இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்களை இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் தெரிவு செய்யவுள்ளது. இதனை முன்னிட்டு தகுதிவாய்ந்தவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பின்களம், மத்திய களம், கோல் போடும் நுட்பத்திறன் ஆகிய நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என சம்மேளனத்தின் இடைக்கால நிர்வாக சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் உடற்கூற்று பயிற்றுநர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இவ் வருடம் நடைபெறவுள்ள 16 நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை அணிக்கு பயிற்றுநர்களைத் தெரிவு செய்ய சம்மேளனம் தீர்மானித்துள்ளது. உரிய தராதரங்களைக் கொண்ட பயிற்றுநர் தங்களது விண்ணப்பங்களை செயலாளர், இடைக்கால நிர்வாக சபை, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம், இல. 33 டொரிங்டன் ப்ளேஸ், கொழும்பு –7 என்ற முகவரிக்கு ஏப்ரல் 18ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளை முன்னிட்டு இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு அதி சிறந்த வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான திறமைசாலிகளை இனங்காணும் தேடல் நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளன.
வட மாகாணத்திற்கான தேர்வுகள் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 11ஆம் திகதி காலை 7.30 மணி முதல் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுமிருந்தும் உயரமான சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனைகளை இத் தேர்வில் கலந்துகொள்ள வருகை தருமாறு இலங்கை வலைப்பந்தாட்ட
சம்மேளன இடைக்கால நிர்வாகசபை கோரியுள்ளது.
இதேவேளை கண்டி, காலி, பொலன்னறுவை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 18ஆம் திகதியும் கொழும்பு மாவட்டத்தில் 19ஆம் திகதியும் தேர்வுகள் நடைபெறவுள்ளன.


0 Comments