அரச அதிகாரிகள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்ய முடியுமென்று வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார்.
கல்குடா தொகுதியிலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் “திவிநெகும திட்டத்தினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தி” என்ற தலைப்பிலான மாநாடு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்க அதிகாரிகள் நேரத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு சில அதிகாரிகள் நேரத்தை மதிக்கின்றார்களா என எனக்குத் தெரியவில்லை. அதனால் அவர்கள் அவர்களையே ஏமாற்றிக் கொள்கின்றார்கள். நாம் அனைவரும் மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் நியமிக்கப்பட்டுள்ளோம்.
அதனால் நேர முகாமைத்துவத்தை மதித்து மக்களுக்கான சேவைகளைச் செய்ய வேண்டும். நமக்காக மக்கள் அல்ல மக்களுக்காகத்தான் நாம் நியமிக்கப்பட்டுள்ளோம் என்ற மனநிலை நம் மத்தியில் வர வேண்டும் என்றார்.
திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் பி.குணரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற மாகாநாட்டில் வாகரை, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான் ஆகிய ஐந்து பிரதேச செயலப் பிரிவுகளைச் சேர்ந்த திவிநெகும தலைமை முகாமையாளர்கள் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், பிரதியமைச்சரின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.





0 Comments