Subscribe Us

header ads

பாகிஸ்தானுடன் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து


இலங்கை,  பாகிஸ்தானுக்கிடையில் போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது உட்பட இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் நேற்று ஆறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக் குழுவினருக்கும் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷரீப் தலைமையிலான பிரதிநிகளுக்குமிடையிலேயே இவ் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
அணு சக்தி, கப்பல் துறை, அனர்த்த முகாமைத்துவம், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல், விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய துறைகளிலேயே இவ் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
நேற்றுக் காலை பாகிஸ்தான் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வுக்கு இலங்கை சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாகிஸ்தான் சார்பில் பிரதமர் நவாஸ் ஷரீபும் தலைமை தாங்கினர்.
அணுசக்தி துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார ஆலோசகர் சர்தாஜ் அஸீஸும் கைச்சாத்திட்டனர்.
அத்துடன் போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்துவது தொடர்பான உடன்படிக்கையிலும் மேற்படி இருவரும் கைச்சாத்திட்டனர்.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகமும் சர்வதேச உறவுகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவனமும் கல்வி ரீதியான விடயங்களில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மத் ஆஸிப் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
விளையாட்டுத் துறையில் இரு நாடுகளும் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான உடன்படிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாகிஸ்தான் மாகாணங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சர் ரியாஸ் ஹுசைன் பிர்ஸாதா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
கப்பல் துறை வியாபாரத்தில் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனமும் பாகிஸ்தான் தேசிய கப்பல் கூட்டுத்தாபனமும் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான உடன்படிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாகிஸ்தான் கப்பல் துறைமுக அமைச்சர் கம்ரான் மிக்கேல் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
அனர்த்த முகாமைத்துவத்தில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கான உடன்படிக்கையில் இலங்கை சார்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாகிஸ்தான் சார்பில் காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சர் முஸாஹிதுல்லாஹ் கான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இந் நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இராணுவ தளபதி லெப்டின்ன்ட் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே. கிரிஷாந்த டி சில்வா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி சித்ராங்கனி வாகிஸ்வரா, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர், பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினரும் பாகிஸ்தான் அமைச்சர்கள், உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments