Subscribe Us

header ads

இரு நாட்டு உறவு இமயமலையை விட உயர்ந்தது: பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சீன அதிபர் பேச்சு


பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் பேசினார். அப்போது அவர், “இரு நாட்டு உறவு, இமயமலையை விட உயர்ந்தது” என பெருமிதத்துடன் கூறினார்.        

சீன அதிபர் ஜின்பிங் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் பாகிஸ்தான் வந்தார். நேற்று அவர் அந்த நாட்டின் பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பேசினார். பேச்சின் தொடக்கத்தில் அவர் சீனாவின் 130 கோடி மக்களின் சார்பில், பாகிஸ்தான் சகோதர மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார். தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது:-        

பாகிஸ்தானும், சீனாவும் சந்தித்த போராட்டங்கள்தான் அவற்றின் இதயங்களையும், மனங்களையும் ஒன்றிணைத்தன. பீஜிங்கும், சீனாவும் ஒருவருக்கு ஒருவர் மகத்தான ஆதரவாக இருந்து வருகிறோம். இந்த ஆண்டு நான் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப்பயணம் உங்கள் நாட்டுக்குத்தான். ஆனால் பாகிஸ்தான் எனக்கு அறிமுகம் இல்லாத நாடு அல்ல. தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் பாகிஸ்தான் முன்னணியில் நின்றுள்ளது. பாகிஸ்தானில் பழங்குடி பகுதிகளின் முன்னேற்றத்துக்கும், மறுகட்டுமானத்துக்கும் நாங்கள் உதவுவோம்.        

இந்தப் பயணத்தின்போது, நானும், ஜனாதிபதி மம்னூன் உசேன், பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரும், சீன, பாகிஸ்தான் உறவை எல்லா சூழலுக்கும் ஏற்ற கொள்கை ரீதியிலான கூட்டு உறவாக உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம்.        

பாகிஸ்தான் தனது இறையாண்மையை, பிரதேச ஒருமைப்பாட்டை, கண்ணியத்தை நிலை நிறுத்துவதற்கு கொண்டுள்ள உறுதியை நாங்கள் ஆதரிக்கிறோம்.        

பாகிஸ்தான்-சீன உறவு இமயமலையை விட உயர்ந்தது. பெருங்கடலினும் ஆழமானது. தேனினும் இனிமையானது. சீன மக்கள், பாகிஸ்தான் மக்களை நல்ல நண்பர்களாக, நல்ல கூட்டாளிகளாக, நல்ல சகோதரர்களாக கருதுகின்றனர். சீனாவை முதன்முதலாக ஒரு நாடாக அங்கீகரித்த நாடுகளில்  ஒன்று பாகிஸ்தான். சீனாவுடன் முதலில் தூதரக உறவு வைத்துக்கொண்ட முதல் இஸ்லாமிய நாடும் பாகிஸ்தான்தான். பிராந்திய, சர்வ தேச விவகாரங்களில் இரு நாடுகளும் போர்த்திறம் சார்ந்த தகவல் பரிமாற்றங்களை பராமரிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை சீனா ஆதரிக்கிறது.        

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், மரபுசாரா அச்சுறுத்தல்களை சந்திப்பதிலும் பாகிஸ்தானின் திறனை சீனா உயர்த்தும்.   இவ்வாறு அவர் கூறினார்.        

முன்னதாக ஜின்பிங், பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அவரை பிரதமர் நவாஸ் ஷெரீப், சபாநாயகர்  ஆயாஸ் சாதிக், செனட் சபை தலைவர் மியான் ராஸா ரப்பானி வரவேற்றனர். பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பேசிய முதல் சீன அதிபர் ஜின்பிங்தான்.         

ஜின் பிங்கிற்கு நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘நிஷான் இ பாகிஸ்தான்’ விருதை ஜனாதிபதி மம்னூன் உசேன் வழங்கி சிறப்பித்தார்.         

மேலும் சீன அதிபரை கவுரவித்து அவர் மதிய விருந்தும் அளித்தார். இதில் பிரதமர் நவாஸ் ஷெரீப், மந்திரிகள், மாகாண முதல்-மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments