(இப்னு மாஜா)
கல்முனைப் பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களினாலும் நிலையத்தை நடாத்தும் ஆசிரியர்களாலும் பாடசாலைகளில் பலவிதமான நிர்வாகப்பிரச்சனைகள் அண்மைக்காலமாக நிலவி வருகின்றது.
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் வெளிவந்ததும் உயர்தர வகுப்புகளில் பயில்வதற்காக தமது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் முயற்சியில் பல ஆசிரியர்கள் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களுக்கும் கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்.
பாடசாலைகளில் உயர்தர வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆள்பிடிக்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது.பெற்றோர்களும் மாணவர்களும் எந்த பிரிவில் கல்வி கற்பது என்று தீர்மதனிப்பதற்கு முன்னராக தமக்கு வாசியான பகுதியினை தெரிவு செய்யுமாறு வலிறுத்தியும் வருகின்றனர்.
இதன்பின்னர் பாடசாலைகளில் வகுப்புகளில் தனது தனியார் வகுப்பிற்கு வராத மாணவர்மீது பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் தவணைப்பரீட்சைகளில் தனது தனியார் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு அதிக புள்ளிகளை வழங்கி மாணவர்களின் கவன ஈர்ப்பினை பெற்றுக் கொள்ளும் அதே வேளையில் தனது முறைப்படி விடையளிக்காத மாணவர்கள் பல வழிகளிலும் பழிவாங்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகமும் பலவிதமான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
பரீட்சை முடிவுகள் வெளிவந்ததும் பரீட்சை முடிவுகளுக்கு தனது தனியார் நிறுவனம் தான் காரணம் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பரீட்சை முடிவிற்கும் எந்தவித தொடர்புமில்லை என அறிக்கைகளையும் விட்டு கல்வியை வியாபாரப் பொருளாக்கி வருகின்றனர்.
இதே வேளையில் தரம் 1 தொடக்கம் க.பொ.த.சாதாரணதரம் வரை தனியார் கல்வி கடைகளில் கல்வியை வியாபாரம் செய்யும் சில ஆசிரியர்கள் மாணவர்கள் அதிகம் கல்வி கற்கும் பாடசாலைகளில் கற்பிக்க ஆசைப்படுவதுடன் அம்மாணவர்களை தமது கல்வி நிறுவனத்திற்கு அழைப்பதில் பல யுக்திகளை பாடசாலை நேரத்தில் கையாளுகின்றனர். மாலை வேளையில் , விடுமுறை தினங்களில் மற்றும் சனி ஞாயிறு தினங்களில் பாடசாலைகளில் மேலதிக வகுப்பு வைக்கும் ஆசிரியர்களுடனும் அப்பாடசாலை அதிபர்களுடனும் தொடந்தும் பிரச்சினைக்குரியவர்களாகவே இவ்வாசிரியர்களும் தனியார் கல்வி நிறுவனங்களை நடாத்தி செல்வோரும் இருந்து வருகின்றனர்.
இவ்வாசிரியர்கள் தான் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளில் பிந்தி வருவதும் வேளைக்கு முன் பாடசாலையை விட்டு வெளியேறுவதும், பிந்திய வேளையில் பாடம் இருந்தால் அரைநாள் விடுமுறையில் செல்வதும், பாட வேளைக்கு தாமதித்து செல்வதும் பாடம் முடிவடைவதற்கு முன்னர் வகுப்புகளை விட்டு வெளியேறுவதும், பாடசாலைகளில் மாணவர்களுக்கான நிகழ்வுகள் எதுவும் இடம்பெற்றால் அதில் கலந்து கொள்ளாமலும், பாடசாலை நிர்வாகத்திற்கு ஓத்துழைப்பு வழங்காமலும் இருந்து வருகின்றனர். பாடசாலை மாணவர்களை தமது பணத்திற்காகவும் உழைப்புக்காக மட்டும் பயன்படுத்தும் இவர்கள் மாணவர்களின் பரீட்சை முடிவுகள் வந்தால் அவர்களால் பாடசாலைக்கு நற்பெயர் உண்டாகிவிடும் என்று விமர்சனமும் செய்து வருகின்றனர். இவ்வாறான ஆசிரியர்கள் மீது பெற்றோர்களும் சமுகமும் வழிப்பாக இருக்க வேண்டும்.
பாடசாலைகளில் தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களே அதிகளவிலான லீவுகளை பெற்றுவருகின்றனர். ஆனால் அவர்கள் கல்வி கற்பிக்கும் கல்விக்கடைகளுக்கு வேளைக்கு சென்று விடுகின்றனர். பாடசாலைகளில் தனியார் கல்வி கடைகளில் கல்வியினை வியாபாரம் செய்பவர்களுக்கிடையில் தினசரி பிரச்சனைகளும் இடம்பெற்று வருவதாக கல்முனை பிரதேச முன்னணி பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.


0 Comments