் துன்ப துயரங்களுக்கும் உள்ளாவதற்குமென்றே அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஏழ்மை, வருமானக்குறைவு, பொருளாதார சூழல், எதிர்காலம் ஆகியவற்றை மனதிற்கொண்டு பல்தரப்பட்ட கனவுகளுடன் செல்கின்ற எமது உறவுகள் அங்கு எத்துணை துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பது அறிவிற்கு சாத்தியப்படாததாகும். அத்துடன் இவர்கள் தமது ஒப்பந்த காலப்பகுதிக்குள் எதிர்கொள்கின்றவற்றை சொல் ஆறுதல் பெறுவதற்குக் கூட யாருமில்லா துர்ப்பாக்கியவதிகளாக இருப்பதும் தெரிந்த விடயமே.
இலங்கையைப் பொறுத்தவரையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்கள் ஏற்றுமதி நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவ்வகையான அனைத்து வித ஊக்குவிப்புக்களும் இல்லாது செய்யப்படுதல் அவசியமாக உள்ளது.
மத்திய கிழக்குக்கு பணிப்பெண்கள் அனுப்பப்படுவதாலும் அங்கு அவர்கள் எதிர்கொள்கின்ற விடயங்களாலும் ஏற்படுகின்ற பின் விளைவுகள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புள்ள நிறுவனங்கள், அதிகாரிகள் என சகல தரப்பினருமே அறிந்திராத விடயமல்ல. எனினும் ஏதோவொரு அக்கறையீனம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தோட்டத்தொழிலாளர்கள் மத்திய கிழக்குக்கு செல்லும் வீட்டுப்பணிப் பெண்கள் எனும் இரு தரப்பினரும் கல்வித்தராதரம் பாராத கூலிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. சுரண்டப்படுகின்ற உழைப்பு நாட்டின் வருமானத்துக்கு அவசியப்படுகிறது. ஆகவே தான் இந்த மக்கள் மீது செலுத்தப்படுகின்ற அழுத்தங்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளப்படாத நிலைமைகள் இருந்து வருகின்றன.
மேற்படி இரு சாராரின் நிலைமை இவ்வாறிருக்க,உள்நாட்டுக்குள் ஆடைத் தொழிற்சாலைகளுக்குள் ஆடை உற்பத்தி எனும் ஏற்றுமதி வியாபாரத்தை விருத்தி செய்து கொண்டிருக்கும் மற்றுமொரு தரப்பினர்தான் அப்பாவி யுவதிகளாவர்.
ஆடைத்தொழிற்சாலை என்றதொரு துறையை ஆரம்பித்து வைத்து நாட்டின் தொழிற்றுறைக்கும் ஏற்றுமதித் துறைக்கும் வித்திட்ட முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச நாடு குறித்து சிந்தித்திருந்தார்.
நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை அடிப்படையாக வைத்து நல்ல நோக்கத்தோடு ஸ்தாபிக்கப்பட்ட ஆடைத் தொழிற்றுறையானது மனித வலுவையும் இன்று இயந்திரங்களாக இயங்கச் செய்வதன் மூலம் அவர்கள் உடலளவில் பிழிந்தெடுக்கப்படுகின்றனர்.
இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவதே முதலாளித்துவக் கொள்கை என்பதை எவராலும் மாற்றியமைத்து விடக்கூடாது என்பதில் ஒருமித்து செயற்படுவது தெளிவானதாக இருக்கிறது.
தோட்டத்தொழில் புரியும் தோட்டத் தொழிலாளர்கள், வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலையில் பிழியப்படுகின்ற யுவதிகள் என்ற இந்த மூன்று தரப்பினரும் அதிகமான வகையில் பெண்களாகவே இருப்பதுடன் அவர்களது அடிப்படை உரிமைகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
சிங்களக் கிராமங்களையும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளையும் மாத்திரமே குறி வைத்துள்ள ஆடை உற்பத்தியாளர்கள் விலை கொடுத்து கால்நடைகளைப் பிடித்து வருவது போன்றே யுவதிகளைப் பிடித்து வருகின்றனர்.
பெருந்தோட்டப் பகுதிகளில் குடிகொண்டுள்ள வறுமை, வருமானக் குறைவு, போக்குவரத்து வசதியீனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாடசாலை இடை விலகல் சாதாரண தரத்துக்கு மேல் செல்ல முடியாத நிலை ஆகியவை குவிந்து காணப்படுகின்ற நிலை இன்னுமே இருந்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஆடை உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தகவல்களைத் திரட்டிக்கொண்டு நேரடியாக குறித்த பிரதேசங்களுக்கு சென்று அங்கு தோட்டத் தொழிலாளர்களான பெற்றோரையும் அவர்களது பிள்ளைகளையும் மிக அழகாக மூளைச் சலவை செய்து விடுகின்றனர்.
