Subscribe Us

header ads

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள தாதியர் கற்கை நெறி (படங்கள் இணைப்பு)

பி. முஹாஜிரீன்


தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள தாதியர் கற்கை நெறி தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (05) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

சுகாதார இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹஸன் அலியின் அழைப்பின்பேரில் கலந்து கொண்ட நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம். முகம்மது இஸ்மாயில், பதில் பதிவாளர் மன்சூர் ஏ. காதிர் உட்பட பீடாதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.

சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் தாதியர் கற்கை நெறியின் அவசியமும் சர்வதேச ரீதியில் அதன் தேவைப்பாடு மிக முக்கியமாக உணரப்பட்டுள்ள விடயமும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், இப்பல்கலைக்கழகத்தின் ஆறாவது பீடமாக இவ்வாறான தாதியர் பயிற்சிக்கான ஒரு பீடத்தை ஆரம்பிப்பது தொடர்பாகவும், இது தொடர்பான விடயங்களில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுடன் அது தொடர்பாக பேசி இதற்கான மேல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் ஹக்கீம் உறுதியளித்தார்.

இப்பிராந்தியத்தில் பல இடங்களில் தள வைத்தியசாலைகள் அமைந்துள்ளதனால், தாதியர் பயிற்சி நெறி ஆரம்பிப்பதானது இப்பீடத்தின் உருவாக்கத்திற்கு வலுவூட்டுவதாகவும் இதற்குச் சாதகமான நிலைமை காணப்படுவாதாகவும் சுகாதார அமைச்சின் பயிற்சிகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் திரு அல்விஸ், தாதிப்பயிற்சிப் பாடசாலைகளின் பணிப்பாளர் திருமதி சிறிவர்த்தன ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

இவ்விடயத்தை மிகக்கூடிய விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான குழுவொன்றை அமைக்கும் பொறுப்பு உபவேந்தரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைளை உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவை சந்தித்து கலந்துரையாட வழிவகுப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் இங்கு தெரிவித்தார்.




Post a Comment

0 Comments