கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்
அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும்
பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், ஆய்வாளருமான அல்ஹாஜ்
எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் (74) இன்று (27.04.2015) காலமானார்கள்.
அன்னார் காலமானதை கேள்வியுற்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது அனுதாப செய்தியினை தெரிவித்துள்ளார்.
இலக்கியம்,
கலை, கல்வி, கலாசாரம் முதலிய பல துறைகளில் புத்தகங்களையும், ஆக்கங்களையும்
வெளியிட்ட அன்னார், அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான
நூலகத்திற்கு தனது சேகரிப்புக்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக சமூக மற்றும் தேசிய உணர்வுடன் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பாடத்தில் சிறப்புப் பட்டமும்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறை முதுமாணிப் பட்டமும் பெற்றார்.
அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை டிப்ளோமா பட்டமும்,
ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை சார்
பயிற்சியையும், பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான கல்வியையும் பெற்றுக்
கொண்டார்.
தொழில்
ரீதியாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதனாசிரியராகவும்,
'அருணாசலம் ஹோல்' உதவி விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றிய பின்பு
படிப்படியாக உயர் பதவிகளை வகிக்கலானார். கல்லூரி ஆசிரியராக, அதிபராக,
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக, பிரதம
கல்வி அதிகாரியாக, பரீட்சைத்திணைக்கள உதவி ஆணையாளராக, மட்டக்களப்பு
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்முதலாவது பதிவாளராக, முஸ்லிம் சமய, கலாசார
அமைச்சின் செயலாளராக, கல்வி, கலாசார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக
செயலாளராக, கலாசார, சமய விவகார அமைச்சின் ஆலோசகராக.... இப்படிப் பல்வேறு
உயர் பதவிகளை வகித்துத் ஓய்வுபெற்றார்.
அவரது குற்றங் குறைகளை மன்னித்து, நல்லமல்களை அங்கீகரித்து மேலான சுவனத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் பரிசளிப்பானாக!
Cader Munawer


0 Comments