மூளைச் சலவை செய்யப்படுகின்ற தோட்டத் தொழிலாளப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பி வைப்பதற்கும் இணங்குகின்றனர். இவ்வாறு அழைத்து வரப்படுகின்றோர் தலைநகரில் அல்லது நகரப் பிரதேசங்களில் அல்லது வர்த்தக வலயங்களில் அமையப்பெற்றுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இணைந்து கொள்கின்றனர்.
இவ்வாறு ஆடைத் தொழிற்சாலையை நம்பி வருகின்ற யுவதிகளின் பாதுகாப்பு, தங்குமிட வசதிகள், போக்குவரத்து உள்ளிட்ட விடயங்கள் தொழில் தருநர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்து வருகிறது. இன்னும் கூறப்போனால் இவை தொடர்பான அக்கறை இவர்களுக்கு கிடையாது.
காலை 7.50 மணிக்கு ஆடைத் தொழிற்சாலையின் நுழைவாயிலுக்குள் காலடி வைக்கின்ற மேற்படி யுவதிகள் இரவு 8.00 மணிவரையிலான 12 மணி நேரம் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆடைத்தொழிலில் உதவியாளராக இணைத்து கொள்ளப்படுகின்ற யுவதிகள் நூல் பிரித்தல், பொத்தான்கள் இணைத்தல், ஆடைகளை அடுக்குதல் உள்ளிட்ட வேலைகளில் அமர்த்தப்படுவதுடன் மேற்படி 12 மணி நேரமும் நின்றபடியே தொழில் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
தைத்த ஆடைகளை மினுக்குவதற்கென்று (அயன் செய்வதற்கு) அமர்த்தப்படுகின்ற யுவதிகள், இளைஞர்கள் இந்த 12 மணி நேரமும் நின்று கொண்டே பணியாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். அதேபோன்று தைத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுகின்றவர்கள் இரவு 8. 00 மணிவரையில் அமர்ந்திருந்தே பணி புரிய வேண்டியவர்களாகின்றனர்.
தோட்டத் தொழிலாளிகள், வீட்டுப்பணிப்பெண்கள் ஆகிய இரு தரப்பினருமே தங்களது அதிகாரிகளாலும் எஜமானிகளாலும் இழிவாக பேசப்படுவது போன்று ஆடைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்ற யுவதிகளும் அதிகாரிகளால் மேற்பார்வையாளர்களால் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்க்கப்படுகின்ற நிலைமைகள் உள்ளன. எனினும் இவை வெளி வருவதில்லை.
ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும் யுவதிகள் அடுத்தவரோடு பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ தடை விதிக்கப்படுகிறது.சில சந்தர்ப்பங்களில் சுகயீனம் காரணமாக வேலைக்கு செல்லாத பட்சத்தில் தங்கியிருக்கும் வீடு அல்லது விடுதி தேடி வந்து அழைத்து செல்லப்படுகின்றனர். கடுமையான சுகயீனம் என்றாலும் தொழிலில் ஈடுபட முடியாத நிலையென்றாலும் அவை கவனத்தில் கொள்ளப்படாது கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தேவைப்படும் நேரத்தில் விடுமுறையொன்றை வழங்குவதும் ஆடைத்தொழிற்றுறையில் தடை செய்யப்பட்ட விடயமாக இருக்கின்றது.தொழிற்சாலைக்குள் எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்பதற்கோ அல்லது அவற்றை தீர்ப்பதற்கோ இங்கு முன்னுரிமை அளிக்கப்படுவது கிடையாது. ஆடைத்தொழிற்சாலை உரிமையாளர்களை பொறுத்தவரையில் உழைப்பு உறிஞ்சப்படுதலே பிரதானமாகின்றது.
மறுபுறத்தில் உற்பத்தி கேள்விகள் அதிகரிக்கும் கால கட்டங்களில் காலை 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.00 மணிவரையிலும் வேலை வாங்கப்படுகின்றது. அதிகாலை 2.00 மணியளவில் வீடு திரும்பும் அல்லது விடுதி திரும்பும் இவ் யுவதிகள் மீண்டும் காலை 7.30 மணிக்கு தொழிற்சாலையில் நிற்றல் வேண்டும்.இத்தனை துன்பங்கள் துயரங்கள் உழைப்பு எனும் பெயரில் பிழிந்தெடுத்தல்கள் தொடர்பில் பேசுவதற்கு எவருமில்லை.
இன்று ஆடைத்தொழில் என்றதும் இத்துறையை தூக்கி நிறுத்தும் தூண்களாக மலையகத்தை சேர்ந்த யுவதிகளும் பெரும் பங்கினை வகித்து கொண்டிருக்கின்றனர்.ஆனாலும் இவர்களது அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் தொடர்பில் அலட்டிக்கொள்ளாதிருப்பது கவலைக்குரியதாகும்.ஆடைத்தொழிற்சாலைக்குள் நடப்பது என்ன ?என்பது பற்றியோ அங்குள்ள நிலைமைகள் தொடர்பிலோ எந்த தகவலும் வெளிவருவதில்லை.
