7 ஆண்டுகளுக்கு முன்புவரை புகைப்படம் என்பது சுபகாரியங்களை படமாக்கி, ப்ரிண்ட் எடுத்து ஃப்ரேம் போட்டு, அதை ஆவணமாக்கி கொள்வதாக இருந்தது.
அவ்வபோது சுபகாரிய போட்டோ ஆவணங்களை குடும்பம் சகிதமாக கண்டுகளிப்பது, மகிழ்ச்சியான தருணங்களை அசைபோடுவதுமாக இருந்தது.
ஹை5, ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்கள் வந்ததும் டிஜிட்டல் போட்டக்களால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
நாகூர் திருவிழாவில் தொலைந்து, அழுது திரிந்துகொண்டிருந்த குழந்தையை படமெடுத்து பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் பரவ விட்டதின் மூலம் ஓரிரு மணித்துளிகளில் அக்குழந்தை குறித்த ஊர் பின்னணி தகவல்கள் அறியப்படுவதும், குழந்தையை அதன் பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்படுவதும் ஆரோக்கியமானது! பாராட்டதக்கது!!
நேற்று நடந்த கோர விபத்தில் பள்ளபட்டியை சேர்ந்த 9 ஆலிம்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த கோர சம்பவம் நடந்தது குறித்து, மார்க்க அறிஞர்கள் 9 பேர் மாண்டது குறித்து நான் உள்பட, நம்மில் பலருக்கு பேஸ்புக் மூலமாகவோ, அல்லது இன்னபிற சமூக வலைத்தளங்களின் மூலமாகவோ தெரிய வந்திருக்கக் கூடும்.
நொடிப்பொழுதில் அந்த குறிப்பிட்ட செய்தி பட்டி, தொட்டியெங்கும் சென்றடைய செய்தது ஆரோக்கியம் தான் என்றாலும்…
செய்தியை பரப்புகிறேன் என்ற பெயரில் – கோர சம்பவத்தில் விபத்துக்குள்ளாகி ரத்த வெள்ளத்தில் கிடந்த (ஜனாசா) உடலை படமெடுத்து பேஸ்புக்கில் போட எப்படி முடிகிறது…?
விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து நசுங்கிய உடலை தீயணைப்பு படையினர் பிய்த்து எடுக்கும் படமும் சமூக வலைதளத்தில் வலம் வந்தது. இப்படியான காட்சிகளை இவர்களால் எப்படி படமெடுத்து பேஸ்புக்கில் போட முடிகிறது?
*மரணித்தது அவர்கள் தந்தையாகவோ, சகோதரனாகவோ இருந்தாலும் கூட இவர்கள் இப்படி படமெடுக்க முடியுமா? பேஸ்புக்கில் பதிவேற்ற முடியுமா?*
பேஸ்புக்கில் பதிவேற்றப்படுகிற படங்கள் ஐந்து ஆண்டுகள் கழித்தும் கூட வலம் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது!
நேற்று நடந்த கோர விபத்தில் மாண்டவர் பலர் இளைஞர்களே! அவர்களில் ஒருவர் மனைவி மறுமணம் முடிக்கிறார் என வைத்துகொள்வோம். ஒருவேலை அந்த பெண் நான்கைந்து ஆண்டுகளுக்கு பின் பேஸ்புக்கில் இப்படங்களை பார்க்க நேர்ந்திடாதா? அப்படி பார்க்க நேரிட்டால் அப்பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? எத்தனை நாட்களுக்கு அந்த பாதிப்பு இருக்கும்? யோசிக்க வேண்டாமா?
செய்தியை மட்டுமோ, அல்லது வாகன படங்களுடன் செய்தியை பரப்பினால் போதாதா? அரசு மருத்துவமனை பிணவறையில் கிடக்கும் ஆலிம்களின் ஜனாசா படம் போட்டாக வேண்டிய அவசியம் என்ன?
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் கற்பழித்து கொள்ளப்பட்ட முஸ்லிம் சிறுமியின் தந்தையை நேரில் பார்க்க சென்ற நண்பர் ஒருவர் – சந்திப்பை படமெடுத்து, “ஆறுதல்…” என்ற தலைப்போடு பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.
இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன?
ஒரு தந்தையாக தான் செய்வது சரியா என பரிசோதித்து பார்க்கவேண்டாமா? இதுமாதிரியான படங்களை பதிவேற்றும், பரப்பும் சகோதரர்களே! விபத்துக்குள்ளானோரின் மனைவியின் இடத்திலிருந்து, பெற்றோர்களின் இடத்தில் இருந்து யோசித்துப்பாருங்கள்! அதன் வலி புரியும்!!
-மு.இ.நஸீருத்தீன்


0 Comments