தொழில் அமைச்சு, அரசாங்கம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மனித உரிமை அமைப்புக்கள், சமூக நலன் சார் அமைப்புக்கள், கட்டாயமாக ஆடைத்தொழிற்சாலை நிலைவரங்கள் தொடர்பில் ஆராய வேண்டும்.
அப்பாவி பெற்றோர் தமது பிள்ளைகள் தொழில் செய்வதாக எண்ணிக்கொண்டிருக்க அவர்களது பிள்ளைகள் படும் துன்பங்களை அறிவதற்கு அவர்களுக்கு வாய்ப்பில்லை.
மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், என்று வாய்கிழிய கத்துபவர்கள் ஆடைத்தொழிற்சாலைகளுக்குள் தொழில் புரிந்து பிழியப்படுகின்ற மலையக பெருந்தோட்டப்புறங்களைச் சேர்ந்த யுவதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிய உண்மை நிலைபற்றி பாராளுமன்றத்தில் வாய் திறக்காதிருக்கும் மலையக பிரதிநிதிகள் ஆடைத்தொழிற்சாலைக்குள் முடக்கப்பட்டிருக்கும் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளைப்பற்றி சிந்தித்துப்பார்க்கின்றனரா என்பதே கேள்வியாக உள்ளது.
தேர்தல் காலங்களில் இவ்வாறு ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் யுவதிகளின் வாக்குகளை எதிர்பார்க்கின்ற தலைமைகள், அரசியல்வாதிகள் அவர்களது நிலைமைகள், எதிர்காலம் குறித்து மெளனிகளாகவே இருக்கின்றனர். இவர்கள் மீது பராமுகமாக இருக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களிடம் தோட்ட நிர்வாகங்கள் எவ்வாறு உழைப்பினை உறிஞ்சுகின்றனவோ அதேபோன்றே அவர்களது பிள்ளைகளிடம் இருந்து ஆடைத்தொழிற்சாலை நிருவாகங்களும் உழைப்பினை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலைமைதான் இவ்வாறு இருக்கிறதென்றால் ஆடைத்தொழிற்சாலைகளில் பணி புரியும் யுவதிகளை இவ்வாறு தோட்டப்பகுதியில் இருந்து நகர்ப்புறங்களுக்கு தொழிலுக்கு வந்துள்ள இளைஞர்கள் விட்டு வைப்பதில்லை. தமது பிள்ளை தலைநகரில் தொழில் செய்வதாக பெற்றோர் நினைத்துக்கொண்டிருக்க அதே பிள்ளை தலைநகரில் யாரோ ஒரு இளைஞனின் கையைப்பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்து அழுது நிற்கும் காட்சிகளும் இருக்கின்றன.
தொழிலுக்கே உரிய வயது வராத சிறுமிகளை மூளைச்சலவை செய்து ஆடைத்தொழிற்சாலைக்கு அழைத்து வரும் நிறுவன அதிகாரிகளாலேயே இந்த நிலைமை உருவாகின்றது.
ஆறு நாட்களும் கார்மென்டிற்குள் (ஆடைத்தொழிற்சாலை ) அடைத்து வைக்கப்படுகின்ற யுவதிகள் ஞாயிறு தினங்களில் சற்று வெளியில் செல்வதென்றால் அங்கு இளைஞர்களின் கெடுபிடிகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் விரும்பியோ பல சந்தர்ப்பங்களில் விரும்பாமலோ மேற்படி யுவதிகள் இவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. இத்தகைய நிலைமைகள் தொடர்பில் தொழில் தரு நிறுவனங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிற அதேவேளை பெற்றோரே விழிப்படைய வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களை தோட்ட நிர்வாகிகள் எப்படி நடத்துகின்றனரோ அதேபோன்று தான் ஆடைத்தொழிற்சாலைகளில் தொழில் புரியும் யுவதிகளும் தொழில் தருநர்களால் நடத்தப்படுகின்றனர்.
எனவே தலைநகர் உட்பட நகர்ப்புறங்களில் ஆடைத்தொழிற்சாலைகள் தொடர்பிலும் அங்கு இளைஞர், யுவதிகளின் நிலைமைகள் தொடர்பிலும் கண்டறிவதற்கு தொழில் அமைச்சு முனைய வேண்டும். ஏற்றுமதித் துறையூடாக வருமானத்தை ஈட்டித்தருகின்ற ஆடைத்தொழில் தொழிலாளர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிகள் எந்தளவு தாக்கத்தை செலுத்துகின்றனர் என்றும் அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும


0 Comments